Saturday, March 21, 2015

முகநூல் துளிர்கள்!





காதலிக்கும் இருவரும் தொடக்கத்துலேயே எதையும் ஆய்வு செய்ய வேண்டும்! மணம் முடித்த பிறகு அவர்கள் வாழும்வரை ஆய்வு செய்வது அறவே கூடாது! அறிவுக்கும் அதிக வாய்ப்பு,வழங்கல் ஆகாது! ஒரு கண்மூடித் தனமான வாழ்க்கையே அவர்கள் மேற் கொள்ள வேண்டும்! இன்றேல் இல்லறம் நல்லறமாக அமையாது!


மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு! ஒருவகையினர் இரத்தம் போன்ற, சித்தம் படைத்தவர்கள்! அவர்கள், அடி பட்ட இடத்திலிருந்து வரும் இரத்தம் போல தமக்கு வரும் துன்பத்திற்கு மட்டுமே வருந்துவார்கள்! இன்னொரு வகையினர், உடலில் எங்கு அடி பட்டாலும் வரும் கண்ணீர் போன்றவர்கள் இவர்கள் பிறருக்கு வரும் துன்பத்தைக் கண்டும் வருந்துவார்கள்!

கண்ணை மூடிக்கொண்டு நட என்றால் முயன்றுப் பார்க்கலாம்! அதோடு காலையும் கட்டி விட்டு ஓடு என்று சொன்னால்,அதற்கும்
கட்டுப்பட முடியுமா !?அப்படித்தான்,நாம் , நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும், சில நிகழ்ச்சிகளும் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும்! அதுபோது நாம்தான் சிந்தித்துச் செயல் பட வேண்டும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 18, 2015

சுரக்கவில்லை ஐயகோ! கருணை நெஞ்சில்-எனில் சொல்வதென்ன காதடைத்தீர்! அந்தோ பஞ்சில்!


இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பன்
எழுதியது உண்மையென உணர நன்றே
அரக்கமனம் கொண்டீரா!? கைதும் செய்தீர் –விழி
அற்றவர்மேல் அடக்குமுறை அம்பை எய்தீர்
உரக்கபலர் ஆதரவுக் குரலைத் தந்தும் –ஏனோ
உணராது இருக்கயவர் உள்ளம் வெந்தும்
சுரக்கவில்லை ஐயகோ! கருணை நெஞ்சில்-எனில்
சொல்வதென்ன காதடைத்தீர்! அந்தோ பஞ்சில்


விழியில்லை என்றாலும் படித்து விட்டே –ஏற்ற
வேலைதனை நாளும்பல கெஞ்சிக் கேட்டே
வழியின்றி வந்தாராம் வீதி தேடி-அவர்
வாழ்வதற்கு அறவழியில் போரும் ஆடி
பழியின்றி அதைத்தீர்க ஆளும் அரசே-உடன்
பரிவுடனே செய்வீராம் ஆள அரசே
கழியன்று கண்ணற்றோர் கையில் கோலே-வழி
காட்டுவது அதுவன்றோ ! தருவீர் வேலை

புலவர் சா இராமாநுசம்

Tuesday, March 17, 2015

கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும் காதில்லார் அரசிதுவே துயரா? போகும்!



கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற
கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது!
எண்ணிலார் அவ்வகையர் வேலைக் கேட்டும்-இன்று
வீதிக்கு வந்தபின்பும் அந்தோ வாட்டும்!
பண்பில்லா அரசாக இருக்க லாமா-என்ன
பாவமவர் செய்தார்கள்! துயரம் போமா!
கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும்
காதில்லார் அரசிதுவே துயரா? போகும்!


புலவர் சா இராமாநுசம்

Monday, March 16, 2015

வந்துவிட்டது வந்துவிட்டது எந்தன் வலையே-நாளும் வலைச்சித்தர் தனபாலும் முயன்ற நிலையே!



வந்துவிட்டது வந்துவிட்டது எந்தன் வலையே-நாளும்
வலைச்சித்தர் தனபாலும் முயன்ற நிலையே!
நொந்துவிட்டேன் நொந்துவிட்டேன் அந்தோ பலநாள்-ஏதும்
நோக்கமின்றி வெற்றிடமாய் உள்ளம் சிலநாள்!
பந்துபட்டப் பாடாக மனமே துள்ள-மேலும்
பகலிரவு பேதமின்றி வருத்தம் கொள்ள!
தந்துவிட்டேன் பலருக்கும் தொல்லை வீணே-என்றும்
தருவீர்கள் ஆதரவு வாழ நானே!


புலவர் சா இராமாநுசம்

Sunday, March 15, 2015

முகநூல் துணுக்குள்- பகுதி இரண்டு!





உடல் அழுக்கைப் போக்க நீரைப் பயன் படுத்துகிறோம் !உடல் சுத்தமாகிறது! கூடவே ஒரு சுகமும் கிடைக்கிறது ! அது போல உள்ள அழுக்கைப் போக்க, உள்ளமும் நல்ல குணங்களில் மூழ்கி தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்! அதனால் வரும் இன்பம் தான் நிலையான நிம்மதியைத் தரும்

நன்கு படிப்பதனால் அறிவு வரலாம்!ஆனால் ஒழுக்கம் வந்து விடாது
விளக்கை ஏற்றினால் வீட்டில் வெளிச்சம் வர, இருள் போகுமே தவிர வீடு தூய்மை ஆகிவிடுமா !? கண்ணுக்குத் தெரியும் குப்பைக்களை அகற்ற கூட்டி பெருக்கத்தானே வேண்டும்! விளக்கு ,வெளிச்சத்தில் குப்பைகள் கண்ணுக்குத் தெரிவது போல நாம் கற்ற அறிவாகிய விளக்கு வெளிச்சத்தில் சமுதாய வீட்டில் காணப்படும் ஒழுங்கீனங்களை முற்றும் நீக்கி நாம் , நம்முடைய ஒழுக்கத்தை நிலை நாட்ட வேண்டும்!


விண்ணிலிருந்து வீழ்கின்ற மழைத்துளி போல, ஏதும் கலப்படமற்ற தூய நீரைப் போன்றவர்கள் குழந்தைகள்! மழைத்துளி தான் வந்து விழுகின்ற இடத்திற்கேற்ப மாறுபடுவது போல குழந்தைகளும் தான் வாழும், வளரும் சூழ்நிலைகேற்ப நல்லராகவோ, கெட்டவராகவோ ஆவார்கள் என்பதைப் பெற்றவர்கள் உணர்ந்து
தம் ,குழந்தைகளை வளர்ப்பது நன்று!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...