Saturday, September 17, 2016

இரங்கல் கவிதை!



கொள்ளிவைக்கப் பெற்றார்கள்! மகனே உன்னை-ஆனால்
கொள்ளிவைத்து கொண்டாயே நீயே தன்னை
அள்ளியுனை மார்பணைத்துப் பாலும் தந்த-இங்கே
அன்னையவள் வற்றாத கண்ணீ சிந்த
துள்ளுகின்ற வயதுனக்கே! துடிக்கும் தந்தை-உற்றார்
தோழரேன பல்லோரும் வெடிக்க சிந்தை
சொல்லுகின்ற ஒன்றல்ல விக்னேஷ்! துயரம்-உண்மை!
சொல்லியினி பயனில்லை திரும்பா உயிரும்!


புலவர் சா இராமாநுசம்

Thursday, September 15, 2016

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம் இணைந்தால் போதும் நன்றாக!


இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவரும் ஒன்றென செய்வீரே-பெரும்
அறப்போர்! நடத்திடின் உய்விரே!


வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
பார்ப்பதா..?புறப்படும்! இப்போதே
பிணியது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப்
பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 13, 2016

பாரதப் பிரதமருக்கு பணிவான வேண்டுகோள்!


மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்
ஏக இந்தியாவாக பாரதம் இருக்க வேண்டு மென்றால் ?
இமயமுதல் குமரிவரை உள்ள அனைத்து நதிகளையும் நாட்டின்
தேசிய உடமையாக ஆக்க உடன் ஆவன செய்யுங்கள் இதுதான்
உரிய நேரம் ! தேவைக்கு மேல் மிருக பலத்தோடு உள்ள உங்கள்அரசுக்கும் தமிழக அரசும் இன்னும் பலரும் பக்க பலமாக வருவார்கள் என்பது உறுதி !பாராளு மன்றத்தை கூட்டி இக் கருத்தை
சட்டமாக்க வேண்டியது உங்கள் கடமை! உங்கள் புகழ் என்றும் வராற்றில் இடம்பெறும்! சட்டமாக்கி நடைமுறைப் படுத்த வல்லுனர்
குழுவையும் அமையுங்கள் எதிர்கால இந்திய ஒருமைப்பாடு உங்கள் கையில் தான் உள்ளது! மீண்டும் பணிவோடும் ,கனிவோடும்
வேண்டுகிறேன் நிரந்திரத் தீர்வு இது ஒன்றேதான் அத்துடன்  நதி அனைத்தையும்  இணைக்க,

பகுதி பகுயாக இணைக்க உரிய  திட்டங்களை  வகுத்து   போர்க்கால  நடவடிக்கையாக  என்ன செய்ய வேண்டுமோ அதையும்  செய்வது  உங்கள்   முக்கி  கடமையாகும்  சிந்தியுங்கள்!
செயல் படுங்கள் வருங்கால வரலாற்றில் உங்கள் பெயர்  பொன்  எழுத்தாக  பொலிவு  பெறும்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, September 12, 2016

அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


இனிமேலும் காவிரிநீர் வருமா மென்றே –நாம்
எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம் நன்றே
கனியேது காயின்றி அறிதல் இன்றே –சற்றும்
கனியாது கன்னடரின் உள்ளம் ஒன்றே
பணியாது நீதிக்கும் அறிந்து கொள்வோம் –காவிரி
பயிர்காக்க மாற்றுவழி கண்டால் வெல்வோம்
அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ
அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...