Friday, January 17, 2014

எதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்கே வேண்டுந்தான்! எதையும்  தாங்கும்  இதயம்தான் –இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்
கதையோ  அல்ல!  உண்மைநிலை! –இன்று
    காண்பதில்! கேட்பதில் உள்ளநிலை!
உதைபடா  மீனவன்  நாளில்லை – அவன்
    உரைப்பதைக்  கேட்டிட ஆளில்லை!
இதைவிடக்  கொடுமை  வேறுண்டா –அரசுகள்
    இணைந்து செயல்படும்  வழியுண்டா!?வானம்  பொய்பினும்  பொய்யாதாம் –காவிரி
    வற்றிப்  போனதும்  மெய்யேதாம்!
தானம்  தருவதாய்  நினைக்கின்றான் –கன்னடன்
     தண்ணீர்  என்றால்  சினக்கின்றான்!
மானம்  இழந்தே  வாழ்கின்றோம் –உரிய
    மதிப்பும்  இழந்து  வீழ்கின்றோம்!
ஏனாம்  இந்த  இழிநிலையே –ஆய்ந்து
     எண்ணிட  ஒற்றுமை  நமக்கிலையே!கட்சிகள்  இங்கேப்    பலப்பலவே –காணும்
     காட்சிகள்  தினமும்  பலப்பலவே!
முட்செடி  முளைப்பது  போலிங்கே –சாதி
    முளைவிடின்,  வாழ்வதும்  இனியெங்கே?
பதவியும்  சுகமும்  பெரிதாக –நல்ல
      பண்பும்  குணமும்  அரிதாக!
உதவும்  நிலைதான்  இனியில்லை –நம்
     உயிருக்கு  கப்போ நனியில்லைகொலையோ  இங்கே  கலையாக –மாளா
     கொள்ளை  மேலும்  நிலையாக!
தலையே  கேட்பினும்  கூலிப்படை –வெட்டித்
    தந்திடும்  என்றால்  ஏதுதடை!
விலைதான்  அதற்கும்  உண்டாமே –இந்த
    வேலையே அவர்க்குத்  தொண்டாமே!
அலைபோல்  மனமே  அலைகிறதே –ஊஞ்சலாய்
      ஆடியே  தினமும்  குலைகிறதே!
             
                        எனவே
எதையும்  தாங்கும்  இதயம்தான் –இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்
                 புலவர் சா இராமாநுசம்

Wednesday, January 15, 2014

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றேமாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய்ய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்

     2011-- மீள்பதிவு
 

Tuesday, January 14, 2014

கொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன் குறையென்ன கண்டதை நீக்கும்!தைமுதலே புத்தாண்டாம் தமிழர்கென்றே -என
தமிழரிஞர் பலர்கூடி வைத்தாரன்றே
மெய்யதுவே ! உணர்ந்தனை ஏற்றார்நன்றே- இம்
மேதினியில் பொங்கலுடன் இணைத்தாரொன்றே

(சந்தம் வேறு)

புதுப்பானை பொலிவுற வைத்தே-நல்
பூவொடு மஞ்சளின் கொத்தே!
மதிப்பாக மாலையாய் கட்டி-அந்த
மண்பானை கழுத்தினில் சூட்டி!

புத்தம் புதுநெல்லைக் குத்தி-வெல்லம்
போட்டுடன் பால்பொங்கக் கத்தி!
சத்தமும் பொங்கலோ என்றே-தர
சங்கீத இனிமையை நன்றே!

மாடென உழைத்திட்ட உழவன்-பொங்கல்
மாட்டுக்கும் வைத்ததைத் தொழுவன்
காடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்
கைபட பெற்றதாம் வளமும்!

கொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன்
குறையென்ன கண்டதை நீக்கும்!
ஒல்லும் வகையவன் வாழ -அரசு
உடனடி எண்ணுமா சூழ !

புலவர் சா இராமாநுசம்

Monday, January 13, 2014

அன்பின் இனிய உறவுகளே! – உம் அனைவரின் வாழ்த்தென் வரவுகளே!
அன்பின் இனிய உறவுகளே! – உம்
அனைவரின் வாழ்த்தென் வரவுகளே
இன்பின் இருப்பிடம் என்னுளமே –என
இணையம் தந்தது அவ்வளமே
துன்பின் நிழலும் என்மீதே –என்றும்
தொடாது காக்கும் உம்மீதே
என்பின் பிரியாச் சதைபோன்றே-நாளும்
இருந்திட , வாழ்த்தென் புத்தாண்டே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, January 12, 2014

தைமகளே! தைமகளே! வருக! வருக!- ஈழத் தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!

தைமகளே!  தைமகளே!  வருக! வருக!- ஈழத்
    தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!
கையிகந்து  நாள்தோறும் தொல்லை  உற்றே-சிங்கள
    கயவர்களால் எண்ணில்லா துயரம்  பெற்றே!
செய்யவழி ஏதுமின்றி தமிழர் அங்கே!- உலகு
    செப்பினாலும் கேட்பதற்கு  நாதி  எங்கே!
உய்யவழி  செய்வாயா இந்த ஆண்டே –நம்பி
    உனைப்போற்றி ,ஏற்கின்றோம்  நாங்கள் ஈண்டே!

                                      புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...