Saturday, June 2, 2012

மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்!


உண்ணும் உணவும் நஞ்சாகும்-நாம்
     உட்கொள்ளும் மருந்தும் நஞ்சாகும்
எண்ணும் எண்ணமும் நஞ்சாகும்-நம்
     எழுதும் எழுத்தும் நஞ்சாகும்
கண்ணும் பார்வையால் நஞ்சாகும்-சில
     கருத்துகள் கூட நஞ்சாகும்
பண்ணும் பாடலில் நஞ்சாகும்-இறை
    படைப்பில் சிலவும் நஞ்சாகும்

காற்றும் இன்றே  நஞ்சாகும்-அலை
    கடல்தரும் உணவும் நஞ்சாகும்
தூற்றும் குணமே நஞ்சாகும்-உற்ற
    துணையே சிலருக்கு நஞ்சாகும்
போற்றும் போலிகள் நஞ்சாகும்-சேர்த்த
    பொருளும் சிலருக்கு நஞ்சாகும்
ஆற்றல் மிகுதியும் நஞ்சாகும்-ஏதும்
    அறியா நிலையும் நஞ்சாகும்

உற்றார் சிலரும்  நஞ்சாகும்-பெற்ற
      உரிமையும் கூட நஞ்சாகும்
பெற்றவர் பிள்ளைக்கே  நஞ்சாகும்-சில
      பிள்ளைகள் அதுபோல் நஞ்சாகும்
கற்றநல் கல்வியே நஞ்சாகும்-அதை
      கல்லார் வாழ்வும் நஞ்சாகும்
மற்றவை பலவே நஞ்சாகும்-இதை
     மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்


            புலவர் சா இராமாநுசம்


Thursday, May 31, 2012

அவலம் அவலம்! அவலம் தானே!-

அவலம் அவலம்! அவலம் தானே!-இங்கே
  அரசியல் கட்சிகள்! காட்சிகள்! தானே!
கவலை கவலை! கவலை தானே!-நாம்
  காண்பது இன்றே கவலை தானே!

மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
   மக்கள் மத்தியில் மறியல் தானே!
புத்தியில் மக்களாய்  ஆனோம் தானே-நாம்
   புரிந்தும் மறந்து போவோம் தானே!

அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
    அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
   சுரணை இலையெனக் காட்டு கின்றார்!

பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
    பேசிட கேட்கவும் நாதி இல்லை!
சீரின்றி மின்கட்டணம் உயர்ந் ஒல்லை-அதைச்
   செப்பிடின் வருவதோ பீதி எல்லை!

போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
   போடும் இங்குள ஊடகம் தானே!
கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
   கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!

மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
   மாமியார் உடைத்ததும் மண்கு டமாம்!
அருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
   ஆர்பாட்டம் செய்வது அருவ ருக்கும்!

இரட்டை  வேடமே போடு கின்றார்-இங்கே
   ஏழைக்குக் கேடே தேடு கின்றார்!
அரட்டை அரங்கமே ஆகின் றதாம்-நமை
   ஆளவோர் செயலும் போகின் றதாம்!

மௌனம்  சம்மதம் என்ப தல்ல-மக்கள்
   மனதில் இருப்பது மறதி யல்ல!
கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
   கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!

                                 புலவர் சா இராமாநுசம்


Wednesday, May 30, 2012

ஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு!


ஓடு மனிதா நீஓடு-இவ்     
  உலகம் அழியா வழிநாடு!
தேடு மனிதா நீதேடு-உன்
  தேவை எதுவோ அதைநாடு!

சுயமாய் சிந்தனை செய்வாயா-உன் 
  சொந்தக் காலில் நிற்பாயா?
பயமே இன்றி செயலேற்று-நல்
  பயன்தரக் காண்பாய் நீயாற்று!

தோல்வி வரினும் துவளாதே-உடன்   
   தொடர்ந்து முயலத் தயங்காதே!
வேள்வி என்றே பாடுபட- வரும்
   வேதனை முற்றும் தவிடுபட!

முயற்சி ஒன்றே உருவாக்கும்-நம்    
   முன்னோர் மொழிந்தத் திருவாக்கும்!
அயற்சி போக்கும் அறிவாயா-நாளும்
  அவ்வழி செயலும் புரிவாயா!

இன்னார் இனியர் பாராதே-ஏதும்     
   இல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
  உதவின் அதுவே பேரளவே!

அன்பின் வழியது உயிர்நிலையே-நம்    
   ஐயன் சொன்னது பொய்யிலையே!
என்பும் தோலைப் போர்த்தியதே-அன்பு
   இல்லா உடம்பு ஆகியதே!

காலமும் இடமும் கருதிடுவாய்-ஏற்றக்    
  காரிய மாற்ற முனைந்திடுவாய்!
ஞாலம் போற்ற வாழ்ந்திடுவாய்-நாடு
   நலம்பெற பல்வழி சூழ்ந்திடுவாய்!


                   புலவர் சா இராமாநுசம்

 


 

Monday, May 28, 2012

ஏழரை நாட்டுச் சனிபோல!


ஏழரை நாட்டுச் சனிபோல-விலை
  ஏறின பெட்ரோல் நனிசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
   என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
   வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம்  பயனென்ன!?-இக்
  கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
   பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
  தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
  பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
  பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
   மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
   இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
  தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
   போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

               புலவர் சா இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...