Saturday, July 20, 2013

என் முகநூல் பதிவுகள் -4





         பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. நிலையாமையை ஆராய்ந்து முற்றும் துறத்தல் நன்கு இனிது.

                  இழந்த பொருள்களுக்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை. சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடத்து அந்நிலை விரைவில் கிட்டவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை. அறத்தின் நல் இயல்புகளை அறிய முடியாமல் வீண்
கோபம் கொண்டால், அவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.


                   நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பதும் இழிதகைமையான போக்கு போன்றதாகும்


            தூக்கம் இல்லாதவர்கள் !

திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை.

                                புலவர்  சா  இராமாநுசம்

                           

Thursday, July 18, 2013

அன்பின் இனிய உறவுகளே!





அன்பின்  இனிய  உறவுகளே!

                   காலை வணக்கம்!

          வரும் ஆகஸ்டு 2-ம் தேதிமுதல் 18-ம் தேதி வரை   நான்
வெளிநாடு, சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளேன்   என்பதை மிக
மகிழ்வோடு  தெரிவித்துக்  கொள்கிறேன்

          இங்கிலாந்து, பிரான்சு ,பெல்ஜியம் ,நெதர்லாந்து ,ஜெர்மனி
சுவிட்சர்லாந்து ,லைச்டென்ஸ்டின் ,ஆஸ்திரியா , இத்தாலி  ஆகிய
(9, நாடுகள்) செல்லவும், அங்கு ,( 15- இரவுகள், 16- பகல்)தங்கவும்
ஆவன செய்யப் பட்டுள்ளது

         விரிவான திட்டம்  விரைவில்  வெளியிடுவேன்.

    மேற்கண்ட நாடுகளில், ஆங்காங்கு உள்ள  நம் ,வலையுலக  உறவுகளை 
சந்திக்கவும் பேசவும்  ஆவலா உள்ளேன்! எனவே ,அங்குள்ள  உறவுகளே ,உங்கள்
 தெலைபேசி  எண்ணை , என் வலைப் பதிவின் மறுமொழிப்  பெட்டியில்

குறிப்பிட, வேண்டி, விரும்பி கேட்டுக்  கொள்கிறேன்.

   மேலும் , என்னுடைய, சுற்றுலா  நலமுற அமைய , வலைத்தள,
முகநூல் உறவுகள் வாழ்த்தையும்  வேண்டுகிறேன்

                                            அன்புள்ள
                                                                                                                                  
                                       புலவர் சா இராமாநுசம்


                                               

Tuesday, July 16, 2013

இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி எழுதுதல் மிகவும் சிறப்பாகும்



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்ளுவரே

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
     தவறின் பஞ்சம் ஈண்டமே

                         புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...