Saturday, May 21, 2011

இறுதி மூச்சுள்ளவரை...

இறுதி முச்சு உள்ளவரை-நம்
இதயம் எண்ணம் எண்ணும்வரை
உறுதி நீயும் கொள்வாயா-தனி
ஈழம் தானென சொல்வாயா
குருதிசிந்த கணக் கற்றோர்-அங்கே
குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
இறந்தோர் தம்மை மறப்பாயா

முள்ளி வய்கால் படுகொலையை-நம்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
சொல்லி ஒன்றாய் நம்மவரை-உடன்
சேரச் செய்தே அறப்போரை
ஒல்லும் வகையெலாம் சொய்வோமே-இந்த
உலகம் உணர உய்வோமே
தள்ளி நின்ற நம்மவரும்-தம்
தவறை உணரந்து வருவரே

அடங்கிப் போனோம் நாமன்றே-ஆளும்
ஆணவ ஆடச்சியை நாம்வென்றே
முடங்கிப் போக வைப்போமே-இறுதி
மூச்சையும் பணயம் வைப்போமே
ஒடுங்க மாட்டோம நாமென்றே-அவர்
உணர எதிர்த்து தினம்நின்றே
நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
இறுதிமூச்சு உள்ள வரை

புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 18, 2011

பள்ளிக்கூடம்

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-தலைப்பூ
சொல்லிய வார்ப்புக்கே முதல்நன்றி

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியர்தாமே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட
கனிவாய் சொல்லல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பும மறைவது எந்நாளில்

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதர்
எனவே
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே

புலவர் சா இராமாநுசம்

ஊரறிய உலகறிய உண்மை தன்னை

   ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
      உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
   பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
     பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
   சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
     செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
   வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
     விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா

   தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
      தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
   இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
      இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
   கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
      காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
   பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
      பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
 
  ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
     ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
  ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
     உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
 கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
     கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
 பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
    பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே

 கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
    காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
 மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
    மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
 எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
    ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
 உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
    உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
                                                                                     
           புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...