Friday, December 30, 2016

முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!




படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!


புலவர் சா இராமாநுசம்

Sunday, December 25, 2016

ஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்

ஏசுவே மீண்டும் வாரும்
இங்குள்ள நிலையைப் பாரும்
பேசுவ அனைத்தும் பொய்யே
பிழைப்பென! காண்பீர் மெய்யே!
கூசுவ அரசியல் போக்கே!
குறைகண்டே விரைந்தே நீக்க!
தூசிவ! துடைக்க வாரும்!
துயர்போக எம்மைக் காரும்!

கருணையின் வடிவம் நீயாய்
காப்பதில் அன்புப் தாயாய்

பெருமையும் பெற்றவர் ஆக,
பேசுதல் நிலையாய்ப் போக!
உருவமே பெற்று வருவீர்
உலகினைக் காத்தே அருள்வீர்!
தருணமே இதுதான்! ஆகும்!
தவறிடின் ! அழிந்து போகும்!

புலவர் சா இராமாநுசம்

Sunday, December 11, 2016

வரண்டன குடிநீரை வழங்கும் ஏரி –எதிரே வருங்காலம் பஞ்சத்தால் எல்லை மீறி



நாளை கூடும் அமைச்சர்கள் கவனத்திற்கு
-----------------------------------------------------
வரண்டன குடிநீரை வழங்கும் ஏரி –எதிரே
வருங்காலம் பஞ்சத்தால் எல்லை மீறி
திரண்டிட குடத்தோடு தெருவில் எங்கும்=மக்கள்
திரிகின்ற நிலைவருமா இங்கும் அங்கும்
உருண்டன! மழைக்காலம் போகும் முன்னே- அரசு
உருப்படியாய் திட்டமிடல் நன்றாம்! பின்னே
மருண்டிடும் மானாக திண்டாடிப் போவீர்-உடனே
மறவாது செயல்பட்டு மக்களைக் காவீர்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 7, 2016

முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்டாரே மத்திய அரசே!


மக்கள் படும் பாடு
--------------------------
முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்
முடமாகி விட்டாரே மத்திய அரசே!
குறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்
குமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே!
கறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்
கண்நீரைத் துடைப்பிரா மத்திய அரசே!
நிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்
நீங்கிட உதவுங்கள் மத்திய அரசே!


காலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்
காலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே!
ஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை
அவசர சிகிச்சைதான் மத்திய அரசே!
உயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று
உடைகூட இல்லாது மத்திய அரசே !
வயிர்மட்டும் எதற்காக? மத்திய அரசே-ஏனோ
வைத்தானோ இறைவன் மத்திய அரசே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, December 4, 2016

வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!


வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும்
வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!
சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச்
சிந்தனையாம் ஒன்றே நிலையாய் நின்றே!
பாராள வந்தோரின் பாரா முகமே- வானம்
பார்கின்ற விவசாயி காண, அகமே!
கூரான வேல்கொண்டு குத்தல் போல-உள்ளம்
குமிறியழும் நிலைதன்னை காண்போம் சால!


புலவர் சா இராமாநுசம்

Thursday, November 24, 2016

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று???? பொருந்தும்!




அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????  பொருந்தும்

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!



சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 22, 2016

தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன் திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா!



கார்திகைப் பிறந்துகூட நாராயணா- வானில்
கார்மேகம் காணலியே நாராயணா
நேர்த்திகடன் ஏதுமில்லை நாராயணா-கண்ணில்
நீர்வடிந்து வற்றிவிட நாராயணா
வார்த்தையில்லை செல்வதற்கு நாராயணா-வாழ
வழியேது உழவனுக்கு நாராயணா
தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன்
திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா


புலவர் சா இராமாநுசம்

Monday, November 21, 2016

அடமழை பெய்யாது ஐப்பசி போகவும்-இயற்கை அன்னையே நீரின்றி இட்டபயிர் சாகவும்!




விடமுண்டு விவசாயி வேதனையால் மாளவும்
விளைநிலம் எல்லாமே வெடிப்புகளே ஆளவும்
இடமில்லை இவ்வுலகில் இனிவாழ என்றே
இதயத்தில் பல்வேறு துயர்சூழ நன்றே
திடமின்றி, உழவனவன் மாற்றுவழி கண்டான்!
தேடினான் கிடைத்தோ விடமது உண்டான்


புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 16, 2016

முகநூலில் முக்காலம்!


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்---வள்ளுவர் காலம்

டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
கைகட்டி பின்செல் பவர்------வெள்ளைககாரன்காலம்

இலஞ்சத்தில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
பஞ்சத்தில் பின்செல் பவர்---இது, தற்காலம்

புலவர் சா இராமாநுசம்

Monday, November 14, 2016

முகநூல் பதிவுகள்!

தமிழக மக்களின் நலன் கருதி ,நம் முதல்வர் அவர்கள் மிகவும்
கடுமையாக எதிர்த்து வந்த தீங்கான பல திட்டங்கள் ஒவ்வொன்றாக
ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வருவதைக்காணும் போது தமிழ்
நாட்டை தற்போது ஆள்வது பெரும்பான்மை அண்ணா திமுகா
அரசா?????? அல்லது !!!!!!வேறா ! ஐயம், எனக்கு வருகிறது
உங்களுக்கு!!!!??


உறவுகளே !
பொதுவாக மருத்துவ மனையில் , நோயாளி
சேர்க்கப் பட்டு குணமானால் மருத்துவர் தான்
அவர் வீடுதிரும்புவது(டிஸ்சார்சு)பற்றி அறிவிப்பார் ஆனால்
, நம் முதல்வர் வீடு திரும்புவதை அவர்தான் அறிவிப்பார்
என்று,அப்பல்லோ மருத்துமனை ,அதன் தலைவர் சொல்வது!!!!
சரியா?


ஆயிரம் ஐநூறு நோட்டுகள் செல்லாது என்று அரசு சொன்னதால் தங்கநகை
விற்பனைநேற்று இரவு முடிந்து விடிந்தும் நடந்து கொண்டிருகிறேதே நகைக் கடைகளில்
இப்படி கருப்பு பணம் வெள்ளை யாகிறதே அரசு என்ன செய்கிறது
செய்யப் போகிறது !!? முன் யோசனை வேண்டாமா!!


ஐயா ஓர் ஐயம்!
நோட்டுகள் செல்லாதென சொன்னது , சரி! வரவேற்போம்! பதிலாக வரும் புதிய நோட்டுகள், ஐநூறு
ஆயிரம் என்று வந்தால் தானே முறையாக இருக்கும் அது
என்ன இரண்டாயிரம் என்ற கணக்கு!!? இதில் ஏதேனும்
மர்மம் இருக்குமோ?


பசி வந்தா பத்தும் பறக்கும் என்பார்களே அவை என்ன! கீழே ----
மானம், குடிபிறப்பு ,கல்வி,ஈகை,அறிவுடமை,பதவி,தவம்,உயர்வு,
தொழில்முயற்சி, காதல் என்பனவாம்!


திருமிகு இராகுல் காந்தி அவர்கள்
வங்கியில் வரிசையில் நின்று செல்லாத நோட்டை மாற்றினார்
இது, செய்தி!
ஆகா! என்ன எளிமை! ஒரு பழமையான தேசியக் கட்சியின்
எதிர்காலத் தலைவர் மக்களோடு தானும் ஒருவராக நின்று ,(செலவிற்கு பணமில்லாமல்) நோட்டை மாற்றிக் கொண்டது
கண்டு நாடே பாராட்டுகிறது! இது ஒன்றே இவரது அரசியல் முதிர்ச்சிக்கு , எடுத்துக் காட்டு! இதற்கு மேலும் நான் விளக்க
வேண்டுமா! கடவுளே மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!


ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!


புலவர்  சா  இராமாநுசம்  

Sunday, November 6, 2016

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!


ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!


புலவர் சா இராமாநுசம்

Saturday, October 29, 2016

உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும் ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்!



காவேரிக்காக அறவழி போராட்டம்!
-----------------------------------------------
உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும்
ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்
பொறுமைக்கும் அளவுண்டாம் எண்ணிப் பாரீர் –துயர்
போக்கிட ஒன்றென திரண்டு வாரீர்


மூத்தாரா இளையாரா பேதம் வேண்டாம் –தன்
முனைப்பிங்கே அணுவளவும் அறவே வேண்டாம்
காத்திட வேண்டாமா நமது உரிமை –இதைக்
கண்ணென எண்ணுதல் ஆமே! பெருமை

அழுதாலும் தவறென்று சொல்லி நம்மை -இனியும்
அடக்கிட அதிகாரம் முயலும் உண்மை!
எழுவீரா தொழுவீரா எண்ணிப் பாரீர் –நம்மின்
எதிர்கால நிலையெண்ணி திரண்டு வாரீர்!

