Friday, November 24, 2017

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும் தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட



தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவையே
சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-இன்றே
அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்மின்
சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்


புலவர் சா இராமாநுசம்

Thursday, November 23, 2017

விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும் விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!



விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை ஏதோ பதிவை- நாளும்
     எழுதிகிறேன்! வலைதன்னில்! வாட்ட, முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    பொறுத்திடுவீர்  தக்கோரே! வருக! வருக!

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, November 22, 2017

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –ஆளுநர் பார்வையிடும் அதிகாரம்! அதுபோல் ஆகும்!



பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் ஆளுநர்
   பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்!

தொழுதுகெட்ட ஆட்சி-போல எதையும் தாங்கும்-ஏழை
    தொல்லைகளோ குறையாது ! எவ்வண்  நீங்கும்
 அழுதுகிட்டே  மீன்பிடிக்கும்  மீனவன்  சாக -அவன்
    அல்லல்பட கண்டாலும் காணா தாக

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் ஆளுநர்    பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்!

பொழுதுமுட்ட  குடிக்கின்றான்   கவலை  அகல இல்லம்
   போனபின்னர்  அவன்செயலை  எடுத்துப்   புகல!
விழுதுகளாம்  பிள்ளைகளும்  மனைவி  என்றே படும்
    வேதனையை  விளக்குவதும்  எளிதும்  அன்றே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் ஆளுநர்    பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்!
                                             
நஞ்சுண்ட  விவசாயி  கண்டோம்  இன்றே வரும்
    நாட்களிலே  நடக்குமிது  காணும் ஒன்றே!
பஞ்சுண்டு  நெய்வதற்கும்  ஆலை யுண்டே ஆனா
    பலநாளாய்  மூடியது   அரசின்  தொண்டே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் ஆளுநர்    பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்!
 
 
  

                       
                          புலவர்  சா  இராமாநுசம்

Monday, November 20, 2017

முகநூல் பதிவுகள்



யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! இது பழமொழி! அதுபோலத் தான் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடக்கிறது ,இதிலே என்ன வியப்பு இருக்கிறது ஒத்திகை தானே

உறவுகளே!
வள்ளுவர் கூட பொய் சொல்ல லாம் என்று சொல்கிறாரே! உண்மைதான்! ஆனால், எப்பொழுது
என்றால், ஒருவன் தான் சொல்லும் பொய்யானது யாருக்கும் தீமை தராதவகையில் பெரும் நன்மையை தரும் என்றால் தவறல்ல! என்பதே மேலும் அதாவது உண்மை ஆகாது,!ஆனால் அதனை உண்மையின் இடத்தில் வைத்து ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்

ராஜீவ் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரே கருணை காட்டுமாறு
சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தை ,கண்டு மனித நேயத்தோடு,சோனியா அவ ர்கள் மன்னிக் வேண்டுகிறோம்

உறவுகளே
தேசபிதா என்று மக்களால் போற்றப் பட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டுவதாக, வந்துள்ள செய்தி உண்மை என்றால், இந்த நாடு
எங்கே போகிறது! ஆளும் மத்திய அரசு இதனை
தடுத்து நிறுத்த வேண்டாமா!!!!?

ஆளுநரின் செயல் வரம்பு மீறியதாக இருந்தாலும் ஆளும்
அரசோ அமைதியாக இருப்பதும், அமைச்சரே ஒருவர் அதில் கலந்து கொள்வதும் சனநாயகத்தில் கேலிக் கூத்தாகும் ! இது, மத்திய அரசுக்கு அழகல்ல! இதைவிட ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்துவது நன்று

ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!

உறவுகளே!
திருப்பதிக்குச் சென்று மொட்டையைக் கண்டாயா
என்று கேட்பதற்கும், செயலலிதாவின் மர்ம மரணத்தை விசாரிக்க நீதிபதி ஒருவரை நியமித்து இருப்பதற்கும் பலன் என்னமோ ஒன்றுதான்!

புலவர் சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...