Friday, September 30, 2011

எனது ஊரே எதுவெனக் கேட்பீர்


எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் ஏதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம்
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில் தோன்றிடும் சிறப்பே
செப்பிட இதுதான் என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும் உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம்
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி

புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 28, 2011

எனது தாய்மொழி

எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 27, 2011

தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு



திங்களாம் தைமாதம் எங்கள்-தமிழ்
புத்தாண்டின் முதல்நாளே பொங்கல்
தங்கமாய் வந்திடும் திங்கள்-வாசல்
பொங்கலும் இடுவோமே நாங்கள்

புதுப்பானை பொலிவுற வைத்தே-நல்
பூவொடு மஞ்சளின் கொத்தே
மதிப்பாக மாலையாய் கட்டி-அந்த
மண்பானை கழுத்தினில் சூட்டி

புத்தம் புதுநெல்லைக் குத்தி-வெல்லம்
போட்டுடன் பால்பொங்கக்  கத்தி
சத்தமும் பொங்கலோ என்றே-தர
சங்கீத இனிமையை நன்றே

மாடென உழைத்திட்ட உழவன்-பொங்கல்
மாட்டுக்கும் வைத்ததைத் தொழுவன்
காடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்
கைபட பெற்றதாம் வளமும்

கொல்லும பசிப்பிணி போக்கும்-உழவன்
குறையென்ன கண்டதை நீக்கும்
ஒல்லும் வகையவன்  வாழ -அரசு
உடன்டி எண்ணுமா சூழ

குறிப்பு- சிலரது வினாவிற்குப் என்னுடைய
                                   பதில்!
                                              
                       

Monday, September 26, 2011

படைப்பை வெல்ல ஆகாதே!



சிறுவன்

மயிலே மயிலே நீயேனோ - உன்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்

மயில்

வெள்ளி வானில் கருமேகம் - பரவி
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்

சிறுவன்

அழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த
பாடும் குயிலாய் ஆகாதோ

மயில்

குயிலின் இனிமை என்குரலில் - நான்
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!

குறிப்பு- என் பேரனின் ஆசைக்கு ஏற்ப
                 எழுதிய கவிதை.
       

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...