Saturday, August 27, 2011

கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே


 உயிர்மூன்று ஊசலென கண்முன் ஆட-அதை
    உணராது உறக்கத்தில் விழிகள் மூட
 மயிர்நீப்பின் உயிர்வாழா. கவரி மானா-அட
     மறத்தமிழா சொன்னதெலாம் முற்றும் வீணா
 வயிர்நிறைய போதுமென அந்தோ நோக்கே-ஏனோ
      வந்ததடா சொந்தமடா அங்கே தூக்கே
 கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே-பொங்கும்
      கடலாக அலையாகி எதிர்ப்பாய் நீயே

 செய்யாத குற்றத்தை செய்தார் என்றே-பழி
     செப்பியே சிறைச்சாலை தன்னில் இன்றே
 பொய்யாக இருபத்து ஆண்டும் செல்ல-உடன்
      போடுவீரே தூக்கென ஆள்வோர் சொல்ல
 ஐயாநான் கேட்கின்றேன் இதுநாள் வரையில்-அவர்
     அடைபட்டு கிடந்தாரே ஏனாம் சிறையில்
 மெய்யாக இருந்தாலே அன்றே அவரை-தூக்கு
    மேடையில் ஏற்றினால் கேட்பார் எவரே

 வீணாகப் பழிதன்னை ஏற்க வேண்டாம்-அவரை
      விடுவிக்க கௌரவம் பார்க்க வேண்டாம்
 காணாத காட்சிபல காணல் நேரும்-எதிர்
     காலத்தில் இந்தியா உடைந்து சிதறும்
 நாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி
     நாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்
 தூணாக ஒற்றுபட இருந்தோம் நாங்கள்-எம்மை
    துரும்பாக நினைத்தீரே நன்றா நீங்கள்

 இரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்
     இதயமென சொல்லுவதும உம்முள் இன்றா
 அரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்
     அடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற
 கரக்கமலம் குவித்து  உமை  வேண்டுகின்றோம்-உயிர்
     காத்திடுவீர்! கனிவுடனே என்றேமீண்டும்
 உரக்ககுரல் கொடுக்கின்றார் தமிழர்! உண்மை-எனில்
       ஒற்றுமைக்கு உலைவைப்பார் நீரே! திண்மை

          புலவர் சா இராமாநுசம்

மே தினம்

     சென்ற மே தினத்துக்கு முன் ஈழ
        நினைவோடு இணைத்து வடித்த
                            கவிதை

விரைவில் வந்திடும் மே தினமே-ஈழ
விடுதலை வேண்டுது நம்மனமே
வரையிலா துயரமும் பட்டோமே-அரக்க
வடவரின் செயலால் கெட்டோமே
கரையில் நின்று அழைத் தாலும்-நம்
காதில் சத்தம் நுழைந் தாலும்
திரைகடல் நீந்தும் தூரமதான்-அங்கே
தினமும் மரண ஓலம்தான்

உழைப்பவர் போற்றும் மேதினமே-இவ்
உலகம் போற்றும் மேதினமே
பிழைப்பை வேண்டி உலகெங்கும-இன்று
பிரிந்த ஈழர்துயர் நீங்கும்
ஒருநாள்
தழைக்க ஈழம் தனிநாடாய்-ஈழத்
தமிழனை வாழ்த்த நனிஏடாய
அழைக்க வந்திடு மேதினமே-அதுவரை
அமைதி காணா எம்மனமே

புலவர் சா இராமாநுசம்

Thursday, August 25, 2011

காலச் சுவடுகள்


காலச் சுவடுகள் கடந்திட நடந்திட-எழில்
காட்சிகள் இங்கே பாடமாய் கிடந்திட
கோலம் காட்டும் செம்மண் முகடுகள்-உற்றுப்
கூறின் பொன்போல் மின்னும் தகடுகள்
ஞாலம் இதுபோல் கொண்டது பலவே-ஆனால்
நாமதில் கண்டதோ மிகவும் சிலவே
சீலம் மிக்கதாம் செம்மண் பூமி-பயிர்
செழித்திட வளர்கும சிறந்த பூமி

இயற்கைக் காட்டும இணையில் காட்சி-கண்
இமைக்க மறக்கும தகையதன் மாட்சி
செயற்கை மிகமிக செழிப்பினை அழிக்கும்-என
செப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே
செயற்கை என்றும் சிகப்பு விளக்கே-மேலும்
செய்வது அனைத்தும் தவறொன விளக்கும்

Wednesday, August 24, 2011

எண்ணிப் பாரும் நல்லோரே

எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
     இதயம் படைத்த பல்லோரே
 கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
     காகித பிளாஸ்டிக் குப்பைகளே
 விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
     விரைவாய் முகத்தில் மோதிடுமே
 திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
     தெருவில் போடவும் தடுப்பீரா

வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
      வீதியில் குப்பையைத் தேக்குவதும்
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
      கேட்பின் அவரைச்  சாடுவதோ
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
     நோய்கள் பிறக்கும் தாயன்றோ
கோட்டையை  ஆள்வோர் மட்டுமே-இக்
     கொடுமையை நீக்க இயலாதே

தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
     தூக்கிக் கொண்டு போனாலும்
எட்டி நின்றே  குப்பைகளை-தூக்க
    எறிந்து விட்டுச் செல்வாரே
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
     தவறே நாளும் செய்வாரே
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
    குறையின்றி வீதியில் சிதறிவிடும்

சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
     சொல்லினும் கேளார் பலபேரே
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
     தனக்கென என்றும் போவரே
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
     முறையாய் அதிலே சிலவற்றை
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
     எழுதினேன் தருவீர் கருத்துரையே

            புலவர் சா இராமாநுசம்

Tuesday, August 23, 2011

குப்பையை அகற்ற வேண்டாமா

எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

Monday, August 22, 2011

மழை



விண்மீது வலுவாக கருத்தமேகம்-அட
வீசுகின்ற காற்றோ புயலின்வேகம்
மண்ணீரம் அணுவளவு காயவில்லை-ஆனால்
மழைமட்டும் பொழிகிறது ஓயவில்லை
தண்ணீரும் வெள்ளமென பெருகியோட-அது
தரைப்பாலம் தெரியாமல் நன்குமூட
கண்பாலம் எங்ககேயென அறியவேண்டி-சில
கம்பங்களை நட்டாரோ குழியும்தோண்டி

கரைதாண்டி செல்கின்ற வெள்ளமூரே-எங்கும்
காணாமல் அழித்திடும் தடுப்பார்யாரே
முறைதாண்டி இதுபோல ஈழப்போரே-நடத்தி
முடித்ததை உலகத்தில் தடுத்தார்யாரே
இறைவாநீ எங்கேயோ இருக்கின்றாயா-சிங்கள
ஈனரின் செயல்தன்னை பொறுக்கின்றயா
மறையாது உடனிங்கே வந்திடுவாய்-ஈழம்
மலர்ந்திட வழிவகை தந்திடுவாய்

தண்ணீரில் வாழ்கின்ற மீனைப்போன்றே-நம்
தரைவாழும் மீனவன் கடலில்சென்றே
கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே-அவன்
கண்ணீரைத் துடைக்கின்ற நாளுமென்றே
அடித்தவன் வீட்டிற்கே மீண்டுமீண்டும்-பேச
அடிமையா நாமங்கே செல்லவேண்டும்
கொடுப்பதை விடுத்தாலே போதுமவன்-கை
கும்பிட அவனிங்கே ஓடிவர செய்வீரா---?

புலவர் சா இராமாநுசம்

Sunday, August 21, 2011

ஈழத் தமிழரைக் காப்பீரே!

இன்று  வந்ததே  ஒருசெய்தி-நம்
     இதயம் துளைக்கும் அச்செய்தி
கொன்றது ஈழத்தில் போதாதா-மாதர்
     கொங்கையை அறுக்கும் தீதேதான்
என்று தீரும் இக் கொடுமை-தமிழன்
     இருப்பதோ வடவர் கொத்தடிமை
ஒன்றும் செய்ய இயலாதே-பாழும்
     உலகமும் ஏதும் முயலாதே

அவிழ்த்த நெல்லி மூட்டையென-ஈழர்
     அவனியில் எங்கும் சிதறிவிட
கவிழ்த்த தலையும் கண்ணீரும்-ஈழம்
    காண்பதா தினமும் செந்நீரும்
தவித்த வாயிக்கி தண்ணீரே-சிங்களர்
     தரவே மறுத்து உண்ணீரேல்
புழுத்துப் போகும் உம்நாக்கே-இந்த
    புலவனின் சத்திய மாம்வாக்கே

இந்தியா என்பது நாடல்ல-நன்கு
    எண்ணி ஆய்வது கேடல்ல
இந்தியா என்பது துணைக்கண்டம்-அன்று
    எழுதினார் உண்மை எனக்கண்டோம்
இந்தியா என்பது ஒருநாடே-என
    எண்ணிய விளைவா இக்கேடே
இந்தியா என்பதோர் நாடென்றால்-உடன்
    ஈழத் தமிழரைக் காப்பீரே

போனது போகட்டும் இனியேனும்-இந்தியா
     போக்கினை மாற்றி கனிவேனும்
தானது தரட்டும் அவர்வாழ-உற்ற
     தருணம் இதுவென உளம்சூழ
ஆனது அனைத்தும் செய்வீரா-அவர்
     அவலம் நீக்கி உய்வீரா
வீணது என்றே எண்ணாதீர்-மேலும்
    வேதனை எதுவும் பண்ணாதீர்

       புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...