Friday, March 18, 2016

ஆறாது அன்னவரும் வெகுண்டு எழுவர்-தடுக்கும் ஆற்றலின்றி அரசுகளும் கவிழ்ந்து விழுவர்!



ஏறுவதும் இறங்குவதும் கண்ணா மூச்சே-இங்கே
எண்ணைவிலை ஆயிற்றே! பழகிப் போச்சே-ஆனால்
மாறாது விலைவாசி ஏறல் ஒன்றும் – வாழும்
மக்களுக்கே மாறாத துன்பம் என்றும்-பதில்
கூறுவதும் இல்லையாம் ஆள்வோர் தானே -மனம்
குமுறுவது நடுத்தர, ஏழைகள் முற்றும் வீணே!-ஒருநாள்
ஆறாது அன்னவரும் வெகுண்டு எழுவர்-தடுக்கும்
ஆற்றலின்றி அரசுகளும் கவிழ்ந்து விழுவர்
!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 16, 2016

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய தேவைக்குச் செலவும் செய்வீரே!



திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
எண்ணா செயல்தரும் துயரன்றோ


மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நாமும்
குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுயமாய்,
சிந்தனை தன்னில் ஆழ்வோமே

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, March 15, 2016

மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!


காதலித்தார்! மணந்தாரே காலம் ஓடி- மாதம்
கடந்தய்யா எட்டுயென ! அதனபின் தேடி!
சாதலைத்தான் தந்ததய்யா சாதி வெறியே-வெட்டி
சாய்த்தாரே! ஐயகோ! இதுவா நெறியே!
வேதனைதான் என்றுமிது அழியா நோயா-பலர்
விழிகாண கொன்றாரே மனிதரிலே பேயா?
மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி
மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!


புலவர் சா இராமாநுசம்

Monday, March 14, 2016

வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!



வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க
வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!
ஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்
எல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானென்று நடக்கின்ற அனைத்துமே யிங்கே- மக்கள்
தடுமாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவதும் தேளாகும்! இங்கே –நாளும்
திகைப்போடு கேட்கின்றார் அரசுதான் எங்கே?


புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...