Saturday, April 19, 2014

கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!



கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக
கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!
உற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்
உரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்!

கடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதில்
கண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்!
நடந்திட்ட தீமைபல! காரணம் யாரே! –மேலும்
நடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே!

எரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா
ஏற்றதென கேட்போரே! தெளிவாய் உள்ளி!
புரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு
போடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே!

இன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே
எழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே!
ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அது
உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!


புலவர்  சா  இராமாநுசம்

Thursday, April 17, 2014

நாட்டுநிலை! இதுதானே! நம்புங்க! -தேர்தல் நாளன்று இதையெண்ணில் தெம்புங்க!



ஐயாமாரே அம்மாமா  ரேபாருங்க-எங்கும்
அமர்க்களமே ஆகிவிட ஊருங்க
பொய்யான வாக்குறதி ஏனுங்க- நம்மைப்
போடச்சொல்லி வாக்குசீட்டு தானுங்க
ஊழலென்ற வார்த்தைமிக பாவங்க!- அதை
உச்சரிக்க, அனைவருமே! கோவங்க!
சூழலென்ன! செய்யாதெவர்! கேளுங்க!-எடுத்து
சொல்லுதற்கு யாருமில்லா நாளுங்க!

ஓட்டுக்காக ஊரெல்லாம் வருவாங்க - அவர்
உருப்படியா அவங்களென்ன செய்தாங்க!
கேட்டுபலன் ஏதுமிங்கே இல்லிங்க- நம்ம
கேடுகெட்ட அரசியலே தொல்லைங்க!
போட்டுபோட்டு கண்டபலன் ஏதுங்க! ஓட்டு
போட்டபின்னர் பெற்றதெலாம் தீதுங்க
நாட்டுநிலை! இதுதானே! நம்புங்க! -தேர்தல்
நாளன்று இதையெண்ணில் தெம்புங்க!


புலவர்  சா இராமாநுசம்

Monday, April 14, 2014

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!




 உறவுகளே! எழுத இயலாத நிலை!  ஆனாலும் இன்று ஏதேனும்
தரவேண்டும் என்ற  ஆசை! எப்போதோ  எழுதியது


            இத்தரை மீதினில்
            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...