Friday, May 31, 2013

முகநூலில் வந்த பதிவுகள்-2

1


ஆலமரத்தினுடைய விதையானது மிகமிகச் சிறியது. ஆனால் அது முளைத்து மரமாகி விரிந்து கிளைகளும் விழுதுகளுமாக பரந்து பலபேர் அதன் கீழ், தங்கி, இளைப்பாற இடமாகிறது. ஆனால் பனை மரத்தின் விதையோ மிகவும் பெரியது என்றாலும் அது முளைத்து மரமானால் அதன் , கீழ் எத்தனைப் பேர் தங்கி இளைப்பாற முடியும்?

எனவே நம்மில் , சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடுகளை எண்ணாமல் அவர்களின் செயலால் ஏற்படும் பயன்களைக் கருதியே முடிவு செய்தல் வேண்டும்
2
பொய்யுடை ஒருவன் சொல்வன் மையால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே!

பொய் பேசும் ஒருவன் தான் சொல்லும் திறமையால் அவன் சொல்லும் பொய், உண்மைபோலவே தோன்றும்

மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையினால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே!

உண்மை பேசும் ஒருவன் பேசும் திறம் இல்லாமையால் அவன் கூறும் உண்மையும் பொய்போலத் தோன்றும்
3
ஒரு நாளைக்கு உண்பது ஒரு நாழி அரிசி சோறாகும்! உடுத்திக் கொள்வது நான்கு முழத் துணியாகும்! ஆயினும் நாம் மனதில் சிந்தித்து எண்ணுவது எண்பது கோடியாகும். இதை அறியாது அறிவுக் கண் மூடி வாழ்கின்ற குடிமக்களின் வாழ்க்கையானது எப்பொழுது வேண்டுமானலும் உடைந்து போகக்கூடிய மண்ணால் ஆன
பாத்திரத்துக்கு ஒப்பாகி சாகும்வரை துன்பம் தரும்!

                      புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, May 28, 2013

சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -பலனின்றி சுருண்டது அந்தோ பசி யாலே !



கோடைக் காலம் வந்து துவே -எங்கும்
கொளுத்திட  வெய்யில்  தந்த துவே !
ஆடை முழுதும் நனைந் திடவே -உடல்
ஆனதே குளித்த தாய் ஆகிடவே !
ஓடை போல நிலமெல் லாம்- காண
உருவம் பெற்று வெடித் தனவே !
வீ(ட்)டை விட்டே வெளி வரவே -மனம்
விரும்பா நிலையை அனல் தரவே !

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே -அற
பசுமை முற்றும் நீங்கி டவே !
உச்சியில் வெய்யில் வந்த தெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்ட தனல் !
மூச்சை இழுத் தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயி லென -வெதும்பி
செப்பிட வார்தை செவி விழுமே !

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும் மண்ணில் !
எத்தனை வேகம் காட்டு கின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடு கின்றார் !
இத்தனை நாள் போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக் குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே !

வற்றிய நீர்நிலை இல் லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல் லாமே !
பற்றி எரிய முற்ற றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ் சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றி டவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசி யாலே !

புலவர் சா இராமாநுசம்

Monday, May 27, 2013

வீழும் கல்வி வளர்சிதான்-இது வேண்டுமா தனியார் பள்ளிகளே


பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா
உள்ளம் தொட்டு சொல்வீரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வீரா
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லி விளக்க தோதாக -தினமும்
செய்திகள் வருதே தீதாக
 

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியர் தெழிலாளி !
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட !
கனிவாய்ச் சொல்லியே, இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே !
பிணியாய் ஆனதே இந்நாளில்=இந்தப்
 பிழையும்  மறைவது எந்நாளில் ?

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே !
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதோ தனியார் பள்ளிகளே !
கோழைகள் நடுத்தரக் குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை !
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதார் !
எனவே ,
வாழும்வழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...