Saturday, August 11, 2012

ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே!    ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப் பாவே
    தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத் தில்
    தானாய் வந்தது அலை போல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலை போல
    வானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனை கள்  

    உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந் தாச்சே
    எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்  பூவே
    போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலை பெற்றேன்
    பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்த துவே

    பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதி டுவேன்
    வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்தி டிமே
    தேதி கேட்டால தெரி யாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரி யாதே
    காதில் அழைப்பது விழுந் தாலும-என்
    கவன மதிலே செல்வ தில்லை

    படுத்த படிய சிந்திப் பேன்-என்
    பக்கத் தில் பேனா தாளுமே
    தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறை  வில்லை
    அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணா தாம்
    எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயா தாம்

    அப்பா  வேதனை ஆம்  அப்பா-தினம்
    ஆனது என் நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப் பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப் பாவே
    ஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்
    இப்பா போதும் முடி யப்பா-சோர்வு
    எழவே தொடரா படி யப்பா

              புலவர் சா இராமாநுசம்Related Posts Plugin for WordPress, Blogger...
 

Thursday, August 9, 2012

அன்பின் இனிய உறவுகளே அலையெனத் திரண்டு வருவீரே!

   அன்பு நெஞ்சங்களே!

                        நம், நீண்டகால கனவு நினைவாகும் நாள் , இதோ வந்துவிட்டது         சென்னை பதிவர்களின் உழைப்பிற்கு நீங்கள் தரும் ஊதியம் உங்கள் வருகை     மட்டுமே!  வருக! வருக! மகிழ்வைத் தருக!


             
                                                                                      அன்புடன்
                                                                                  சா இராமாநுசம்

Tuesday, August 7, 2012

முதுமையிலே மூன்றுநாடுகள் சுற்றி வந்தேன்!


முதுமையிலே மூன்றுநாடுகள் சுற்றி வந்தேன்-ஆனால்
    முதுகுவலி, கால்வலியும் பெற்று நொந்தேன்
மதுவருந்தி விட்டவன்போல் கால்கள் தள்ள-எனினும்
     மனதினிலே உற்சாகம் மிகவும் கொள்ள
புதுமைமிகு காட்சிபல கண்டும் வந்தேன்-நல்
    புத்துணர்வும் புதுத்தெம்பும் என்னுள் தந்தேன்
இதுவரையில் இப்படியோர்  இன்பம் துன்பம்-வாழ்வில்
    இணைந்துவரும் சூழ்நிலையை பெற்ற தில்லை

விண்முட்ட முகில்தவழ அடுக்கு வீடே-மேலும்
    விரிவாக,ஆங்காங்கே பசுமைக்  காடே
கண்கொட்ட இயலாத காணும் காட்சி-மனக்
     கற்பனைக்கும் எட்டாத மிகுந்த மாட்சி
பண்பட்ட மக்களென பழக்க வழக்கம்-அதைப்
    பார்போரின் கவனத்தை தன்பால் ஈர்க்கும்
புண்பட்டேன்! நம்நாட்டை எண்ணிப் பார்த்தேன்-ஏனோ
   புலம்பத்தான் இயன்றது! நெஞ்சம் வேர்த்தேன்


சாலைகளோ தூய்மைதனை எடுத்துச் சொல்ல-ஏதும்
   சத்தமின்றி வாகனங்கள் நின்றுச் செல்ல
ஆலைகளும் மாசின்றி இயங்கக் கண்டேன்-அந்த
    அழகுதனை மனக்கண்ணில் படமாய்க் கொண்டேன்
காலையிலே, பரபரப்பு! பணிக்குச் செல்வோர்-மிக
    கண்ணியமாய் வரிசையிலே நின்று கொள்வர்
வேலையின்றி இருப்பாரைக் காணல் அரிதே-சாலை
   விதிகளையே மதிக்கின்ற பண்புப் பெரிதே

                                   ( தொடரும் )

அன்பின் இனிய உறவுகளே!
                           வணக்கம்.
சென்னையில் பதிவர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள்
சிறப்பாக நடைபெற, ஆயத்தப் பணிகள் செய்யவேண்டி
இருப்பதால், இனி, என் வலையில், என்னுடைய பதிவுகள்,
பதிவர்கள் சந்திப்பு முடிந்த பிறகே வெளிவரும் என்பதை
அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

    
         பதிவர் சந்திப்புக்கு அனைவரும் வருகை தருமாறும், ஒத்துழைப்பு நல்குமாறும், விரும்பி வேண்டிக்
கேட்டுக்கொள்கிறேன்

                                    

                            புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...