Friday, November 6, 2015

வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே!



வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று
வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே
உள்ளுவரேல் உண்மைகளை ஓர்ந்தும் நன்றே-என்றும்
உணர்ந்தாலே போதுமென வாழ்வீர் இன்றே
தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டி'நல்  மறையே-உயர்
திருக்குறளே துணையென்றால் வாழ்வில்வரா குறையே
தள்ளுவனத் தள்ளி கொள்ளுவனக் கொள்வீர்-இதுவே
கொள்கையெனச் சொல்வீர் குறையின்றி வெல்வீர்!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 4, 2015

சூதும் வாதுமே வாழ்வாகும் சொல்லில் இன்றைய மனிதநிலை!



போதுமென்ற மனம் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
சொல்லில் இன்றைய மனிதநிலை!


மாறிப் போனது மனிதமனம்
மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
குணமே இன்றைய மனிதநிலை!


பற்று பாசம் எல்லாமே
பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
காண்பதே இன்றைய மனிதநிலை!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...