சிதறிய தேங்காயாய் இருத்தல் நன்றோ –உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இன்றோ!?
பதறியே எழுந்திட வேண்டும்1 அன்றோ!-மேலும்
பார்ப்பதா வேடிக்கை நாளும் நன்றோ!

தொடர்கதை ஆகுமுன் முடிவெ டுப்பீர் –எனில்
தூண்டிலில் மீனெனத் துடிது டிப்பீர்!
இடர்தனை நீக்கிட எண்ணிப் பாரீர் –ஒன்றாய்
இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, October 27, 2016

இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன் இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்


இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன்
இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்
பனிக்கின்ற கண்களுடன் கண்ணீர் சிந்த-நாட்டில்
பாராது கண்துயிலும் அரசோ! இந்த-நிலையில்
கனியிருக்க காய்தேடும் கயமை போன்றே—சற்றும்
கலங்காமல் தேர்தலிலே கருத்தை ஊன்ற-கண்டு
நனிதுயரில் வாடுபவன் பாடம் தருவான்-நாளை
நடப்பதை எண்ணிடுவீர் ! துயரம் மறவான்!


புலவர் சா இராமாநுசம்

Friday, October 21, 2016

அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும் அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்



அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும்
அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்
உளமகிழ என்நன்றி மலரை ஏற்பீர்- பொங்கும்
உணர்வுகளை உரைத்திடவே இயலா! காப்பீர்!
வளம்திகழ வாழ்வாங்கு வாழும் வரையில்-ஐயன்
வள்ளுவனின் சொற்படியே முடிந்தவரையில்
நலம்திகழ நடந்திடுவேன் உறுதி! உறவே-மீண்டும்
நவில்கின்றேன் நன்றியென ! அறியேன் கறவே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 19, 2016

என் பிறந்தநாள் இன்று! வாழ்த்துங்கள் உறவுகளே!



உறவுகளே! வணக்கம்
இன்று என் பிறந்தநாள்! நேற்றோடு எண்பத்து மூன்று முடிந்து ,இன்று எண்பத்து நான்கு தொடங்குகிறது! வலைத்தள
நண்பர்களும் முகநூல் அன்பர்களும்தான் என்னை வாழ வைக்கும்
தெய்வங்கள்! வாழ்த்துங்கள்! நான் வாழும் வரை உங்களை மறவேன்!
அன்பன், புலவர் சா இராமாநுசம்

Sunday, October 9, 2016

என்னதான் நடக்குது நாட்டினிலே –செய்தி ஏதேதோ வந்திட ஏட்டினிலே!



என்னதான் நடக்குது நாட்டினிலே –செய்தி
ஏதேதோ வந்திட ஏட்டினிலே
தன்னாலே வெளிவரும் தயங்காதே-முழுத்
தகவல் விரைவிலே மயங்காதே
முன்னாலே இருந்தவை மாறிடலாம்-உறவு
முறிந்ததாய் கட்சிகள் கூறிடலாம்
பின்னாலே நடப்பதை யாரறிவார்-கூட்டு
பிரிந்திட சேர்ந்திட தடமறிவார்
(என்னதான் நடக்குது)
 

புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 4, 2016

இந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கேடாம்!


இந்தியா என்பதொரே நாடாம்-என்ற
எண்ணாத்தால் வந்ததே கேடாம்
தந்ததே மத்தியில்! கூறும் !-நீதி
தவறிய பதில்மனு பாரும்!
வெந்தது தமிழரின் உள்ளம்-நன்கு
வெளிப்பட பா.ஜா .கா கள்ளம்
சிந்திக்க வேண்டுமா இனியும்-திரண்டு
செய்தாலே அறப்போரும் கனியும்
செய்வீரா! நீர் செய்வீரா


புலவர் சா இராமாநுசம்

Sunday, October 2, 2016

அண்ணல் காந்திக்கு அஞ்சலி!


அண்ணலே காந்தி நீங்கள்-தூய
அறவழி சுதந்திரத்தை எங்கள்-இரண்டு
கண்ணெனப் பெற்றுத் தந்தீர்-ஒளிரும்
கலங்கரை விளக்கென வந்தீர்-ஆனால்
தன்னலம் மிக்கார் இங்கே-அதனை
தரமின்றி போட்டார் ! பங்கே!-எனினும்
பொன்மலர் என்றும் நீராம் –மணக்கும்
புகழ்தானே! மறையாப் பேராம்
வாழ்க காந்தி நாமம்!


புலவர் சா இராமாநுசம்

Saturday, September 24, 2016

இன்று புரட்டாசி சனிக்கிழமை! எனவே, இப்பாடல்!




இன்று புரட்டாசி சனிக்கிழமை! எனவே, இப்பாடல்!

ஏழுமலை வேங்கடேசா கோவிந்தா-போற்றி
எழுதுகின்றேன் பெருமாளே பாவிந்த
வாழும்வரை நான்மறவேன் கோவிந்தா-நான்
வாழ்வதெல்லாம் உம்மாலே பாவிந்தா
பாழுமனம் மட்டுமேனோ கோவிந்தா- நாளும்
பரிதவிக்க விடுவதேனோ! பாவிந்தா
சூழுமலை எங்கனமே கோவிந்தா –மக்கள்
சுற்றிவர ஒலிப்பதொன்றே கோவிந்தா!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 21, 2016

முகநூல் பதிவுகள்!


ஆற்றின் நீர் வற்றி நடப்பவர் பாதங்களை சுடுகிள்ற அளவுக்கு
வெயில் காய்ந்தாலும் மணலை தோண்டினால் நீர் சுரக்கும் என்பது
தற்போது பொருந்தாது! காரணம்? ஆற்றில் மணல் இருந்தால் தானே!
அதைத்தான் அரசியல் வாதிகளும் மணற் கொள்ளையரும் முற்றிலும்
சுரண்டி எடுத்து விட்டார்களே!

கொத்துக் கொத்தாக மலர்ந்தாலும் மணமில்லா த மலரைப்போல,
எவ்வளவுதான் நூல்களைக் கற்றிருந்தாலும், அதனைப் பிறருக்கு
எடுத்துச் சொல்ல இயலதவன், கற்றவனாக , கருதப்பட மாட்டான்!
என்பதாம்!

உறவுகளே
மிகச் சிறிய கூழங்கல்லானாலும் தண்ணீரில் விழுந்தால்
நேராக தரைக்கு சென்று அமையாகி விடுகிறது! ஆனால், எவ்வளவு
பெரிய தக்கையானாலும் மேலும், மேலும் நீர் வந்தாலும் மிதக்கவே
செய்கிறது! அதுபோல, நம்,நம்முடைய வாழ்க்கையில், இன்பம் வரும்போது ,கல்லாக ,அமதியாக அடக்கத்தோடு மகிழ்ந்தும்,துன்பம் வரும்போது துடிதுப் போகாமல் மூழ்காத தக்கைபோல தாங்கிக்
கொண்டும் வாழப் பழக வேண்டும்!


சமீபத்தில் ஒரு பதிவினைப் படித்தேன்!
வானம் பெய்து மழை நீர் வெள்ளமாக ஓடி கடலில் கலக்கா
விட்டால் பெரிய கடலும் தன்னுடைய வளத்தை இழந்து விடுமாம்!
என சொல்வதாக! இதைத்தான் வள்ளுவர் பெருமானும் வான் சிறப்பு அதிகாரத்தில் வெகு அழகா
நெடுங் கடலும் தன் தன்னுடைய நீர்மைகுன்றும் என்பதை அன்றே சொன்னார்! நம் முன்னோர் அறிவியலை எவ்வளவுதூரம் அறிதுள்ளார் !என்பது மிகவும் வியக்க தக்கதல்லா!


அளவுக்கு மீறிய சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகளின் ஆசையே
ஊழலுக்கு காரணமாகும் !ஊழல் குற்றச் சாட்டில் வழக்கு பதிவு செய்யப் பாட்டலே போதும் ,அவர்கள் நிரந்தரமாக.அதன் பின்
வாழ்நாள் முழுதும் ,தேர்தலில் நிற்க முடியாது என நிரந்தர தடை
ஏற்பட்டாலே ,அதன் மூலம் பயம் வந்து பெருமளவு ஊழல்
குறைந்து நேர்மையான அரசியல் வாதிகள் பொது வாழ்வுக்கு
வருவார்கள்! செய்வார்களா?


