Friday 9 September 2011

காதல் போயின்


காதல் போயின் சாதல் நன்றே-இது
    கதையல நாட்டில் நடப்பதாம் ஒன்றே
மாதர்கள் சிலரும் இளைஞர் சிலரும்-இன்றும்
    மடிவதை தினசரி செய்திகள் பகரும்
வேதனையாக வெளிவரக் கண்டே-பெற்றவர்
    வெந்துப் புண்ணாய் மாய்வதும் உண்டே
தீதாம் இதனை இளையோர் கருதி-உடன்  
    தெளிந்திடின் வாரா உயிருக் கிறுதி

வாழத் பிறந்தவர் உலகில் நாமே-காதல்
   வாலிப வயதில் வருவது ஆமே
ஆழமாய் சிலரின் மனதில் அதுவே-சிறந்த
   அன்பென ஊன்றி நிலைத்திடும் பதிவே
சூழவும் உள்ள சொந்த பந்தம்-எதிர்ப்பு
   சொல்லியே ஆதனைத் தடுத்திட முந்தும்
வீழவா முடிவு எடுப்பது விவேகம்-முயன்று
   வெற்றியை எட்டிட காட்டுவீர் வேகம்

பள்ளம் மேடாம் காதல் பாதை-அதில்
   பயணம் செய்யின் வருவது போதை
வெள்ளம் போல எதிர்ப்பே வரினும்-காதல்
   வெற்றிக்கி  தடைபல நாளும் தரினும்
அள்ள வந்திடும் நீரல காதல்-எளிதில்
   அடைய இயலா அறிந்துமா சாதல்
 உள்ளம் உறுதி உடையவர் ஆவீர்-கொண்ட
   உண்மைக் காதலில் வெல்வீர் நீவீர்
   

Thursday 8 September 2011

மண்ணுக்கு மரியாதை


மண்ணுக்கு மரியாதை தாமே-பிறந்த
மண்ணுக்குத் தருவது ஆமே
விண்ணுக்குச் சென்றாலும் மறையா-சிங்கள
வெறியர்கள் வென்றதும் முறையா
கண்ணுகுத் தெரிந்திட ஈழம்-விரைவில்
'கை'தட்டி வரவேற்க வாழும்
புண்ணுக்கு மருந்தாக நன்றாய்-உலகம்
போற்றிட சேருவோம் ஒன்றாய்

ஈழத்து மண்ணிலே இரத்தம்-அன்று
இழந்தனர் அந்தோ நித்தம்
வாழத்தான் வழியின்றி அவரே-இன்று
வாடிட விடுவதும் தவறே
சூழத்தான் வேண்டாமா இங்கே-பதில்
சொல்லுங்கள் தமிழுணர் வெங்கே
வீழத்தான் பார்பதும் கெடுதல்-தமிழ்
வேரிலே வென்னீரும் விடுதல்

இன்றில்லை என்றாலும் நாளை-இதை
எண்ணி வருந்திடும் வேளை
ஒன்றது வந்திடும் பாரும்-அது
உருவாக வேண்டுமா கூறும்
நன்றெது விரைவாக எண்ணி-தமிழ்
நாட்டோரே முடிவொன்று பண்ணி
குன்றென உறுதியாய் நின்றே-ஈழம்
கொடுத்திடத் துணையாவோம் இன்றே

புலவர் சா இராமாநுசம்

Tuesday 6 September 2011

குறள் வழி நட்பு

உடுக்கை இழந்தவன் கைபோல-துயர்
உற்றால் நண்பனும் உடன்சால
தடுக்கத் தானே முன்சென்றே-உதவி
தந்திட வேண்டும் அஃதொன்றே
இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்
இயம்பிய கருத்தும் மிகநன்றே
எடுப்பின் நட்பில் முடிவொன்றே-பெயரும்
எடுப்பார் பிரியா இணையென்றே

உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்
உள்ளம் ஒன்றின் பொட்பாகும்
புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது
புரிந்தால் போதும் ஈண்டாவே
தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு
தமிழ்போல் அழியா நிலைநாடும்
வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு
வாரா என்றும் முழுமதியாம்

நவில்தொறும் நூல்நயம் போலுமென-நல்
நட்பினைச் சொல்லல் சாலுமென
பயில்தொறும் பண்புளர் தொடர்புயென-அவர்
பழகினால் அவர்பால் ஆகும்மென
முகநக நட்பது நட்பல்ல-நண்பர்
முறையின்றி நடப்பின் தடைசொல்ல
அகமது மலரல் நட்பென்றே-ஐயன்
அறைந்ததை அறிவீர் நீரின்றே

Monday 5 September 2011

பேணிக் காப்போமே மருந்தின்றே!

நோயற்ற வாழ்வுக்கு என்னவழி-காண
   நோக்குவீர் முன்னோரும் சொன்னமொழி
 வாயற்ற சீவனை உண்ணவேண்டா-என
   வாழ்வினில் எவருமே உறுதிபூண்டா
 பாயுற்று நோயுற்று வீழவேண்டாம்-தூய
   பச்சை காய்தன்னை உண்ணலிண்டாம்
காய்முற்றி கனிதன்னை நாளுமுண்ண-தேடி
         காலனும் வருநாளும் தள்ளபின்னே

அற்றது அறிந்துமே உண்பீரெனில்-அதுவும்
    அளவாய் அறிந்துமே உண்பீரெனில்
மற்றது குறையினும் அதிகமெனில்-நோய்
    மறைவது வருவது ஆகுமெனில்
உற்றதை வள்ளுவர் உரைத்தபடி-நாம்
    உணர்ந்துமே செயல்படின் அன்னபடி
பெற்றிட உணவினை அருந்தின்றே-உடலை
    பேணிக் காப்போமே மருந்தின்றே
Related Posts Plugin for WordPress, Blogger...