Saturday, May 14, 2016

இடையில் இருப்பது இருநாளே-மேலும் எண்ணில் தேர்தல் திருநாளே!



இடையில் இருப்பது இருநாளே-மேலும்
எண்ணில் தேர்தல் திருநாளே
தடையில் ஓட்டுப் போடுதலே- அன்றும்
தவறின் பின்னர் வாடுதலே
விடையில் கேள்வி ஆகிவிடும்-என்றும்
வேதனை மிகுதியாய் நோகவிடும்
படையுள் வீரரின் கைவாளாய் -வாக்கைப்
பயன்தர ஆவன செய்வீரே!


புலவர் சா இராமாநுசம்

Friday, May 13, 2016

நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார் !



நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே
நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார்
நடக்கின்ற வாக்குறுதி அதிலேசில உண்டே –அதையே
நன்றாக சிந்தித்து, செய்தக்கார் கண்டே
விடையாக யாரென்று நீர்காண வேண்டும் –அன்னார்
வெற்றிக்கு வழிதன்னை உள்ளத்தில் பூண்டும்
தடையின்றி தக்கதோர் வழிசெய்ய ஈண்டும் –யாரும்
தவறாமல் வாக்கினை வழங்கிட வேண்டும்!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 11, 2016

வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே !


வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன்
வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே
தாங்காதே தாங்காதே மேன்மேலும் துயரம் –அதனால்
தணியாது எரியாதோ மக்கள்தம் வயிறும்
ஏங்காதே பின்னலே விலைவாசி ஏறின்- என்றே
எண்ணியே தெளிவாக ஆராய்ந்து தேறின்
தூங்காது விழிப்போடு போடுவாய் ஓட்டே- நன்றே
தேர்தலில் உன்னுடை உரிமையாம் சீட்டே


புலவர் சா இராமாநுசம்

Monday, May 9, 2016

பாதை மாறிப் போனால் பயணம் கெட்டுப் போகும்


பாதை மாறிப் போனால்
பயணம் கெட்டுப் போகும்-மிக்க
போதை ஏறிப் போனால்
புத்திக் கெட்ட தாகும்
தீதை நீக்க ஓட்டே
தேடி வரினும் கேட்டே -நீயும்
பேதை அல்ல காட்டே
பெறுவ தவலம் நோட்டே


புலவர் சா இராமாநுசம்

Sunday, May 8, 2016

அன்னையர் தின நினைவுக் கவிதை!



அன்னையர் தினம்!

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?


உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...