நெருப்பும் நீரும் ஒன்றாக இருக்க முடியாது! நீர் பட்டாலே நெருப்பு
அணைந்து விடும்!ஆனால் நீரால் உருவாகி, நீரை தன்னகத்தே கொண்டுள்ள மேகம் மழையைப் பெய்ய முனையும் போது ஒன்றுடன் , ஒன்று மோத , தோன்றும் மின்னலும் இடியும் நெருப்புதானே! இது, விந்தையாக உள்ளது அல்லவா!


உறவுகளே!
இன்றைய சமுதாயத்தில் நாம் எப்படி வாழ்ந்தால் தக்குப்
பிடிக்க முடியும்! எண்ணிப் பார்த்தால்,தண்ணீரில் வாழும் மீனாக
இருந்தால் ,இயலாது! தரையில் விழுந்தால் வாழ்வு முடிந்து விடும்!
எனவே, தண்ணீரிலும் வாழ்ந்து தரையிலும் வாழுகின்ற தவளையை
போல ,நம்மை, நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்! அப்படி இருந்தால்
தான் ஒரளவாவது நாம் அமைதியாக வாழ முடியும்!


புலவர்  சா  இராமாநுசம்   

Saturday, September 17, 2016

இரங்கல் கவிதை!



கொள்ளிவைக்கப் பெற்றார்கள்! மகனே உன்னை-ஆனால்
கொள்ளிவைத்து கொண்டாயே நீயே தன்னை
அள்ளியுனை மார்பணைத்துப் பாலும் தந்த-இங்கே
அன்னையவள் வற்றாத கண்ணீ சிந்த
துள்ளுகின்ற வயதுனக்கே! துடிக்கும் தந்தை-உற்றார்
தோழரேன பல்லோரும் வெடிக்க சிந்தை
சொல்லுகின்ற ஒன்றல்ல விக்னேஷ்! துயரம்-உண்மை!
சொல்லியினி பயனில்லை திரும்பா உயிரும்!


புலவர் சா இராமாநுசம்

Thursday, September 15, 2016

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம் இணைந்தால் போதும் நன்றாக!


இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவரும் ஒன்றென செய்வீரே-பெரும்
அறப்போர்! நடத்திடின் உய்விரே!


வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
பார்ப்பதா..?புறப்படும்! இப்போதே
பிணியது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப்
பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 13, 2016

பாரதப் பிரதமருக்கு பணிவான வேண்டுகோள்!


மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்
ஏக இந்தியாவாக பாரதம் இருக்க வேண்டு மென்றால் ?
இமயமுதல் குமரிவரை உள்ள அனைத்து நதிகளையும் நாட்டின்
தேசிய உடமையாக ஆக்க உடன் ஆவன செய்யுங்கள் இதுதான்
உரிய நேரம் ! தேவைக்கு மேல் மிருக பலத்தோடு உள்ள உங்கள்அரசுக்கும் தமிழக அரசும் இன்னும் பலரும் பக்க பலமாக வருவார்கள் என்பது உறுதி !பாராளு மன்றத்தை கூட்டி இக் கருத்தை
சட்டமாக்க வேண்டியது உங்கள் கடமை! உங்கள் புகழ் என்றும் வராற்றில் இடம்பெறும்! சட்டமாக்கி நடைமுறைப் படுத்த வல்லுனர்
குழுவையும் அமையுங்கள் எதிர்கால இந்திய ஒருமைப்பாடு உங்கள் கையில் தான் உள்ளது! மீண்டும் பணிவோடும் ,கனிவோடும்
வேண்டுகிறேன் நிரந்திரத் தீர்வு இது ஒன்றேதான் அத்துடன்  நதி அனைத்தையும்  இணைக்க,

பகுதி பகுயாக இணைக்க உரிய  திட்டங்களை  வகுத்து   போர்க்கால  நடவடிக்கையாக  என்ன செய்ய வேண்டுமோ அதையும்  செய்வது  உங்கள்   முக்கி  கடமையாகும்  சிந்தியுங்கள்!
செயல் படுங்கள் வருங்கால வரலாற்றில் உங்கள் பெயர்  பொன்  எழுத்தாக  பொலிவு  பெறும்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, September 12, 2016

அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


இனிமேலும் காவிரிநீர் வருமா மென்றே –நாம்
எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம் நன்றே
கனியேது காயின்றி அறிதல் இன்றே –சற்றும்
கனியாது கன்னடரின் உள்ளம் ஒன்றே
பணியாது நீதிக்கும் அறிந்து கொள்வோம் –காவிரி
பயிர்காக்க மாற்றுவழி கண்டால் வெல்வோம்
அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ
அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


புலவர் சா இராமாநுசம்

Friday, September 9, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
சுவை மிகுந்த பழங்கள் தோட்டத்தில் இருந்தாலும் காக்கைகள், பழுத்த வேப்பழத்தையே விரும்பி உண்ணும் அது
போல ஒருவரிடம் நல்ல குணங்கள் பல இருந்தாலும் , வீணர்கள்
சிலர் அவரிடம் உள்ள இரண்டொரு தீய குணத்தையேப் பெரிது
படித்து கூறுவர்!

கோள் சொல்வதே வழக்கமாக கொண்டவனிடம் சொல்லும்
செய்தியானது, காற்றொடு கலந்த நெருப்புமாதிரி மிவும் வேகமாக
பரவும்! ஐயமில்லை!

உறவுகளே!
கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை இணைந்து ஒரேப்
பொருளைப் பார்ப்பது போல கணவன் மனைவி என இருவரும்
எண்ணுவதும்,செய்வதும் ஒன்றாகவே அமையுமானால், அக் குடும்பம் இனியதாக அமையும்

கல்லால் ஆன தூண் பாரம் அதிகமானால் , உடைந்து நொறுங்குமே
தவிர வளைந்து கொடுக்காது! அதுபோல மானமுள்ளோர், மானக்கேடு வரும்போது உயிரை விட்டாவது மானத்தைக் காப்பார்

கல்லாத மக்களுக்கு , கற்றுணர்ந்தார் சொற்களும், அறவழி செல்லார்க்கு அறமும் , வாழைக்கு தான் ,ஈன்ற கனியும் , கணவனுக்கு
இசைந்து ஒழுகாத மனைவியும் கூற்றுவனாக(எமன்) ஆவார்கள்

உறவுகளேடு
பழமொழிகள்!நம் முன்னோர்கள் காலம் தொட்டு, வழி வழியாக
வழங்கி வருபவை பலவாகும்! அவைகள் நேரடியாக பொருள் தருவது ஒன்றானாலும் வேறொன்றை சுட்டுவதே உண்மை! ஒரு நிகழ்வு நடை பெற்று,முழுதும் வெளிப் படாவிட்டலும்,கொஞ்சம்
வெளி வந்தாலும் அது மறைக்கப் படும் போது இப்படி சொல்வதுண்டு
நெருப்பு இல்லாமல் புகையாது, அள்ளாம குறையாது என்று
சொல்வார்கள் !இல்லையா!


புலவர்  சா  இராமாநுசம் 

Tuesday, September 6, 2016

முகநூல் பதிவுகள்!


மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா ! என்று கேட்கும்
மனிதன் தானே, தன் மகன் நடைபழக நடைவண்டி செய்து தருகிறான்! இதனை என்ன வென்று சொல்வது!

உறவுகளே!
ஏதோ ஒரு பிள்ளைத் தமிழ் நூல் !பாடிய புலவனின் கற்பனையைப் பாருங்கள்!
நீர்நிறைந்த குளம்! அதிலிருந்த வாளை மீன் துள்ளி பக்கத்தில்
இருந்த தென்னை மரத்தின் தேங்காய் குலையில் மோத அதிலிருந்த
தேங்காய் ஒன்று தெறித்து போய் தேவருலகில் உள்ள கற்பக மரத்தில்
மோத, மரம் குலுங்கி தன்னிடம் உள்ள தேனை மழை போலப்
பொழிய, அவை பூ உலகில் உள்ள ஊரின் தெரு வெங்கும் ஆறாக ஓடின, என்பதாம்---இவ்வாறு பாடுவது உயர்வு நவிற்சி அணி
ஆகும்


பசித்துப் புசி என்று ஒரு வரியில் சொன்னவன் எவ்வளவு அறிவாளி!
ஒருவன், வேளைதோறும் பசி எடுத்தபின் உண்டு வந்தால் நோயின்றி வாழலாம்! கால நேரம் காணாமல் கண்டதை எல்லாம் பசியின்று உண்பவன்தான், இன்று பல்வகை நோய்களுக்கு ஆளாகி
அல்லல் படுகின்றான்


ஊக்கமது கைவிடேல், என்று ஔவையார் சொன்னார்! அதாவது
உன் மனவலிமையைக் கைவிடாதே என்பதாம்! ஆனால நம்முடை
குடிமகன்களோ ஊக்கம் தருவது மதுவே என்றே பொருள்
கொண்டு குடித்துத் தள்ளுகிறார்கள்! வாழ்க குடியரசு!


