Friday, October 27, 2017

எம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே !



எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 24, 2017

பல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே !



திரைகடல் ஓடு என்றாரே
திரவியம் தேடு என்றாரே
குறையிலா வழியில் அதைப்பெற்றே
கொள்கையாய் அறவழி தனைக்கற்றே
நிறைவுற அளவுடன் நீதிசேர்ப்பீர்
நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப்பெறுவீர்
கண்ணியம் கடமை எனவாழ்வீர்


வையம் தன்னில் வாழ்வாங்கும்
வாழின்! வாழ்வில் பெயரோங்கும்
செய்யும் எதையும் தெளிவாகச்
செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
போலியாய் வேடம் போடாமல்
ஐயன் வழிதனில் செல்வீரே
அன்பால் உலகை வெல்வீரே!

தீதும் நன்றும் பிறர்தம்மால்
தேடி வாரா! நம்மாலே
நோதலும் தணிதலும் அவ்வாறே
நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
சாற்றிய வள்ளுவர் சொல்ஒன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
இனிதாம் அதுவும் மிகஎன்றார்!

எல்லா மக்களுக்கும் நலமாமே
என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரெனப் புகழ்பெற்றே
நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
பழகிட வேண்டும் அன்பாலே

புலவர் சா இராமாநுசம்

Sunday, October 22, 2017

முகநூல் பதிவுகள்

பிறவிக் குருடன் அப்படியே வாழ்ந்து விட்டால் அதிக துயரமில்லை!பழகி விடும்
ஆனால், அவன் பார்வைப் பெற்று சிலகாலம் உலகைப்
பார்த்து மகிழ்ந்த நிலையில் மீண்டும் பார்வையை
இழந்து விட்டால் ,அவன் பெருகின்ற துன்பத்திற்கு அளவே இல்லை! அதுபோலவே வாழ்க்கையில் நாமக்கு வரும் சில நிகழ்வுகள் இஅமைந்நு விடுகின்றன!

நடுத்தர மக்கள் வாழும் இடங்களில் கேட்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம் இந்த ஆண்டு மிக மி்க க் குறைவு காரணம்
பீன்ஸ் விலைமட்டுமே கிலோ முன்னுறு(300) என்றால்
பட்டாசா வெடிக்கும் உள்ளம்தான் வெடிக்கும்

உறவுகளே!
மீன் குட்டிக்கி நீந்தக் கற்றுத்தர வேண்டுமா ? என்று
கேட்கும் மனிதன்தானே தன் குழந்தை நடக்க நடைவண்டி சொய்துத் தருகிறான் !இப்படிதான் வாழ்கையில் சிலர் ,சிலநேரங்களில் பிறருக்கு ஒதிவிட்டு தமக்கு வரும் போது அதனை மாற்றிக் கொள்வார்கள்

குளத்திலே நீரின் அளவு உயர உயர அக் குளத்தில் உள்ள நீராம்பலும் தாமரையும் அதோடு உயரும்! அது
போல ஒருவனது அறிவும் , அவன் கற்ற நூலுக்கு ஏற்ப
உயரும் என்பதாம்

ஒரு பழமொழி சொல்வாங்க!
கம்புக்கு களை வெட்டனாமாதிரி, தம்பிக்கு பொண்ணுபாத்தமாதிரி ன்னு சில செய்திகளை கிராமத்திலே விமர்ச்சிப்பாங்க அதுபோல சன் டிவி
விநாயகர் தொடரில் போட்டிகளை தினகரன் செய்தித்
தாளோடு இணைத்து அதன் விற்பனையை அதிகரிக்க
ஆவன செய்துள்ள பத்திசாலி தனத்தை பாராட்டத்தான்
வேண்டும்!வேறென்ன சொல்ல


தம்பி , விஜய் டிவியிலே வந்தா
அண்ணன் , சன்டிவியிலே வருகிறார்! போட்டி அண்ணன்
தம்பிக்கு இடையேவா!அல்லது டிவிகளுக்கு
இடையாவா! எல்லாம் பணம் படுத்தும் பாடு!
ஆண்டவனையும் விட்டுவைக்க வில்லை


மைய, மாநில அரசுகள் , திட்டங்கள் தீட்டுவது நாட்டு
மக்களின் நன்மைக்கே என்பது தவறல்ல ! ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல ! அதனைஏதோ தங்கள் மானப் பிரச்சனை யா்க எண்ணுவது தான் தவறாகும் 


 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...