Friday, February 10, 2012

கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்


ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


(நன்றி முத்துக்கமலம்)

                    புலவர் சா இராமாநுசம்

Thursday, February 9, 2012

அன்பின் இனிய உறவுகளே!

    அன்பின் இனிய உறவுகளே!
                                                    வணக்கம்!
                இன்னும் பத்து நாட்களுக்கு மேல் நான்
                 புதிய கவிதைகளை எழுதி வெளியிடவோ
                உங்கள் வலைவழி வந்து படித்து மறுமொழி
                இடவோ இயலாத சூழ்நிலை என்பதை
                 அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் அவ்வப்போது
                மீள் பதிவாக சில பழைய கவிதைகள் என் வலைவழி
                 வரும்.

                              காரணம்

                                          வலையில் வந்தே அலையில்
                                                         மிதக்கும் கவிதைகள்
                என்ற என் நூல் வெளியீட்டு விழா நடக்கும் நாள்
                நெருங்கி விட்டதால், பல்வேறு பணிச்சுமைகளே
                ஆகும்
                                பழக்க மில்லாத பணி எனவே பல்வேறு
                 தொல்லைகள்!
                                      பொறுத்தருள்க!
                                                  நன்றி!

                                புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 8, 2012

தொலைந்தது மீண்டும் வந்ததுவே

தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே

என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்

எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்

புலவர் சா இராமாநுசம்

Monday, February 6, 2012

நாளை உமது துக்கதினம்!


மாயா மாயா மாயாவே-நீர்
     மறைந்த துயரம் ஓயாவே!
காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ
     காலன் கைவசம் ஆனீரே!
தேயா பிறையாய் மனவானில்-என்றும்
    தெரிய வாழ்வாய் குணவானே
சாயா குன்றே பதிவுலகில்-ஏனோ
     சாய்ந்தாய் நிலைப்பது எதுவுலகில்?


உன்னை நினைத்தே வாடுகின்றோம்-உம்
    உறவைப் புகழ்ந்தே பாடுகின்றோம்
என்ன துயரம் என்றேனும்-உங்கள்
    எழுத்தில் அறியோம் ஒன்றேனும்
மின்னல் இன்றி இடியொன்றே-வந்து
    மேலே விழுந்தது போலின்றே
கன்னல் எழுத்துக் கலைவாண-உமக்கு
    கண்ணீர் அஞ்சலி செய்கின்றோம்!


தனக்கெனத் தனித்திறன் மிகுந்தவரே-உறவு
    தவிக்க விண்ணில் புகுந்தவரே
மனத்துயர் ஆற்றிட மருந்துண்டா-உமை
    மறந்திட எமக்கே வழியுண்டா?
கனவென மறைந்து விட்டீரே-எம்
    கண்ணின் பார்வைக்கு எட்டீரே
அனைவரின் அழுகுரல் கேட்டீரா-ஒரு
    ஆறுதல் உரைக்க மாட்டீரா?


நாளை உமது துக்கதினம்-என
     நம்ப மறுக்குது எமதுமனம்
வேளை வந்தா? போய்விட்டீர்!-தலை
     விதியென சொல்லவா உயிர்விட்டீர்!
ஆளை எங்கே காணோமென-செய்தி
     அறியார் கேட்டால் சொல்வதென
காளை போல வலம்வந்தீர்!-என்ன
     கருத்தில் விண்ணாம் புலம்சென்றீர்!
     

             புலவர் சா இராமாநுசம்

     


           
          

Sunday, February 5, 2012

எதையும் தாங்குவோம் எத்தனை


எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றி கொடுத்த வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்
துச்சம் அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சம் இன்ற அனைவரும ஓட
மீனவர் வாழ்வில் மேன்மையும் நாட

புலவர் சாஇராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...