பொன்னால் ஆகிய குடம் உடைந்தாலும் மீண்டும் பயன்படும்!
மண்ணால் ஆகிய குடம் உடைந்தால் எதற்கும் பயன் படாது
அதுபோல மேலாண குணமுடையோர் வறுமை அடைந்தாலும், பொன்போல
குணத்தில் மாற மாட்டார் ஆனால் கீழ்மை குணமுடையோர் வறுமை
வந்தால் மண்குடமாக மேலும் பயனற்றுப் போவர்


உடலில் பிற உறுப்புகள் நோயால் வருந்தும் போது, கண்கள் மட்டுமே அழுவது போல சான்றோர்கள் , பிறருக்கு வந்த துன்பங்களையும் தனக்கு வந்ததாகக் கருத்தி அனல் பட்ட நெய்யாக உருகி வருந்துவர்!

புலவர்  சா  இராமாநுசம் 

Sunday, September 4, 2016

ஆசிரியர் தினவாழ்த்து!

எழுத்துதனை அறிவித்தோன் இறைவன் என்றே
எழுதிவைத்த முன்னோரின் வழியில் நின்றே
அழுத்தமுற நூல்பலவும் கற்று நன்றே
ஆசிரியர் பணியேற்றார் தம்மை இன்றே
செழித்தவரும் வாழ்கயென செப்பும் தினமே
சிரம்தாழ கரம்கூப்பி சிறக்க மனமே
பொருத்தமிகு தலமகனார் இரதா கிருட்டினர்
பெயராலே செப்ப வாழ்க ! வாழ்க!


புலவர் சா இராமாநுசம்

Monday, August 29, 2016

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற எண்ணத்தால் வந்ததே கேடாம்!

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற
எண்ணத்தால் வந்ததே கேடாம்
வந்திடும் நீரெல்லாம் முற்றும்-நதியில்
வாராது தடுத்திட சற்றும்
சிந்தனை செய்வது சரியா-நாளும்
செயல்பட முனைவது முறையா
நிந்தனை செய்வதா எம்மை-நாங்கள்
நீரின்றி சாவதா செம்மை!?


புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 24, 2016

எங்கே போகுது தமிழ்நாடு-மேலும் இப்படி நடந்தால் பெருங்கேடு!


எங்கே போகுது தமிழ்நாடு-மேலும்
இப்படி நடந்தால் பெருங்கேடு
இங்கே எதுவும் சரியில்லை-கேட்க
ஏடுகள் தலைவர்கள் எவருமில்லை
பங்கே பிரித்துக் கொண்டாராம்-நாளும்
பழங்கதை எடுத்து விண்டாராம்
சங்கே ஊதியே விடுவாரோ –இவர்
சண்டையில் மக்கள் கெடுவாரோ


புலவர் சா இராமாநுசம்

Sunday, August 21, 2016

முகநூல் பதிப்புகள்!



தேவைக்கு மேலாக சூடேற்றினால் அடுப்பில் கொதிக்கும் பாலே பொங்கி அடுப்பை ஆணைத்து விடும்! அது போல, எதையும் அளவறிந்து செய்ய வேண்டும் இல்லை என்றால் முற்றிலும் கெடும்
அமுதுகூட அளவுக்கு அதிகமானால் நஞ்சாகி விடுமென்பது தானே
ஆன்றோர் வாக்கு!

ஒலிம்பிக்கில் , வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற வீர மங்கையருக்குப் பலரும் வாழ்த்து தெரிவிப்பது பாராட்டுக்குரியது
ஆனால் அரசியல் வாதிகளும் சினிமா பிரபலங்களும் பாராட்டுவது
வியப்பாக உள்ளது! இவர்கள் தங்கள் செல்வாக்கினை விளையாட்டுத்
துறையை மேம்படுத்த இதுவரை, ஏதேனும் ஊக்கமோ, உதவியோ செய்தார்களா!!! இல்லையே! இதுவும் அவர்கள் தங்களை மேலும் விளம்பரப் படித்திக் கொள்ளும் ஒன்றோ என்றுதான் கருத த் தோன்றுகிறது!

பட்டறிவுக்கும் பகுத்தறிவுக்கும் வேறுபாடு உண்டு! ஒருமுறை விளக்கைத் தொட்டு சூடு பட்ட குழந்தை மறுமுறை தொடாது! இது
பட்டறிவு! நஞ்சுண்டவன் சாவான் என்றால், அவன் மட்டுமல்ல, நஞ்சு உண்டவள், நஞ்சு உண்டவர் நஞ்சு உண்டது என, அனைத்தும்
சாவுமென அறிவது பகுத்தறிவாகும்!

தமிழக சட்னமன்ற சபாநாயகருக்கு ஒரு வேண்டு கோள்!
மாண்பு மிகு ஐயா! எதிர் கட்சி உறுப்பினர் (88 பேர்) அனைவரையும் ஒரு வாரத்திற்கு, மன்ற நிகழ்சிகளில் கலந்து
கொள்ள தடை விதித் திருப்பது அறமோ, முறையோ அல்ல! அதனை
மறுபரிசிலீனை செய்து குறைத்து அவர்களும் தங்கள் சனநாயக்
கடமையை ஆற்ற ஆவன செய்வீர்கள் ,என நாடே எதிர் பார்க்கிறது! மாண்பு மிகு முதல்வர் அவர்களும் இதில் கவனம்
செலுத்த பணிவன்போடு வேண்டுகிறேன்!


உறவுகளே!
சமுதாயத்தில் ,நாம் பிறருக்காக அஞ்சி,தவறு செய்யாமல் வாழ்வதை, விட நம் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே நேர்மையான நடமுறையாக இருக்கும்! காரணம், அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, மனைவிக்கோ
அல்லது, சமுதாயத்தில் மற்றவர்களுக்கோ அஞ்சினால் ,அவர்கள் காணாத வகையில் தவறு செய்யத் தோன்றலாம்! ஆனால் நாம், நம்
மனசாட்சிக்குப் அஞ்சினால் தவறே நடக்காது ஏனெனில் அதுதான்
நம்மோடு எப்பொழுதும் இருப்பதாகும்


மக்கள் ,நடுத் தெருவிலே நடக்காமல் நடை பாதையில் நடப்பது சட்டத்திற்கு மதிப் பளித்து , என்றால் பாராட்டுக்குரியது!
தெருவில் நடந்தால் வரும் வண்டிகள் மோதுமே என்று
அஞ்சிதான் என்றால், அது, அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி
இருக்க முடியும்! 

Monday, August 15, 2016

பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே


பாருக் குள்ளே நம்நாடே-புகழ்
பாரதம்! உண்டா அதற்கீடே
ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று
ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
போற்றியே புகழ்ந்து மறுநாளே
யாருக்கும் நினைவில் வாராதே-இனி
என்றும் இந்நிலை மறாதே


வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
வந்தே மாதரம் ஊருக்காம்
தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
தன்னல மிக்கோர் ஈண்டுசில
சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
செப்பும் நிலையே ஆனதென
நிந்தனை செய்து என்னபலன்-இந்த
நிலையை மாற்ற எவருமிலன்

வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
வேதனை தீர்ந்தது என்றாலும்
கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
கொடுமை அந்தோ மிகப்பட்டே
தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
தொடர்கதை யாகப் போயிற்றே
எல்லை மீறின் தன்னாலே-நாம்
இழப்போம் அனைத்தும் பின்னாலே

கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
கலப்படம் செய்யவும் சுதந்திரமே
வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
விடுதலை நோக்கி நடைபோட
நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
நாளில் வரமே தரவேண்டும்

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, August 14, 2016

தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ தன்னைக் காக்க மறந்தானே


தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ
தன்னைக் காக்க மறந்தானே
அமிழ்தைத் தந்தவன் எதனாலே-நீங்கா
ஆழ்ந்த துயில்கொள பறந்தானே
இமையின் இருவிழி நீர்சிந்த –துடிக்கும்
இதயம் தாங்கா துயர் முந்த
எமையேன் மறந்தாய் குமாரநீ-முற்றா
இளந்தளிர் முத்து குமராநீ


புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 3, 2016

காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும் காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!


பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமி தம்மை –நாளும்
பாலியல் பலத்காரம் செய்யும் உம்மை!
கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக்
கொடுயோர்க்கு தண்டணை! அதுவே எல்லை!

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும்
மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!
புலராத விடியல்போல் இருளே சூழும்-அந்த
புண்பட்ட இளங்குறுத்து எவ்வண் வாழும்!

காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும்
காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!
ஆமிதுவே! அறிவீரே! திருந்தப் பாரீர்-பெற்ற
அன்னையவள் பெண்தானே ! எண்ணிக் காரீர்!

செய்தித்தாள் செப்புவது நாளும் இதையே- என்ன
செய்வதெனத் தெரியாமல் திகைத்தல் விதியே!
உய்தித்தான் வந்திடுமா….? ஏங்கும் உள்ளம்- மனித
உருவத்தில் மிருகமா….? துயரே கொள்ளும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, July 15, 2016

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்!


ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி வந்திட இக்கவிதை-ஐயா
நவின்றேன் இங்கே காணுமிதை!
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
தேவை அளவே நீர்சேர்த்தே,
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
படையல் இட்டுத் தொழுவாரே!


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
ஒன்றே சொல்வேன் உழுவாரை-இவ்
உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
அகத்தில் அதனைக் கொள்வீரே!

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
உலக வாழ்வே முடங்கிவிடும்!
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்,
வருவாய் ஒன்றும் நிலையன்றோ!
எழவே முடியா நட்டத்தில்-அரசு
எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
அனைவரும் வருகிறார் நகர்தோறும்!

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
அரசு செய்யுமா சொன்னாலே!
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
தவறின் பஞ்சம் ஈண்டமே

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 13, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
ஓடாத கடிகாரத்திலே மணி, பார்த்தா அது யார்தப்பு! கடிகாரத்தின் தப்பா! பார்த்தவன் தப்பா!? ஆனால் வீணாக கடிகாரத்தை குறை சொல்வார்கள், இப்படித்தான் சிலர் தம்
குறையை உணராமல் அடுத்தவர்கள் மீது சுமத்துவார்கள்

எரியும் விளக்குக்கு எண்ணை ஊற்றினால்தானே மேலும் , எரிந்து கொண்டே இருக்கும்! இல்லை யென்றால் திரியும் எரிந்து ,அவிந்து தானே போகும்! அப்படித்தான் நாம் செய்யும் பணியும் , முயற்சியும் ஆகும்! நம் கவனம் சிதறினால் அனைத்தும் பாழாகி கெட்டு விடும்!

உறவுகளே !
பாதம் பூராவும் நெருஞ்சி முள் குத்தினாலும் பாதக மில்லை! துடைத்துவிட்டு மேலே நடக்கலாம்! ஆனால் குத்தியது வேலி காத்தான் முள் என்றால் !!? அப்படியே விடமுடியுமா! அது, விடமாயிற்றே !பாதத்தை பாதுகாக்க உரிய முறையில் ஆவன செய்யத்தானே வேண்டும் !அதுபோல நம் வாழ்கையில் நாள் தோறும் பல நிகழ்வுகள் நடக்கின்றன , அவை களில் சிலவற்றை நெருஞ்சி முள்ளாக எண்ணி ஒதுக்கி விடலாம்! சில, வேலிகாத்த முள்ளா இருக்குமானால் சரிசெய்ய உரிய நடவடிக்கை உடன் எடுப்பதுதான் நன்று!

உறவுகளே!
மகளைப் பறி கொடுத்து விட்டு நொந்து நூலகிப் போன தந்தை
மகளின் ஒன்பதாம் நாள் காரியம் செய்ய சீரங்கம் சென்றால் , அங்கேயும் போய், ஊடக செய்தியாளர்கள் , அவரிடம் செய்தி சேகரிக்கவும் பேட்டிகாணவும் முயன்றது ஊடக தர்மம் தானா?

உறவுகளே!
சட்டமும் பாதுகாப்பும் எவ்வளவுதான் பலமாக அமைத்தாலும் தனி மனித ஒழுக்கம் குறையக் குறைய குற்றங்கள் கூடிக் கொண்டேதான் போகுமே தவிர குறைய வாய்பில்லை! எனவே, நாம் வாழும் சமுதாயத்தில் , தனிமனித ஒழுக்கத்தை வளர்க நாம் அனைவரும் தனது கடமையாக எண்ணி பாடுபட வேண்டும்.

உறவுகளே!
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இப்தார் விருந்தில் கலந்து கொள்ள, நந்தம் பாக்கம் சென்ற போது. அவர் இல்லம் விட்டு(5.40 மணி,மாலை)கிளம்பி ,நிகழ்ச்சி முடிந்து இல்லம் திரும்பிச் செல்லும் வரை, சுமார் 2, மணி நேரத்துக்கு மேல் இருபுறமும் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது என்ற செய்தி உண்மையா!!? இது முதலவருக்குத் தெரியுமா? தெரியாது என்றே கருதுகிறேன்! இத்தகைய செயல்கள் மக்களுக்கு வெறுப்பே ஏற்படுத்தும்! என்பது முதல்வர் அவர்களுக்கு நன்கு தெரியும்! எனவே உடன் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக் அறிவுறுத்தி. இனியும் , இவ்வாறு நடக்காமல் செய்வது மேலும் பெருமை சேர்க்கும்!

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, July 6, 2016

வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!


வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க
வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!
ஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்
எல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானென்று நடக்கின்ற நாடுமது மிங்கே- மக்கள்
தடம்மாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனன்றாம் கொட்டுவது தேளாகும்! இங்கே –நாளும்
திகைப்போடு கேட்கின்றார் அரசுகள் எங்கே?


கால்கிலோ காய்கூட வாங்கிடவே இயலா –ஏழைக்
கண்ணீரைத் துடைத்திட யாருமே முயலா!
நாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு காணா-சாகா
நடைப்பிணமே! அவன்வாழ்வு! கண்டுமதை நாணா!
ஆள்வோரே! கண்மூடி துயிலொன்று கொண்டால்? –ஆள
ஆதரவு தந்தார்க்கு செய்கின்ற தொண்டா?
மாள்வாரா மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்
மட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்!

நஞ்சாக ஏறிவிட நாள்தோறும் அந்தோ –தெரு
நாய்போல அலைகின்றார் உள்ளமதும் நொந்தே!
பிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்
பேசியே திரிகின்ற பித்தனாய்ப் போனார்!
பஞ்சாக அடிபட்டும் பறந்திடு வாரோ –மீண்டும்
பட்டதனை தேர்தலில் மறந்ததிடு வாரோ?
அஞ்சாது நடக்காதீர்! ஆள்வோரே ஈண்டும் –உடன்
ஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Sunday, July 3, 2016

வலையைக் கொண்டே தினந்தோறும்-தன் வாழ்வை நடத்திடக் கடலோரம்!


வலையைக் கொண்டே தினந்தோறும்-தன்
     வாழ்வை நடத்திடக் கடலோரம்
அலையைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையே தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையா! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, July 2, 2016

நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!


நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது
நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!
தேள்போலும் கொட்டுவதோ ஊடகச் செய்தி –தாளைத்
திறந்தாலே தலைப்பினிலே முதலில் எய்தி!
வாள்போல அறுக்கிறது ! வாட்டத் துயரம்-மக்கள்
வாழ்கின்றார் !அச்சமே நாளும் உயரும்!
ஆள்கடத்தல் நடக்கிறது அடியாள் வைத்தே –உடன்
அடக்கிடவீர் ஆள்வோரே பொறியும் வைத்தே![


புலவர்  சா  இராமாநுசம்

Friday, June 24, 2016

முகநூல் பதிவுகள் !

தென்னை மரத்தில் ஒருத்தன் ஏறி தேங்காய் பறிக்க முயல காவல்காரன் ஓடி வருவதைக் கண்டு அவசரமாக  இறங்கினான், காவல்காரன் கேட்டான் ! ஏண்டா மரத்திலே ஏறின ! திருடன் பதில் சொன்னான்! புல் பிடுங்க! என்றான் காவல்காரன், ஏண்டா தென்னை மரத்திலா புல்லிருக்கும் என்று கேட்க , இல்லை! அதான் இறங்கி வரேன்னு, திருடன் பதில் சொன்னான்! இது, எப்படி இருக்கு! இப்போ நாட்டு நடப்பைப் பார்த்தேன்! எழுதினேன்!


