Friday, July 6, 2012

இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன் இதயம் திறக்க மறுக்கின்றாள்


தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொல்லையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை 
கண்முன காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள் 
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக 
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-நல் 
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினம் 
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவள 
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன் 
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என் 
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா 
பழியும் வருமே வாய்திறவாய் 

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 3, 2012

பதிவர் சந்திப்பு - சென்னை- நிகழ்ச்சி நிரல்





குறிப்பு : கவியரங்கத்தில் கலந்துகொள்ளும் தோழர்கள் 9894124021 மதுமதி(தூரிகையின் தூறல்)என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.வாசிக்கப்படும் கவிதை முப்பது வரிகளுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 

                                                       சா இராமாநுசம்

Monday, July 2, 2012

மழையே மழையே வாராயோ!



மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா! 

சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...