Friday, October 9, 2015

இடையில் இருப்பது ஒருநாளே-காண எழுமீன் ! பதிவர் திருநாளே!





இடையில்  இருப்பது  ஒருநாளே-காண
      எழுமீன்  !  பதிவர்  திருநாளே!
தடையில் சிறந்த   ஏற்பாடே –இன்னும்
       தயக்கம்  எதற்கோ  புறப்பாடே!
படையில்  சிறந்த   படையாக –புதுகை
     பதியில்   பதிவர்  நடையாக!
அடைமழை  போன்றே  வருவீராம்-உலகம்
      அறிந்திட !  வாய்ப்பு  தருவீராம்!

மேலும்  எழுதிட  வேண்டாமே –இந்த
     மேதினி  அறிந்திட  ஈண்டாமே!
நாளும்  வலைவழி  சந்தித்தோம் நாட்டின்
       நலமது  ஒன்றே  சிந்தித்தோம்!
தோளும்  தோளும் தழுவிடவே- நம்முள்
      தோழமை  உணர்வு   பெருகிடவே!
ஆளும் அரசுகள்  உணரட்டும்-பொங்கும்
      அலையென பதிவர்கள்  திரளட்டும்!

புலவர்  சா இராமாநுசம்

Wednesday, October 7, 2015

திக்கெட்டும் தெரிந்தவரே திண்டுக்கல் தனபாலன்-என்றும் தித்திக்க பழகுமவர் தேனிமை குணபாலன்!



திக்கெட்டும் தெரிந்தவரே திண்டுக்கல்  தனபாலன்-என்றும்
      தித்திக்க பழகுமவர் தேனிமை குணபாலன்!
இக்கட்டும் வலைதன்னில் வந்ததெனில்  எவரும் -தேடி
      இவரிடமே வருவாராம்!   சரிசெய்வார்  இவரும்

வலைச்சித்தர் இவரென்றே வலையுலகம் போற்றும்-தக்க
      வல்லமையே மிக்கவராய் என்றென்றும்  ஆற்றும்!
நிலைச்சித்தர் ஆவாராம் நிகரில்லா  பணிகள் –இன்றும்
      நித்தமவர் செய்வதுவும் முத்துநிகர் அணிகள்!

இரவுபகல்  பாராது  பதிவர்களைத்  தொகுத்தும்-அதனை
       இணையவழி  முறையாக நாள்தோறும்  பகுத்தும்!
வரவுகளை  தவறராமல்  வரிசைபடி வைத்தும் –புதுகை
        வலைப்பதிவர்  சந்திப்பு   வெற்றிபெற உழைத்தும்!

அப்பப்பா!  இவர்தொண்டே ஒப்பில்லா ஒன்றே-இதனை
      அனைவருமே  அறிவார்கள்! செப்பப்பா  நன்றே
தப்பப்பா! பாராட்டத்  தவறுவது   என்றே – நானும்
       தந்துவிட்டேன்  இக்கவிதை !ஏற்பீரே! இன்றே!

புலவர்  சா  இராமாநுசம்

Monday, October 5, 2015

திட்டமிட்டு செயல்படுத்தும் முத்து நிலவன் திறன்மிக்கார் முத்தமிழைக் கற்ற புலவன்!



திட்டமிட்டு செயல்படுத்தும் முத்து நிலவன்
திறன்மிக்கார் முத்தமிழைக் கற்ற புலவன்
இட்டபடி நடவாமல் பலரைக் கலந்தே
இணையவழி வலைதன்னில் அதனைத் தந்தே
பட்டறிவு மிக்கவராய் பணிகள் ஆற்ற
பதிவர்களே பாராட்டி அவரைப் போற்ற
தொட்டபணி தொய்வின்றி நடக்கப் பாரீர்
தோழர்களே திரளாக புதுகை வாரீர்


பம்பரம்போல் அவர்பின்னே இளையோர் நன்றே
பதிவர்களை வரவேற்க படைபோல் நின்றே
அம்மம்மா பணியாற்றும் அழகே போதும்
அவர்வாழ்க! தமிழ்வாழும்! நிகரில் ஏதும்
செம்மொழியாம் நம்மொழிக்கு மகுடம் இதுவே
செப்புவதோ! புதுக்கோட்டை வருதல் அதுவே
நம்மவரே இதுவொன்றே நமக்கு நாமே
நலம்தருமே ! வளம்வருமே! உண்மை ஆமே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...