Friday, November 17, 2017

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!



ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 14, 2017

குழந்தைகள் தினப் பாடல்



சின்னஞ் சிறுக்குழவி
  சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
  களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
  அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
   தாலாட்டு பாடுவளாம்

பூவின் இதழ்போல
   பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
   நறுந் தேனைதடவிட
பாவின் பண்போல
   பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
   களிப்பாயே தேன்சுவையில்

கண்ணே நீ உறங்கு
  கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
  வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்காமல்
  வரைந்த நல்ஓவியமே
மண்ணை வளமாக்கும்
   மழைத்துளி யேநீயுறங்கு

கொஞ்சும் மழலைக்கோர்
   குழல்இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லியசீர்
    பாதத்தில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்ன மனம்
    அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந்திடுவாள்
   நீவளரும் வரையவளே

       புலவர் சா இராமாநுசம்

 

Monday, November 13, 2017

ஒன்றே செய்யினும் நன்றே செய்க நன்றே செய்யினும் இன்றே செய்க!



மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர்!
ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும்
பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்
அற்றார் அழிபசி தீர்தல் இன்றே
பெற்றான் பொருளை வைப்புழி என்றே
ஐயன் வள்ளுவர் அறைந்தார் அன்றே
பொய்யில்!உண்மை! உணர்வோம் நன்றே!

முன்னோர் உரைத்த முதுமொழி தன்னை
பொன்னே போல போற்றுவோம்! அன்னை
தன்நிகர் இல்லாத் தமிழ்மொழி போற்றி
இன்முகம் காட்டி இன்சொல் சாற்றி
மாற்றார் ஆயினும் மதித்து நடக்கும்
ஆற்றல் கொள்வீர்அன்பால் வெல்வீர்
இயற்கை தன்னின் இயல்பைக் காப்போம்
செயற்கை செய்யும் சிதைவை தடுப்போம்!

நல்லன கண்டு நாளும் செய்வோம்!
அல்லன செய்ய அஞ்சின்! உய்வோம்!
உடுக்கை இழந்தவன் கைபோல் சென்றே
இடுக்கண் களைவது நட்பாம் என்றே
வாழின் வையம் வாழ்த்திடும்! ஆமே!
சூழும் பெருமையும் வந்திடும்! தாமே!
கண்ணியம் கடமை கட்டுப் பாடனென
அண்ணா வழியில் அனைவரும் வாழ்வோம்



இப்படி வாழின் என்றுமே பெருமை
ஒப்பிட இயலா! உரைப்பதோ அருமை!
எப்படி யேனும் வாழ்ந்தால் சரியென
தப்படி வைத்தால் தண்டணை உரியன
அறிவீர்! தெளிவீர்! ஆவன உணர்வீர்!
பெறுவீர் வெற்றி!பேதமை அகற்றி
ஒன்றே செய்யினும் நன்றே செய்க
நன்றே செய்யினும் இன்றே செய்க!

                  புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...