Friday, October 26, 2012

ஊற்றாகிப் போயிற்றே ஊழல்தான் ஆயிற்றே காற்றாக எங்கெங்கும் காண்கிறதே




ஊற்றாகிப் போயிற்றே  ஊழல்தான் ஆயிற்றே
காற்றாக எங்கெங்கும் காண்கிறதே மாற்றாக
ஏதும் வழியின்றி ஏங்குகின்ற ஏழைக்கே
மோதும் துயர்தான் துணை

இன்னாரென் றில்லை! எவரென்றும் பேதமில்லை!
ஒன்னாராம்  என்பதில்லை! ஒன்றேதான் தன்னாலே
வாய்த்த வழியெல்லாம்  வாங்குவதே நோக்கமெனில்
காய்த்த மரத்திற்கே கல்லு

கணகிட்டே  காசுதனைக் கையூட்டாய்  கேட்டே
சுணக்கமின்றி செய்வதாக சொல்லி குணக்குன்றாய்
கூசாது வேடமிட்டே கூறுகின்றார் அந்தந்தோ
பாசாங்கே செய்வதவர் பண்பு

அஞ்சாமல் தேர்தலிலே அள்ளியள்ளி  செல்வத்தை
பஞ்சாக விட்டாரே பார்தோமே நெஞ்சார
எண்ணிப்பார்ப் பீரா எவர்மீதே தப்பென்றே
உண்ணினால் வந்திடுமே உண்மை

நோட்டுக்கே  வாக்குதனை நோகாமல் கொண்டவரும்
நாட்டுக்கே  வந்தாரே நாடாள !கேட்டுக்கே
ஏற்ற  வழிதன்னை ஏற்படுத்தித் தந்தோமே
மாற்றம் வருமா மதி

எந்தத் துறைதன்னில் இன்றில்லை ஊழலென்றே
வந்த நிலையுண்டா?வாய்ப்புண்டா! தந்தவரே
ஓங்கி ஒலிக்கின்றார் ஊழல் ஒழிகயெனும்
பாங்கேதான் இங்கே பகை



               புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 24, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!



எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!




ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

    திருமிகு இரஜினி பிராதாபும், வேறு சில உறவுகளும்
வெண்பா வேண்டுமென விரும்பி கேட்டதால் இன்று, இது
மீள் பதிவு. விரைவில் புதியன வரும்.
                                  புலவர சா இராமாநுசம்



Monday, October 22, 2012

இருப்பது எத்தனை நாளே! –அதனை இயம்பிட இயலா! வாளே




முகமது அறியா நிலையில் வாழ்த்து
    மொழிந்திட எனது வலையில்
அகமது கொண்டே வந்தார் என்
   அகமிக மகிழத் தந்தார்!
இகபர இன்பம் பெற்றே நாளும்
    இன்றுபோல் என்றும் உற்றே!
செகமதில் வாழ்க நன்றும் அவர்
    சிறப்புற்று வாழ்க! என்றும்

பிறந்தநாள் இருந்த சுற்றம் விட்டுப்
    பிரிந்திட என்னை! மற்றும்
மறந்திட இயலா உறவே நாளும்
    மறுமொழி வழியாய் வரவே
சிறந்தநல் வாழ்வே பெற்றேன் தூய
    செந்தமிழ்  தன்னைக் கற்றேன்!
திறந்தநல் மனமே  கொண்டேன் வந்த
     தீமைகள் ஓடக் கண்டேன்!

தென்னையாய் வாழ வேண்டும் வாழ்வே
     தெளிந்தநல் நீராய் யாண்டும்!
பொன்னெனப் போற்றப் பலரும் எழில்
     பொங்கிடப் பூத்த  மலரும்
கன்னலின்  சுவையே போன்றும் முக்
    கனிதரும் இனிமை யான்றும்
என்னையே மாற்றிக் கொள்வேன்! நான்
    என்றென்றும் நன்றி சொல்வேன்!

இருப்பது எத்தனை  நாளே! அதனை
    இயம்பிட இயலா! வாளே
அறுப்பது நமது உயிரே என
    ஐயனும்  மொழிந்த  உரையே!
பொறுப்பது கொண்டே எதிலும் சற்று
   புன்னகை பூக்க பதிலும்
வெறுப்பது இன்றி சொல்வீர்-செய்யும்
   வினையெலாம் நீரே வெல்வீர்!

                    புலவர் சா இராமாநுசம்
   


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...