Saturday, July 25, 2015

நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி, நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி,
நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!
கோடான கோடிபணம் வீண்செலவு ஆக –அந்த
கொடுமையே இன்றிங்கே தொடராகிப் போக!
ஓடாகி ஏழைகளே தருகின்ற வரியும்- நாளும்
உதவாது பாழானால் வயிறன்றோ எரியும்!
வாடாது வசதியாய் வாழ்கின்ற இவர்கள்—மக்கள்
வாழ்வோடு விளையாடும் குட்டிச் சுவர்கள் !


கூடியே கலைதற்கா கொடுத்தாராம் ஓட்டே –உள்ளம்
குமுறித்தான் அழுகின்றார் மக்களும் கேட்டே!
தேடியே வந்தீர்கள் தெருவெங்கும் அன்றே –ஏனோ
தினந்தோறும் அவைதன்னில் சண்டையா நன்றே!
நாடியே நல்லதைச் செய்திட வேண்டும் –மேலும்
நாடளும் மன்றத்தை நடத்திட ஈண்டும்!
( மாண்பு மிகு பிரதமர்)
மோடியே முன்னின்று முயன்றிடல் நன்றாம் –நாடு
முன்னேற செய்வதில் முக்கிய ஒன்றாம்!
நடக்குமா???

புலவர் சா இராமாநுசம்

Friday, July 24, 2015

குடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை கொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட!குடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை
கொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட!
இடியாக ஒருசெய்தி ஏடுகளில் வருதே-மக்கள்
இதயத்தில் தாங்காத துயரத்தைத் தருதே!
விடியாத இரவாக இச்செயலும் போமோ -அரசு
விரைவாக செயல்பட்டு தடுக்காமல் ஆமோ!
கடிவாளம் இல்லாத குதிரையென திரியும்- அடங்கா
கயவர்களை தண்டித்தால் மற்றவர்க்குப் புரியும்!


இருக்கின்ற ஏரிகளும் இவ்வாறு ஆனால்-நாளை
எதிர்காலம் என்னாகும் எண்ணாது போனால்!
வெறுக்கின்ற நிலைதானே முடிவாக ஆகும்-பெற்ற
வேதனையில் எல்லாமே தலைகீழாய்ப் போகும்!
பொறுக்கின்றார் மக்களெனல்! தவறான எண்ணம் !-பாடம்,
போதிப்பர்! ஒன்றாகி! மறவாதீர் திண்ணம்!
சறுக்காது துணிவோடு செயல்படவே வேண்டும்-நல்ல
சந்தர்பம் இதுவாகும் வந்திடவே மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 22, 2015

வருகின்ற தேர்தலிலே முக்கியப் பங்கே வகித்திடுமாம் மதுவிலக்கு அதனை இங்கே!


வருகின்ற தேர்தலிலே முக்கியப் பங்கே
வகித்திடுமாம் மதுவிலக்கு அதனை இங்கே!
தருகின்ற கட்சிக்கே எங்கள் ஓட்டே
தருவோமென ஒன்றாகி மக்கள் கேட்டே!
பெறுகின்ற நிலைதன்னை செய்ய இன்றே
பெரும்பான்மை அவருக்கே தருதல் என்றே!
நெறிநின்றே ஓரணியாய் பாடு படுவோம்
நீங்காது இல்லையெனில் நாமே கெடுவோம்!


நல்லதொரு வாய்ப்பிதனை நழுவ விட்டால்
நாடெங்கும் மதுக்கடையே கண்ணில் பட்டால்!
அல்லதொரு வாழ்க்கைதான்! துன்பம் சூழும்
அழுகின்ற குடும்பங்கள் எவ்வண் வாழும்!
வல்லதொரு ஆயுதமே இந்தத் தேர்தல்
வாக்குரிமை பெற்றவர்கள உணர்த்து ஓர்தல்!
இல்லையெனில் எதிர்காலம் இருண்டே போகும்
இளையோரும் போதையிலே அழிதல் ஆகும்!

புலவர் சா இராமாநுசம்

Monday, July 20, 2015

தியாகம் தியாகமென -காந்தி தினமும் செய்தார் யாகமென!தியாகம் தியாகமென -காந்தி
தினமும் செய்தார் யாகமென!
யோகம் சிலருக் கதனாலே -அதனை
சொல்ல வந்தேன் இதனாலே!
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியியல் தனைநாடி!
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும் துயருகே ஏதுயெல்லை!


பெற்ற விடுதலைப் பறிபோகும்-அதைப்
பேணிக் காக்கும் நெறிகூறும்!
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்!
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
மனதைமூடி மறைக் கின்றார்!
அற்றவர் வாழ்வே போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம்!

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால் தப்படியே!
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக!
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணுமா சாட்சிகளே!
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆட்சியை அளியுங்கள்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...