Friday, March 31, 2017

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!



ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 29, 2017

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென!



ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் 
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

Monday, March 27, 2017

கோடைக் காலம் வந்து துவே -எங்கும் கொளுத்திட வெய்யில் தந்த துவே !




கோடைக் காலம் வந்துதுவே -எங்கும்
கொளுத்திட  வெய்யில்  தந்ததுவே !
ஆடை முழுதும் நனைந்திடவே -உடல்
ஆனதே குளித்த தாய்ஆகிடவே !
ஓடை போல நிலமெல்லாம்- காண
உருவம் பெற்று வெடித்தனவே !
வீ(ட்)டை விட்டே வெளிவரவே -மனம்
விரும்பா நிலையை அனல்தரவே !

பச்சைப் பயிரும் பொசுங்கிடவே -அற
பசுமை முற்றும் நீங்கிடவே !
உச்சியில் வெய்யில் வந்ததெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்டதனல் !
மூச்சை இழுத்தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயிலென -வெதும்பி
செப்பிட வார்தை செவிவிழுமே !

பத்து மணிக்கே பகல்தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும்மண்ணில் !
எத்தனை வேகம் காட்டுகின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடுகின்றார் !
இத்தனை நாள்போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்குஇந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக்குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக்குள்ளே !

வற்றிய நீர்நிலை இல்லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல்லாமே !
பற்றி எரிய முற் றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ்சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றிடவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசியாலே !

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...