Thursday, January 4, 2018

பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம் பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
  தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
  அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
  என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
  நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!

துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
  துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
  தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
  என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
  உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா

இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
  இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
  பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
  நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
  கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!

குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
   குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
   உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை  அறிவதுதான் என்றோ
   அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
   விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
   தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
   ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான்  கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
   அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
   பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
        
                        புலவர் சா இராமாநுசம்
 
         கல்லூரியில் படித்த போது எழுதியது

Wednesday, January 3, 2018

நடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற நற்றமிழ் போர்வையால் பாடுகின்றேன்நடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற
நற்றமிழ் போர்வையால் பாடுகின்றேன்
ஒடுங்கிட ஐம்பொறி வாடையிலே-மேலும்
உடுத்திட கம்பளி ஆடையிலே
அடங்கிட தந்தது செம்மைதனை-துன்பம்
அகன்றது அடைந்தது வெம்மைதனை
தொடங்கிய கவிதையை முடித்திடவே-உறவும்
தொடர்ந்து நாளும் படித்திடவே


புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 2, 2018

முகநூல் பதிவுகள்!


சொல்லுதல் யாருக்கும் எளிது
ஆனால் சொல்லியவாறு செய்தல் மிகவும் அரிது

சட்ட மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற இரசினி
நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும் அப்போது முடிவெடுக்கப் படும் என்கிறாரே! காரணம் என்ன!!?
விளக்குவாரா!!

எந்த ஒரு செயலாய் இருந்தாலும் நன்கு ஆய்ந்து அதன் பின்னே தொடங்குவது நன்று! தொடங்கிய பின்
அதனை ஆய்வு செய்தால்அதனால் இழுக்கு தான் ஏற்படும் !இது யாருக்காவும் எழுதப் பட்ட தல்ல! வள்ளுவர் வாக்கு!

எந்த செயலாய் இருந்தாலும் அதற்கேற்ற ,காலமும் இடமும்
அறிந்து செயல் பட்டால் அஞ்சாமை தவிர வேறு துணை எதுவும் தேவையில்லை வெற்றி உறுதி!

இடைத் தேர்தலில் பணநாயகம்
வெற்றி பெற்றது என்றாலும் கூட ,ஓட்டு வித்தியாசம் அதிகம் என்பதை ஆய்ந்தால் அது தினகரனுக்காப் போடப்பட்டது என்பதைவிட மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர் பார்த்து போடப்பட்டுள்ளது என்றே நான்
கருதுகிறேன்!

உறவுகளே
2.G வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது! அதைப்பற்றி கருத்து எதுவும் இங்கே குறிப்பிட நான் வரவில்லை ஆனால் இன்று கோடிக் கணக்கான மக்கள் , ஏன் இன்னும் சொல்லப்போனால் நாட்டில் செல்போன் இல்லாத
மனிதரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர காரனமானவர் அ .இராச என்பது குறிப்பிடத் தக்கது

புலவர்  சா  இராமாநுசம்

Monday, January 1, 2018

ஆங்கிலப் பத்தாண்டே வருக-விரும்பி அழைக்கின்றோம் நன்மைகள் தருக!ஆங்கிலப் பத்தாண்டே வருக-விரும்பி
அழைக்கின்றோம் நன்மைகள் தருக
ஏங்கிடும் ஏழைகள் வாழ-வளமை
என்றுமே அவர்வாழ்வில் சூழ
நீங்கிடச் செய்வாயே துன்பம்-என்றும்
நிலைத்திட மறையாது இன்பம்
ஓங்கிட கல்வியே யாண்டும்-நீயும்
ஓயாது வளர்த்திட வேண்டும்;


நல்லோர்கள் நாடாள வரவும்-வாழ
நன்மைகள் பற்பல தரவும்
வல்லோரை தேர்ந்தெடுப்ப பாயே-உரிய
வழிவகை காட்டிடு நீயே
இல்லாரே இல்லெனும் நிலையே-எங்கும்
இயல்பாக, ஏற்றிடும் விலையே
பொல்லாத , செயலுக்குப் வேட்டே- உடன்
போடுவாய் பலமான பூட்டே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...