Saturday, May 5, 2012

ஈழம் ஒன்றே என்னாசை-என் இதயம் முழங்கும் நல்லோசை


ஈழம் ஒன்றே என்னாசை-என்
   இதயம் முழங்கும் நல்லோசை!
வாழும் என்நாள் முடிவுக்குள்-அது
   வந்திடுட வேண்டும் விடிவுக்கே!
சூழல் விரைவில் வந்திடுமா-ஈழம்
   சுதந்திரம் பெற்றுத் தந்திடுமா?
பாழும் மனமே! கலங்காதே!-சிங்கள,
   பாவியின் குலமும் விளங்காதே!

கண்டனம் செய்தால் போதாது-அந்த
   கயவர்கள் திருந்துதல் ஆகாது!
தண்டணைத் தருவதே சரியாகும்-எனில்,
   தமிழரின் வாழ்வே எரியாகும்!
சண்டை முடிந்தும் மூன்றாண்டே-அங்கே
    சாவாதே மேலென மனந்தூண்ட
குண்டர்கள் ஆடசி மாறாதே-அவர்
   கொடுமைக்கு இன்றும் அளவேதே!

முள்ளின் வேலிக்குள் கிடக்கின்றார்-அவர்
   முடங்கி அடங்கியே நடக்கின்றார்!
உள்ளிட வேண்டும் ஐ.நா வே-உடன்
   உலகம் உணர்ந்திடச் செய்வாயே!
கள்ளிப் பாலும் பசும்பாலாய்-பக்சே
   கள்ளனின் நாடகம் சிலநாளே!
வெள்ளி முளைக்கும்! விடிந்திடுமே-ஈழ
   வெற்றிச் சங்கும் ஊதிடுமே!

                                 புலவர் சா இராமாநுசம்
 

   
  

Thursday, May 3, 2012

பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!



உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்
    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!
வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக
     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!

வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்
    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!
நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்
     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!

அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை
    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!
கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்
    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!

உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்
   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!
திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி
    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!

ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்
    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்
கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு
    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!

எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த
    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!
புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது
    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!

                         புலவர் சா இராமாநுசம்
  



Wednesday, May 2, 2012

இரத்தம் சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!


ஒலிக்கிறது தனிஈழம்  தீர்வா மென்றே-ஆனால்
   ஒற்றுமையோ வரவில்லை இதுவா நன்றே!
களிக்கிறது மனமெல்லாம் சொல்வேன் ஒன்றே-யாரும்
   கடந்ததைப் பேசாமல் சேர்வீர் இன்றே!

சொல்வது யாரெனும் ஆய்வு வேண்டாம்-அவர்
    சொற்பொருள் யாதென ஆய்த லீண்டாம்!
வெல்வது தனிஈழம் வருமே ஒருநாள்-நாம்
    வீறுகொள்ள விரைந்திடுமே அந்தத் திருநாள்!

உலகெங்கும் வாழ்கின்ற தமிழ ரினமே-உன்
   உணர்வாலே ஒன்றுபடின் ஈழம் வருமே!
கலகங்கள் நமக்குள்ளே வேண்டா மினியும்-உள்ள
    கழகங்கள் ஒன்றாயின் காலங் கனியும்!

நடந்ததை மறப்பதே நமக்குத் தேவை!-ஈழம்
   நல்கிட அனைவரும் செய்யும் சேவை!
திடமதை மனதிலே கொள்ள வேண்டும்-போர்
   திட்டத்தை அறவழி தீட்ட வேண்டும்!

ஓரணி திரண்டாலே உடனே வெல்வோம்-குரல்
   ஓங்கிட உலகுக்கு எடுத்துச் சொல்வோம்!
பேரணி ஆர்பாட்டம் ஊரில் எங்கும்-பேசும்
   பேச்சிலே மூச்சிலே ஈழம் பொங்கும்!

குற்றமே பார்ப்பார்கும் சுற்றம் இல்லை-வெறும்
    குறைசொல்லி வந்தாலே மேலும் தொல்லை!
செற்றமே நமக்குள்ளே வேண்டாம்! கெடுக்கும்-இரத்தம்
    சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!

                   புலவர் சா இராமாநுசம்


  

Tuesday, May 1, 2012

வருக வருக மேதினமே!


சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனைச்
சுரண்டி உண்பவன் முதலாளி!
வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
வளமுடன் வாழ்பவன் முதலாளி!
திரண்டிட அணியெனத் தொழிலாளி - ஓடும்
திசைதனை அறியா முதலாளி!
மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
மேன்மையைப் போற்றுதும் இத்தினமே!

வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே!
தருக பல்வகைத் தொழிலோங்க - ஏதும்
தடையின்றிப் பற்றாக் குறைநீங்க!
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி,
பேதத்தை நீக்கும் நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே!

செய்யும் தொழிலே தெய்வமென - முன்னோர்
செப்பிய வழியேச் செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே!

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்துப்
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே!
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே!
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்குக் காரணம் இத்தினமே!

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லார் கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடத் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திடச் செய்தாய் மேதினமே!.

                                        புலவர்   சா.இராமாநுசம் 


Sunday, April 29, 2012

என்றும், கோழையாய் இருந்தே பலியானோம்!


கோடை வெயில் தொடங்கியதே-அதன்
   கொடுமையில் தெருவே முடங்கியதே!
ஆடையோ! வேர்வையில் குளித்ததுவே-மிக
   அனலில் உடலும் எரிந்ததுவே!
குடையோ! கையில் விரிந்திடவே-சற்றும்
   குறையா! வெம்மை! புரிந்திடவே!
நடையோ, அடடா! படுவேகம்-அவர்
   நடப்பதைக் காணின் படுசோகம்!

வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
   வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
   கடுமை அங்கு இன்றாமே!
சூடு பட்டும் உணர்வில்லை!-ஏதும்
   சுரணை நமக்கும் வரவில்லை!
கேடு நீங்கும் நாள்வருமா?-இக்
   கேள்விக்குக் காலம் பதில்தருமா?

ஆண்டுகள் தோறும் இதுதானே!-மாறி
   ஆள்பவர் வரினும் இதுதானே!
தூண்டில் சிக்கிய மீனாக,-உயிர்
   துடித்துமே போகும் தானாக,
வேண்டுமா எண்ணிப் பாருங்கள்-வழி
   வேதனைத் தீர கூறுங்கள்!
கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
   கோழையாய் இருந்தே பலியானோம்!

             புலவர் சா இராமாநுசம்





இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...