அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
  அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
   பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!
பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
   படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
   தொண்டுமே செய்து  வாழ்வதும் நன்றே!
பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
   பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
   இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!
கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
   கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
   மனித நேயத்தை மறவாது போற்றலாம்!
சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
  சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
   குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!
பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
   போற்றிட வாழ்வீர் மனிதரே!!  அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!
                               புலவர் சா இராமாநுசம்