ஒரு குடும்பத்தலைவி , தங்கள் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்தும் இல்லத்திற்கு வரும் உறவினர்களை( தன் வழியும் கணவன் வழியும்) வரவேற்று வேறுபாடு காட்டாமல் விருத்தோம்பியும் கணவனோடு பெற்ற மக்களையும் பேணி பாதுகாத்து தினமும் இறைவனைத் தொழுபவளாக் இருக்க வேண்டும்

கடித்தது நாயா இருந்தால் கையில் கிடைத்ததை கொண்டு விரட்டி அடிக்கலாம்! கடித்தது செருப்பா இருந்தா ? என்ன செய்வது! இப்படித் தான் , நம் வாழ்கையிலும் பல செயல்கள் நடக்கின்றன! அவற்றுள் நாம் ஒரு சில வற்றுக்கு மட்டுமே எதிர் வினை செய்ய முடியும்! சிலவற்றுக் பொறுத்து அமைதி காக்கத் தான் வேண்டும்!

அறிஞர் அண்ணா அவர்கள் மாநில சபையில் பேசும்போது . மாண்பு மிகு பாரதப் பிரதமர் நேரு அவர்களிடம் , நீங்கள் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் போன்றவர், நானோ கெட்டிக் கிடக்கின்ற செங்கல்லைப் போன்றவன் , என்று, தன்னடக்கத்தோடு குறிப்பிட்டார்! இன்று அவர் பெயரைக் கொண்டும் ,கொள்கைவழி நின்றும் நடப்பதாகச் சொல்லும் ஆளும் கட்சியும் ,எதிர் கட்சியும் .குறைந்த அளவேனும் அவர் காட்டிய கண்ணியத்தை அவையில் கடை பிடித்து நடக்க, ஓட்டளித்த மக்கள் எதிர் பார்க்கிறார்கள்!!!?

கச்சத் தீவு பிரச்சனையில் இரு கட்சிகளும் வீண் விதண்டா வாதம் செய்து சட்டமன்ற நேரத்தைப் பாழாக்குவதில் எவ்வித பயனும் இல்லை !இனி , அதனைத் திரும்ப , பெறும் வாய்ப்பு மிகவும் குறைவே! உடன் ஆற்ற வேண்டிய பணி, மீனவரின் வாழ்வாதாரம் வளம்காண உரிய வழிதனை , என்ன வென ஆய்வதே உங்கள் இருவரின் செயலாக வேண்டும்! செய்வீர்களா!?

புலவர்  சா  இராமாநுசம்
 

Wednesday, June 22, 2016

முகநூல் பதிவுகள்!



உறவுகளே!
யார் குற்றவாளி !!?
நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்
இந்த இருவரில் யார் குற்றவாளி?

உறவுகளே நல்ல நட்பு எப்படி இருக்கும்!!?
இடுப்பில் கட்டிய வேட்டி நழுவும்போது கை தானாகவே ஓடி அதனை நழுவாமல் பற்றிக் கொள்வதைப் போல, ஒருவன் தன்னுடைய நண்பனுக்குத் துன்பம் வரும்போது தானாகவே ஓடிச் சென்று உதவி துன்பத்தை நீக்குவதாக இருக்க வேண்டும்!

தேனை உண்ணத்தான் வண்டு பூ வைத்தேடி வருகிறது என்பது பூவுக்குத் தெரியாவிட்டாலும் கவலையில்லை! ஆனால் பூவையர்க்குத் தெரியாவிட்டால் ...! விளைவு விபரீதம் தானே!

உறவுகளே!
யார் குற்றவாளி !!?
நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்
இந்த இருவரில் யார் குற்றவாளி?

வண்டியில் பயணம் போகிறோம் ! பாதையில் நான்கு வ ழி சந்திப்பு வருகிறது நடுவிலே ஒரு கம்பம் !அது நான்கு திசைகளையும் காட்டுவதோடு அவ் வழி எந்த ஊருக்குப் போகும் என்பதையும் காட்டுகிறது! நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே போக நாம்தானே முனைய வேண்டும் அதுபோல நம் வாழ்க்கைப் பாதையிலும் சிலபேர் கைகாட்டி மரமாகத்தான் இருப்பார்கள்! இருக்க முடியும்! எனவே நாம்தான் முடிவு செய்ய வேண்டும்

முதல்நாளே ஆரம்பமாகி விட்டதா அமளி !? சட்டமன்றத்தில் ! இனி வரும் ஐந்தாண்டுகளும் இப்படித்தான் போகுமா! கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுவதுதானே முறை! எதற்காக உறுப்பினர் திருமிகு செம்மலை அவர்கள் சமஸ்கிரதம் பற்றி தேவையில்லாமல் பேசி பிரசன்னையை உருவாக்க வேண்டும்!
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதனை கட்டுப் படுத்த கனிவோடு வேண்டுகிறேன்!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, June 19, 2016

முகநூல் பதிவுகள்!


அன்பே! உன் பெயர்தான் அன்னையா!!!!?
கூவத்தையும் காவிரியையும் ஒன்றாக எண்ணி ஏற்றுக் கொள்ளும் கடல்போல, தன் ,மகனோ மகளோ நல்லவர்களோ தீயவர்களோ என்று பாராமல் ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவளே   உன்பெயர்தான் அன்னையா!!!?

ஓர் அரசு மக்களுக்குப் எப்போதும் நீதிநெறியோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்! அப்படி இருந்தால், அதுவே(ஆட்சி முறை) அரசைக் காப்பாற்றும்! (குறள்கருத்து)

பணம் பத்தும் செய்யும் என்பார்கள்! அதில் ஒன்று , ஆளவும் செய்யும் என்பது புலனாகிறது

எப்படியோ, ஆளும் கட்சியும் பலமான எதிர்க் கட்சியும், என இரண்டு அணிகள் உருவாகி விட்டன ! வரவேற்போம்! ஆனால் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு சட்ட மன்றத்தை போர்க்களமாக ஆக்காமல் சனநாயக முறைப்படி நடத்திச் செல்லுமாறு இருதரத்தாரையும், நடக்க வேண்டுகிறோம் .மேலும், இதனை மக்கள் அறிய அவை நிகழ்ச்சிகளை அப்படியே நேராக தொலைக்காட்சியில் அஞ்சல் செய்தால் , தவறு செய்வது யாரென்று மக்களும் அறிவர்! செய்வீர்களா!

ஊழல் ஊழல் என்று சொல்றாங்களே எது ஊழல்! ஊழலே செய்யாத மனிதர் உலகில் யாருண்டு!!? ஒருவரைக் காட்ட முடியுமா ! தான் செய்வது ஊழலே என்று உணராமலேயே பலரும் செய்வதும் அதுவே மற்றவர் செய்யும் போது ஊழலாக தெரிவதுதான் ஊழல் என்று நினைப்பதுதான் இன்று மனித சமுதாயத்தின் இயல்பாகப் போய்விட்டதே ! கள்ளமார்க்கட்டில் டிகட் வாங்கி சினிமா பார்ப்பதேகூட ஊழலுக்குப் போடப்படும் விதையல்லவா!!!? யாரேனும் இதனை எண்ணிப் பார்த்த துண்டா?

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, June 15, 2016

இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள் இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்!

இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள்
இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்
ஒருபத்து மாதமே சுமந்தநல் தாயே -சற்றும்
ஓயாமல் நொந்து புலம்பிட வாயே
தருமத்தில் வாழ்ந்தது நம்தமிழ் நாடே -இன்று
தலைகீழாய் ஆனது யார்செய்த கேடே
எழுவர்க்கு விடுதலை என்றுமே இல்லையோ?!-அன்னார்
இருக்கின்ற வரையிலே இறப்புதான் எல்லையோ?!


புலவர் சா இராமாநுசம்

Friday, June 3, 2016

ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?



உண்மையிலே சாதிதன்னை ஒழிக்கும் எண்ணம் –இங்கு
உருவாக வில்லையெனில், ! அழிக்கும்! திண்ணம்!
அண்மையிலே நடக்கின்ற நிகழ்வு எல்லாம்- அதற்கு
ஆதார மானதென காட்டும் சொல்லாம்!
புண்மைமிகு அரசியலே காரணம் ஆகும் –சாதிப்
புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே போகும்!
வண்மைமிகு சட்டத்தால் பயனே இல்லை! –நாளும்
வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ எல்லை!


ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித
உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?
ஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்ம லாட்டம் –கட்சி
அரசியலார் அனைவருமே கொள்ளும் நாட்டம்!
ஏட்டளவில் கொள்கையென திட்டம் போட்டே –அறியா
ஏழைகளை ஏமாற்றி ஓட்டு கேட்டே!
நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை
நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 1, 2016

அன்பின் இனிய உறவுகளே-நீவீர் அளித்த மறுமொழி ஆக்கங்களே!



அன்பின் இனிய உறவுகளே-நீவீர்
அளித்த மறுமொழி ஆக்கங்களே!
என்பின் தோலென என்நெஞ்சில்-நன்றே
இணைந்திட ஓடின மனஅஞ்சல்!
இன்பின் வழிவரு ஊக்கத்தால்-கவிதை
எழுதுவேன் இயல்பென நோக்கத்தால்!
துன்பின் தொடர்பினை அறுத்தீரே-இன்றே
துவண்டிடா வண்ணம் தடுத்தீரே!

 
புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 31, 2016

ஏனோ தெரிய வில்லை –என்ன எழுதுவது புரிய வில்லை!



ஏனோ தெரிய வில்லை –என்ன
எழுதுவது புரிய வில்லை
தானே ஓடி வரும் –கருத்து
தடுமாற துன்பம் தரும்
மானோ மருண்ட தென்றே – எந்தன்
மனமின்று இருண்ட தின்றே
கானோ அறியதே நானும் –நொந்து
கலங்குவதை நீரறிய வேணும்


புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, May 24, 2016

நடந்தது நடந்து போக –இனியே நடப்பது நலமாய் ஆக!


நடந்தது நடந்து போக –இனியே
நடப்பது நலமாய் ஆக
அடமது துளியும் இன்றே- புதிய
ஆட்சியை நடத்திச் சென்றே
விடமது ஏறல் போன்றே –நாளும்
விலைவாசி உயரா ஒன்றே
தடமது காண வேண்டும் –ஆட்சி
தழைத்திட செய்வீர் ஈண்டும்


எதிர்கட்சி என்றால் எதையும் -உடனே
எதிர்ப்பது அல்ல அதையும்
மதிப்பது அளித்து ஆய்ந்தே-நாட்டு
மக்களின் நலமது ஓர்ந்தே!
விதிப்படி ஏற்றுக் கொண்டோ-அல்லதன்
விளைவினை விளக்கி விண்டோ
கொதிப்பது இன்றி அவையை-இருவரும்
கொள்கையாய் நடத்தின் சுவையே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 18, 2016

போட்டாச்சி போட்டாச்சி ஓட்டே -இனியார் கேட்டாலும் கிடக்காது ஒட்டே!



போட்டாச்சி போட்டாச்சி ஓட்டே -இனியார்
கேட்டாலும் கிடக்காது ஒட்டே!
வாட்டாது வாழ்விக்கும் அரசே-அடுத்து
வருமென்று கொட்டுக முரசே!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, May 15, 2016

வள்ளுவர் வாக்கு குறள் வழி நோக்கு!


உறவுகளே!
         வள்ளுவர் வாக்கு!

       கெடுதல் இரண்டு வகையில் வரும்! செய்யாத் தகாத செயலை செய்வதனாலும் வரும்! செய்ய வேண்டிய செயலைத் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாது விட்டாலும் வரும்
                               எனவே
        இச் செயலை இந்த வகையில் இவன் செய்வான் என்பதை ஆய்ந்து அச் செயலை அவனுக்குத் தருவது நன்று!
 

சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்! உங்களுப் புரிந்தால் சரி!

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, May 14, 2016

இடையில் இருப்பது இருநாளே-மேலும் எண்ணில் தேர்தல் திருநாளே!



இடையில் இருப்பது இருநாளே-மேலும்
எண்ணில் தேர்தல் திருநாளே
தடையில் ஓட்டுப் போடுதலே- அன்றும்
தவறின் பின்னர் வாடுதலே
விடையில் கேள்வி ஆகிவிடும்-என்றும்
வேதனை மிகுதியாய் நோகவிடும்
படையுள் வீரரின் கைவாளாய் -வாக்கைப்
பயன்தர ஆவன செய்வீரே!


புலவர் சா இராமாநுசம்

Friday, May 13, 2016

நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார் !



நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே
நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார்
நடக்கின்ற வாக்குறுதி அதிலேசில உண்டே –அதையே
நன்றாக சிந்தித்து, செய்தக்கார் கண்டே
விடையாக யாரென்று நீர்காண வேண்டும் –அன்னார்
வெற்றிக்கு வழிதன்னை உள்ளத்தில் பூண்டும்
தடையின்றி தக்கதோர் வழிசெய்ய ஈண்டும் –யாரும்
தவறாமல் வாக்கினை வழங்கிட வேண்டும்!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 11, 2016

வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே !


வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன்
வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே
தாங்காதே தாங்காதே மேன்மேலும் துயரம் –அதனால்
தணியாது எரியாதோ மக்கள்தம் வயிறும்
ஏங்காதே பின்னலே விலைவாசி ஏறின்- என்றே
எண்ணியே தெளிவாக ஆராய்ந்து தேறின்
தூங்காது விழிப்போடு போடுவாய் ஓட்டே- நன்றே
தேர்தலில் உன்னுடை உரிமையாம் சீட்டே


புலவர் சா இராமாநுசம்

Monday, May 9, 2016

பாதை மாறிப் போனால் பயணம் கெட்டுப் போகும்


பாதை மாறிப் போனால்
பயணம் கெட்டுப் போகும்-மிக்க
போதை ஏறிப் போனால்
புத்திக் கெட்ட தாகும்
தீதை நீக்க ஓட்டே
தேடி வரினும் கேட்டே -நீயும்
பேதை அல்ல காட்டே
பெறுவ தவலம் நோட்டே


புலவர் சா இராமாநுசம்

Sunday, May 8, 2016

அன்னையர் தின நினைவுக் கவிதை!



அன்னையர் தினம்!

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?


உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

Friday, May 6, 2016

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!


இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்
   இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!
அன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்
   அன்னையவள் தாரமவள் மறந்தா?  போனேன்!
குன்றன்ன துயர்தன்னை நெஞ்சில்  உற்றேன்-ஆனால்
    குறைதீர இருமகவை நானும் பெற்றேன்!
நன்றென்னைக் காக்கின்றார் எனதுப் பெண்கள்-என்றும்
    நலன்பேண நான்காணும்  இரண்டு கண்கள்!

செம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ!-தனிமை
     சிறைபட்டு  கிடக்கின்றேன் நானும்  இன்றோ!
வெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்
    வேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால!
அம்பலமே இல்லாத  ஆடல் தானே-இன்று
    ஆயிற்றே என்நிலையும்! வாழ்தல் வீணே!
எம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்
    எல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்!

துடுப்பில்லா தோணியென விட்டுச் சென்றாள்-எட்டா
    தொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்!
பிடிப்பில்லா வாழ்கையிது! எதற்கு வேண்டும் –மனம்
    பேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்!
நடிப்பிப்லா  நாடகமே என்றன்  வாழ்வே –நான்
    நடைப்பிணமே! விரைவாக  வருமா  வீழ்வே!
இடுப்புள்ள கைபிள்ளை  ஆனேன்  இன்றே –இனி
    இறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே!
                         
புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, May 4, 2016

ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!


கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிகவே
கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!
உற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்மின்
உரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்!

கடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதிலே
கண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்!
நடந்திட்ட தீமைபல! காரணம் யாரே! –மேலும்
நடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே!

எரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா
ஏற்றதென கேட்போரே! தெளிவாய் உள்ளி!
புரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு
போடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே!

இன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே
எழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே!
ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே
உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Sunday, May 1, 2016

மேதினி போற்றிடும் மேதினமே –உந்தன் மேன்மைக்கே ஈடில்லை ஒருதினமே



மேதினி போற்றிடும் மேதினமே –உந்தன்
மேன்மைக்கே ஈடில்லை ஒருதினமே
நாதியில் உழைபார்க்கே என்றநிலை- என்றே
நவின்றிட்ட துயரமோ இன்றுயிலை
வீதியில் ஊர்வலம் வந்தபடி -ஒன்றாய்
விண்முட்டும் ஒலியோடு ஏந்தகொடி
மேதின வாழ்த்தோடு பேதமின்றி- உலகம்
மெச்சிட தம்முள்ளே சேதமின்றி


புலவர் சா இராமாநுசம்

Friday, April 29, 2016

ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!



ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு என்றா ஆளும்!


பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, April 28, 2016

வேண்டுவன் தினமும் கதிரோனே-இவ் வேதனை தாங்காயிம் முதியோனே!


ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறே –அனலை
அள்ளித் தந்தால் எவ்வாறே!?
ஈண்டே நாங்கள் வாழ்ந்திடவா –இல்லை
இன்னல் பட்டே மாயந்திடவா!
பூண்டும் கருகிப் போனதுவே –எரியும்
புகையில் நெருப்பென ஆனதுவே!
வேண்டுவன் தினமும் கதிரோனே-இவ்
வேதனை தாங்காயிம் முதியோனே!


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 24, 2016

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம் பாதம் பட்டால் சுடும் மண்ணில் !



கோடைக் காலம் வந்து துவே -எங்கும்
கொளுத்திட  வெய்யில்  தந்த துவே !
ஆடை முழுதும் நனைந் திடவே -உடல்
ஆனதே குளித்த தாய் ஆகிடவே !
ஓடை போல நிலமெல் லாம்- காண
உருவம் பெற்று வெடித் தனவே !
வீ(ட்)டை விட்டே வெளி வரவே -மனம்
விரும்பா நிலையை அனல் தரவே !

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே -அற
பசுமை முற்றும் நீங்கி டவே !
உச்சியில் வெய்யில் வந்த தெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்ட தனல் !
மூச்சை இழுத் தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயி லென -வெதும்பி
செப்பிட வார்தை செவி விழுமே !

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும் மண்ணில் !
எத்தனை வேகம் காட்டு கின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடு கின்றார் !
இத்தனை நாள் போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக் குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே !

வற்றிய நீர்நிலை இல் லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல் லாமே !
பற்றி எரிய முற்ற றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ் சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றி டவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசி யாலே !

புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு)

Thursday, April 21, 2016

நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!


நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்


புலவர் சா இராமாநுசம்

Tuesday, April 19, 2016

செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா!


செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

வருகின்ற தேர்தலில்
தருகின்ற வாக்கினை-ஆய்ந்து
தருவீரா நீங்கள் தருவீரா!
புரிவீரா நீங்கள் புரிவீரா -இனி

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

ஏமாற்ற இலவசம்
என்பதே! உணர்ந்துடன் –பதவி
தாமற்ற தருவதே உணர்வீரா!
நாமற்ற யாதென உணர்வீரா- உடன்
செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

தரமில்லா கூட்டணி
தகவில்லா காட்சிகள் நமக்கு
வரமல்ல! சாபமே அறிவீரா!
நிறம்மாறும் பச்சேந்தி! புரிவீரா!-என

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

புலவர் சா இராமாநுசம்

Monday, April 18, 2016

வாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து வாழ்ந்தால் வருந்தோம் துயர்புயலால்ச


வாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து
வாழ்ந்தால் வருந்தோம் துயர்புயலால்
தாழ்வதும் உயர்வதும் அதுபோன்றே-ஆய்ந்து
தணிவதும் பணிவதும் மிகநன்றே
ஊழ்வினை என்றென எதுவுமிலை-எனவே
ஊக்கமாய் முயன்றால் ஏதமிலை
சூழ்வது எதுவும் இவ்வாறாம் – எடுத்துச்
சொல்வதென்! வாழ்வே செவ்வாறாம்


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 17, 2016

தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!


தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை
தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!
இனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்
இளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்!
பனிவிலக வெம்மைதரும் கதிரோன் போன்றே –எனைப்
பற்றிநின்ற துயர்படலம் விலகித் தோன்ற!
நனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ்
நாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்!


புலவர் சா இராமாநுசம்

Friday, April 15, 2016

கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!


கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி
கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!
ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்
ஒருசிலர் நோட்டினைத் தந்திடுவார்!
ஆட்டமே களைகட்டும்! பாருமிங்கே- நடக்கும்
அரசியல் வேடிக்கை! ஊதசங்கே!
நாட்டையே மேலும் நாசமாக்கும் –நாளும்
நஞ்சென விலைவாசி மோசமாக்கும்!


வாணிகம் ஆயிற்றே தேர்தலின்றே –மக்கள்
வளமுற வாழ்கின்ற நாளுமென்றே!
நாணிடும் உள்ளமே காணவில்லை –ஏனோ
நல்லவர் அக்கரைப் பூணவில்லை!
தேன்தேடி மலர்தனில் திரியும்வண்டே-பதவித்
தேன்தேடும் பித்தராம் ! திரியக்கண்டே!
ஏனில்லை மாற்றமே! நம்மிடையே – வருமா
எழுச்சியும் ஆற்றலும் நம்மிடையே!

புலவர் சா இராமாநுசம்

Thursday, April 14, 2016

சித்திரைத் திருநாள் வாழ்த்து


இத்தரை மீதினில்
சித்திரைப் பெண்ணே
எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
என்னென்ன புதுமைகள் தந்தாய்

எண்ணிப் பதினொரு
இன்னுயிர் தோழியர்
நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
நடந்து வருவதும் என்னே

ஆண்டுக் கொருமுறை
மீண்டும் வருமுன்னை
வேண்டுவார் பற்பல நன்மை-அது
ஈண்டுள மக்களின் தன்மை

இல்லாமை நீங்கிட
ஏழ்மை மறந்திட
வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
கொல்லாமைத் தந்திடு வாயே

ஏரிக்குள மெல்லாம்
எங்கும் நிரம்பிட
வாரி வழங்கிடு வாயா-வான்
மாரி வழங்கிடு வாயா

புலவர் சா இராமாநுசம்
(மீள்பதிவு )

Monday, April 11, 2016

முகநூல் பதிவுகள்!





உறவுகளே!
வயது என்பதைத் தண்டிய நான் பல தேர்தல்களை பார்த்து விட்டேன்! ஆனால் தற்போது நடக்க இருக்கின்ற தேர்தலைப்போல
மிகவும் கேவலமான நிலையினை இதுவரை கண்டதில்லை!இங்கு நாளும் நடை பெற்ற கூட்டணி கூத்துகளும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுக்கு, ஒன்று சளைத்தல்ல என்பது போல அலைந்த அவலமும்,
மக்கள் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுவதோடு சீட்டுப் பங்கீடும், அனைவருக்கும் பதவி ஆசை! என்பதை விட பதவிவெறியும்
  பிடித்து ஆட்டுகிறது என்பதே உண்மை!
எதிர்காலத் தமிழகம் என்ன ஆகுமோ !!!?




உறவுகளே ஓர் ஐயம்!
இதுவரை எல்லா அரசியல் கட்சிகளும் இலவசம் கொடுப்பது கூடாது அவ்வாறு கொடுப்பது மக்களைக் கெடுப்பது என்றும் இன்று
பேசுவது பெரும்பான்மை ஆகிவிட்டது! ஆனால் ஒவ்வொரு குடிசை வீட்டிற்கும் ஒரு மின் விளக்கே அனுமதித்துள்ள அரசு தொலைகாட்சி பெட்டி ,கிரைண்டர், மிக்ஸி என பலமின் இணைப்புகளை வைத்துக் கொள்ள அனுமதித்து எப்படி ( மீட்டர் ) இல்லாமல் என்று யாரும் கேட்க வில்லையே !என்பதுதான் என்னுடைய ஐயம்! யாரும் அப்படி கேட்கமாட்டார்கள்! அப்டிக் கேட்கும் கட்சிக்கு குடிசை வாசிகளின் ஓட்டு வருமா!!!?


நினைக்கத் தனக்கு என்பார்கள்! அதன் பொருள் என்ன! ஒருவன் தன் உள்ளத்தில், அடுத்தவன் கெட வேண்டுமென நினைத்தால் அது அவனுக்கே வந்து சேரும்! அடுத்தவனும் வாழட்டும் என்று நினைத்தால் இவ்வனும் வாழ்வான்! என்பதாம்! இதையேதான் வள்ளுவரும் , உள்ளுவ(து) எல்லாம் உயர்வுள்ளல் என்றார்

உறவுகளே!
வணக்கம்!
அனைவரும் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையே! அதற்காக நாம் பெரிதாகச் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! முதலில் நாம் அனைவரையும் மதித்து நடந்தாலே போதும் !பிறகு , பாருங்கள்!பிறர் நம்மை மதிப்பது
உங்களுக்கே தெரியும்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...