Saturday, September 23, 2017

இரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் நாளும் கடக்கிறது





இரட்டை  ஆட்சியே  நடக்கிறது –அதனால்
   இன்னலில்  நாளும்  கடக்கிறது
விரட்ட வேண்டும்  இம்முறையை-இன்றேல்
   விரைவில் தீரா நம்குறையே
புரட்டும் பொய்யும் வாழ்வாக-பொழுது
   புலர்ந்தும் இருளே  சூழ்வாக
மிரட்டிட பணியும் அடிமைகளே – ஆளின்
   மேலும் நீளும் கொடுமைகளே 

புலவர்  சா  இராமாநுசம்

Friday, September 22, 2017

மழையே மழையே வாராயோ-எங்கள் மனம்குளிர் நல்மழைத் தாராயே





மழையே  மழையே வாராயோ-எங்கள்
   மனம்குளிர் நல்மழைத் தாராயே
அழையார் வீட்டுக்குப்  போகின்றாய்-நாங்கள்
   அழைத்தும்  வராது ஏகின்றாய்
விழைவார் தம்மிடம் போகாமல்-நாளும்
   வேதனைப்  பட்டு  சாகாமல்
பிழையார் செய்தார்? பொறுப்பாயா –உந்தன்
   பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!!?
புலவர்  சா  இராமாநுசம்

Thursday, September 21, 2017

இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே!



கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
    கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
   தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
    ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்பட அறிவீரா? -உடன்
    நிம்மதி ஏற்பட செய்வீரா?

பட்டப் பகலில் வீடெங்கும்-நகையோ
    பணமோ கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறது!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
    திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!


வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
     வாழ்வை நடத்திட கடலோரம்
அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

             புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 20, 2017

போதுமென்ற மனம் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே?



போதுமென்ற மனம் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்

Monday, September 18, 2017

முகநூல் பதிவுகள்

இராசவின் படுதோல்விக்கிப் பிறகாவது , பா ஜ க அரசு தமிழக
மக்களின் மன்போக்கை அறிந்து
தன்னை ,தன் போக்கை மாற்றி தமிழகத்திற்கு நல்லது
செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்குமா!?

உறவுகளே
நாள் தோறும் காலண்டரில் ஒரு தாளைக் கிழிக்கிறோம் யாரேனும் நினைத்துப் பார்ப்பதுண்டா
அது நம் வாழ்நாளில் ஒரு நாளைக் கிழிக்கிறோம்
எனபதை!

திட்டமிட்டு திறமையோடு எந்த
ஒரு செயலையும் செய்பவர்கள்
தாம் எண்ணியதை எண்ணியவாறே அச் செயலில்
வெற்றி பெறுவர் என்பதில் ஐயமில்லை என்பதாம்

நல்லவனா கெட்டவனா என சரிவர ஆராயாமல் ஒருவனிடம் வைக்கும் நம்பிக்கையும் , நன்கு ஆராய்ந்து நல்லவன் நம்பிக்கைகு உரியவன் என்று
அறிந்த பின்பும் அவன்பால் , ஐயம் கொள்வதும் நமக்கு
தீராத துன்பத்தையே தரும்

சமூகநீதியை நிலை நிறுத்த திமுக துணை நிற்கும்: ஆசிரியை சபரிமாலாவுக்கு ஸ்டாலின் வாக்குறுதி
--செய்தி
: முதலில் ,ஆசிரியை சபரிமாலாவுக்கு ஸ்டாலின் அ்வர்கள் தன கட்சிக்காரகள் நடத்தும் ஏதேனும் ஒரு
பள்ளியில் வேலை வாங்கித் தரட்டும்! செய்வாரா?

ஒரு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள
இந்த காலத்தில் அனிதா தற்கொலையால் தான் செய்த
அதும் அரசுப் பள்ளி ஆசிரியை வேலையை நீட் தேர்வுக்கு எதிர்புத் தெரிவித்து இராசினாமா செய்தது
பாராட்டத் தக்கது என்றாலும் ஏற்கத் தக்கதல்ல! இன்று
ஏதோ ஒரு ஆவேசத்தில் அவர் இப்படி செய்து விட்டார்
ஆனால் காலப்போக்கில் பொருளாதார சிக்கல் வரும்போது தொல்லை படுவார் இன்று பாராட்டும் எவரும் உதவமாட்டார் !அவர் வேறு வமையில் தன் எதிர்ப்பைக்காட்டி இருக்கலாம்


புலவர்  சா  இராமாநுசம் 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...