Saturday, October 15, 2011

மீண்டும் எழுந்தது போராட்டம்

   

 மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
   மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
  துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
  வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
  சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
   தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
   தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
   என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
   புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
   சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
   அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
   போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
   உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
   மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
   தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
   தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரே-உடன்
     மகிழ்ந்து போற்றி குதிப்பாரே!

               புலவர் சா இராமாநுசம்

 

Friday, October 14, 2011

புலத்தில் வாழும் தமிழருக்கும்



    புலத்தில் வாழும் தமிழருக்கும்-வேறு
      புலத்தில் வாழும் தமிழருக்கும்
    உளத்தில் உள்ள குறைநிறைகள்-நான்
      உணர்ந்ததின் விளைவே இக்கவிதை
    வளத்தில் சிறந்த யாழ்மண்ணில்—மீள
      வளமொடு திகழ யாழ்தன்னில்
   குளத்தில் நீரிலாத் தாமரையாய்-வன்னிக்
      குடிகள் சுருளக் காண்பதுவோ
  
   தீதோ தவறோ தெரியாதே-துயர்
       தேங்கிட நெஞ்சில் புரியாதே    
   ஏதோ என்னுள் தோன்றுவதை-இங்கே
       எழுதிக் கவிதையாய் ஊன்றியிதை
   வாதோ  செய்திட தரவில்லை-பிடி
       வாதமும் பிடித்திட வரவில்லை
   மோதா வகையில் உடன்கூடி-பேசி
       முடிவை எடுப்பீர் நலன்நாடி
  
   வெளிப்படை யாக எழுதிவிட-நான்
       விரும்ப வில்லை பழுதுபட
   களிப்பிலா மக்கள் வன்னியிலே-உடன்
       காத்தவர் பெற்றிட நன்னிலையே
   அளிப்பதே அனைவரின் முதற்கடனே-என
       ஆவன செய்வோம் நாமுடனே
   தெளிவுற ஒன்றாய் கூடுங்கள்-என்ன
        தேவையோ அதனைத் தேடுங்கள்
  
   ஒன்று பட்டால் வாழ்வுண்டே-நீர்
        உணர்ந்து செய்வீர் இத்தொண்டே
    நன்று இச்செயல் நடக்கட்டும்-அதனால்
        நாட்கள் சிலபல கடக்கட்டும்
   இன்று தேவை எண்ணீடுவீர்-நம்
        எதிரியைப் பிறகே வென்றிடுவீர்
  கொன்றுத் தின்ற கொடும்பாவி-அவன்
       கொடுப்பான் விரைவில் உடலாவி
          
                     புலவர் சா இராமாநுசம்
    
        
 

Thursday, October 13, 2011

மீண்டு(ம்) வருவார் அறிவீரே


 மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
  மகிழும் பக்சே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
  மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
  வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
  புலவனின் சாபம் ஆவீரே

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
  கெட்டவ உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
  பழியும் பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும் எண்ணாதே-மேலும்
  வேதனை எதையும் பண்ணாதே நீ 
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
  தோல்வியே உனகுலம் விளங்காதாம்

அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
  அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
  வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
  கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
  வீழப் போவது நீங்கள்தான்

                    புலவர் சா இராமாநுசம்
மீள் பதிவு
  

 

Tuesday, October 11, 2011

முடிந்தது வாழ்வுப் பாதையென...

 
முடிந்தது வாழ்வுப் பாதையென - உன்
முயற்சி முறியா நிலமையென
ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் 
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டும்

பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
பார்த்து விரும்பத் தக்கோனாய்
துணிவு ஒன்றே துணையாக - நீ
தொடர்ந்தால் செயலை முறையாக
மணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி
மாலைத் தானே வரமுயலும்
அணிசெய் தங்க விலைபோல - நீ
அவனியில் உயர்வாய் நாள் போல

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
துவள வேண்டாம் அப்படியே
ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
ஏணியின் படியென தேறிடுவாய்
காப்பது நம்மை நாமேதான் - நம்
கண்ணைக் காப்பது இமையேதான்
ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
எண்ணிச் செயல்பட தவறாதே

செய்யும் தொழிலே தெய்வமென - நம்பி
செய்யின் எவரும் உய்வோமென
பொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த
பொன்னுரை தன்னை மனங்கொண்டே
மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
மேதினி தன்னில் ஏதுகுறை
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
அறிந்து நடப்பின் இல்லைபழி

Monday, October 10, 2011

கடிகாரம்


       

 சுற்றும் உலகம் தன்னோடு-முள்
   சுற்றி வருமே என்னோடு
 சற்றும் நேரம் தவறாமல்-கதிர்
   சாய இரவும் வாராமல்
இற்றை வரையில இருந்திலவே-நேரம்
   எதுவென மனிதர் அறிந்திடவே
ஒற்றைக் கையில் கட்டிடுவார்-வீட்டில்
  உயர சுவற்றில மாட்டிடுவார்

ஆமாம் என்பெயர் கடிகாரம்-மக்கள்
  அடிக்கடி பார்க்க மணிநேரம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
   தடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
   தடைபட என்விசை கெட்டுவிடும்
நாமா காரணம் அவர் கோபம்-ஏனோ
   நம்மிடம் வருவது பரிதாபம்

எத்தனை வகையில் என்னுருவம்-கால
   இயற்கையில் மாற பலபருவம்
அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
   அழகாய் அமைத்துளார் மற்றபடி
சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
   சாந்தமாய் இருப்பார் பலபேரே
புத்தகம் போடலாம் எம்பெருமை-அறிய
   போதுமே காலத்ததின் தம்அருமை

வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
  வேதனை விளைந்திட ஆக்காதீர்
போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
  போனக் காலமா திரும்பிவரும்
காணார் வாழ்வில் முன்னேற்றம்-என
  கண்டும் தெளியார் பின்,ஏற்றம்
பூணார் என்றுமே ஏமாற்றம்-இதை
   புரிந்தவர் வாழ்வில் வருமாற்றம்
     
         புலவர் சா இராமாநுசம்
 
     

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...