Friday, August 22, 2014

விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்


குப்பையிலா நகரமது சிங்கை என்றே-முன்னர்
கூறுவதைக் நாம்மவரும் கேட்டோம் நன்றே
செப்பறிய அந்நிலையே சீனா எங்கும்-நான்
சென்றபோது கண்டேனே! மகிழ்ச்சி பொங்கும்
தப்பியொரு இடத்தினிலும் குப்பை யில்லை-அவர்
தனிமனித ஒழுக்கத்தில் கண்டார் எல்லை
தொப்பையிலா மக்கள்தான் அங்கே முற்றும் -காண
தோன்றுகின்றார் !கட்டான உடலைப் பெற்றும்

விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட
வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்
கண்முட்ட தேடினாலும் குடிசை ஒன்றும்-அங்கே
காணவில்லை! உண்மையிது! வாழ்க!! என்றும்
பண்பட்ட அவர்வாழ்வில் பகட்டு யில்லை- ஏழை
பணகாரப் பாகுபாடு பேதம் இல்லை
வெண்பட்டு மென்மையென சாலை விரியும் –மின்
விளக்குகளோ தங்கமென ஒளியில் எரியும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 20, 2014

தேனாக இனித்ததே சுற்றுப் பயணம்-அடுத்து தெரிவிப்பேன் கட்டுரையில் விரிவாய் நன்றி!


புதுமைமிக சீனாவும் ஹாங்காங் மெக்கா-அதன்
போற்றமிகு முன்னேற்றம் காணத் தக்கா!
முதுமைமிகு வயதினிலே சுற்றி வந்தேன் -ஆனால்
முதுகுவலியும் கால்வலியும் பெற்று நொந்தேன்!
பதுமையென பாவையர்கள் எங்கும் வரவும்-நல்
பாட்டாளி மக்களவர் உழைப்பைத் தரவும்,
எதுவும்நிகர் இல்லையென வளர்ச்சி கண்டேன்-மேலும்
எல்லையில் மகிழ்ச்சிதனை என்னுள் கொண்டேன்!

சீனாவின் சிறப்புதனை கவிதை தன்னில்-இங்கே
செப்பிடவே இயலாதே! அறிய எண்ணில்!
போனால்தான் புரியுமெனல் மிகையோ! அல்ல!-எதிலும்
முன்னேற்றம்! முன்னேற்றம்! எதைநான் சொல்ல!
தானாக வரவில்லை! அந்த நிலையே!- மக்கள்
தந்திட்ட உழைப்பேதான் அதற்கு விலையே
தேனாக இனித்ததே சுற்றுப் பயணம்-அடுத்து
தெரிவிப்பேன் கட்டுரையில் விரிவாய் !நன்றி!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...