Saturday, September 5, 2015

ஆசிரியர் தின வாழ்த்தும், வேண்டுகோளும்!


ஆசிரியர் தின வாழ்த்தும், வேண்டுகோளும்!

அன்னையொடு தந்தைக்கு அடுத்த நிலையில்- தூய
ஆசிரியர்! இருந்தார்கள்! அன்றை நிலையில்!-இன்று
என்னநிலை பள்ளியிலே எண்ணிப் பாரீர்-அந்தோ
இதயத்தில் இடிதாக்கும் துயரம் காணீர்!-மலரா
சின்ன மொட்டும் சீரழியும் அவலம்தானே-தினம்
செய்திவரல் அழியாத கொடுமை தானே!-உடன்
இன்னல்மிகு இச்செயலை நீக்க வேண்டும்-ஆசிரியர்
இறைவன்தான் எனப்போற்ற நடக்க ஈண்டும்!


குற்றத்தை நீக்குபவர் ஆசிரியர் என்றே –முன்னோர்
கூறியதை மறையாக ஏற்பீர் நன்றே!-செய்த
அற்றத்தை மறைத்தாலும் வாழ்நாள் முற்றும்- விட்டு
அகலாது நெஞ்சத்தில் தீயாய் பற்றும்!-ஏதும்
பற்றற்ற துறவியென நடந்து கொள்வீர்-நீங்கள்
பணியாற்ற பள்ளிக்கே நாளும் செல்வீர்!-மேலும்
கற்றவழி கல்விதனை கற்கச் செய்வீர்- கடமைமிக
கண்ணியம் கட்டுப்பாடு விளங்க உய்வீர்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 2, 2015

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!


இனிய உறவுகளே !
இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே


உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!

நன்றி! வணக்கம்!
புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 1, 2015

உழுவாரே உலகத்து அச்சாணி என்றே-நன்கு உணர்ந்திட்ட பாரதப் பிரதமரும் இன்றே!


உழுவாரே உலகத்து அச்சாணி என்றே-நன்கு
உணர்ந்திட்ட பாரதப் பிரதமரும் இன்றே!
வழுவான சட்டத்தைத் திரும்பவேப் பெற்றார்-உழவர்
வாழ்ந்திட ! மனமாற புகழ்தன்னை உற்றார்!
அழுவாராய் ஓயாது கண்ணீர் விட்டே-கடல்
அலைப்பட்ட துரும்பாக அல்லல் பட்டே!
எழுவாரா என்றநிலை முன்பே உண்டாம்- அவர்
ஏற்றமுற , யாதுவழி ஆய்தல் தொண்டாம்!


நம்நாடு விவசாய நாடும் அன்றோ!-ஆனால்
நாடாள எவர்வரினும் உணர்தல் என்றோ?
தும்போடு ஓடவிட்டு வாலைப் பற்றி – மாட்டை
துரத்துகின்ற நிலைவிட்டு சட்ட மியற்றி!
தெம்போடு பாடுபட மத்திய அரசும்-திட்டம்
தீட்டியதை செயல்படுத்த மாநில அரசும்!
தம்நாடு இதுவென்றே உழவர் எழுவார்-எவரும்
தம்நிகர் இல்லையென நாளும் உழுவார்

புலவர் சா இராமாநுசம்

Monday, August 31, 2015

தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த தரணியில் மனித நேயத்தால் உய்வோம்!


இறப்பும் பிறப்பும் இயற்கையின் நியதி-என்றே
எண்ணிடில் வாரா மரணமாம் பீதி!
உறங்கலும் விழித்தலும் போன்றதே என்றே –எடுத்தே
உரைத்தவர் வள்ளுவப் பெருந்தகை அன்றே!
சிறப்பினைக் கொண்டது மானிடப் பிறப்பே- எதையும்
சிந்தித்து செயல்படின் தேவையில் துறப்பே!
அறப்பணி ஆற்றுவீர் அன்பினைப் போற்றுவீர்-மக்கள்
அறிந்திட மனித நேயத்தைச் சாற்றுவீர்!


வாழ்வும் வீழ்வும் வருவதே நம்மால் –வாழ்வில்
வாரா அணுவும் மாற்றார் தம்மால்!
ஊழ்வினை எனினும் முயன்றால் போமென-எடுத்தே
உரைத்தவர் வள்ளுவப் பெருந்தகை ஆமென!
சூழ்வினை சூழ்ந்து சொல்வதை ஆய்ந்தே-எதையும்
சொல்வதும் செய்வதும் ஒன்றென வாழ்ந்தே!
தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த
தரணியில் மனித நேயத்தால் உய்வோம்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...