Saturday, August 22, 2015

திருப்பதிக்கு போனநான் நாராயணா –வணங்கி திரும்பி வந்தேன் உடல்நொந்து நாராயணா!


திருப்பதிக்கு போனநான் நாராயணா –வணங்கி
திரும்பி வந்தேன் உடல்நொந்து நாராயணா!
நெருக்கடியில் சிக்கிவிட்டேன் நாராயணா =பெரும்
நீள்வரிசை தள்ளுமுள்ளு நாராயணா!
உருப்படியாய் சேதமின்றி நாராயணா-மீள
உன்னருளே காரணமாம் நாராயணா!
திருப்படிகள பலகடந்து நாராயணா-உன்னை
தேடிவந்து காண்கின்றார் நாராயணா!


பாத்தயிடம் எல்லாமே நாராயணா-கண்ணில்
பக்தர்களே தென்பட்டார் நாராயணா!
மூத்தவர்க்கு தனிவரிசை நாராயணா-ஆனால்
முறையாக நடக்கவில்லை நாராயணா!
காத்திருக்கும் மக்களவர் நாராயணா- எங்கும்
கணக்கிடவே இயலாது நாராயணா!
நாத்தழும்பு ஏறிவிட நாராயணா-உந்தன்
நாமந்தான் ஒலிக்கிறது நாராயணா!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 19, 2015

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை



நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்
நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்
தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்
தோற்றதெவர் வென்றதெவர்! ஆயவதென்ன! விடிவில்!

கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...