Saturday, July 22, 2017

போகாது போகாது சாதி மடமை-சிலரின் பிழைப்புக்கே அதுதானே துணையாம் உடமை





போகாது போகாது சாதி  மடமை-சிலரின்
   பிழைப்புக்கே  அதுதானே துணையாம்  உடமை
நோகாது  வாழ்கின்றார்  சொல்லி  அதனை-அன்னார்
   நோக்கமும் நிறைவேற நாளும் இதனை
சாகாது  காக்கின்றார்! அந்தோ  கொடுமை-எனவே
   சதிகாரர் சூழ்ச்சிக்கு  மக்கள்   அடிமை
ஆகாது இதுவென்றே உணரும்  நாளே-உலக
   அமைதிக்கு வழிகாணும்! தருவீர்  தோளே!

புலவர் சா  இராமாநுசம் 

Friday, July 21, 2017

முகநூல் பதிவுகள்!



சில நேரங்ளில் நூலை இயற்றியவரின் கருத்துக்கு உரையாசியர் கருத்துக்கான விளக்கம் நூலுக்கு
மேலும் சிறப்பளிக்கும்
வள்ளுவர் , படிக்காதவன் நுட்பமான கருத்தைக் கூறினாலும் படித்தவர் ஏற்றுக் கொள்ளார் என்பார்
இதற்கு உரையாசிர்(பரிமேலழகர்) கூறும் எடுத்துக் காட்டு ஏரல் எழுத்து போல, அதாவது, கடற்கரையிலகள் நண்டுகள் முன்னும் பின்னும்செல்ல ஏற்படும் வரிகள் உற்று பார்த்தால் அ போலவும் உ போலவும் தெரியும் அதனால் நண்டுகளுக்கு அ எழுத தெரியும் எவரும் சொல்லார்
என்பர்!சரிதானே!

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பார்கள்! என்றால் பரப்பனஅக்ராகார சிறையில் பாயாதா! வரும் தேர்தலில் கர்நாடக முதல்வருக்கு சிக்கல்தான்

உறவுகளே!
உலகத்தைக் காட்டிலும் மிகவும் பெரியது - எது?
காலமறிந்து செய்த உதவிதான் -அது


அள்ளாம குறையாது இல்லாம வாராது என்பார்கள்
தற்போது பரப்பன அக்காரா சிறை பற்றிய
சின்னமாவின் சொகுசு வாழ்க்கை இரகசியம் அம்பலமாகத் தொடங்கிவிட்டது! விரைவில்
முழுதும் அம்பலமாகும்!
!

Wednesday, July 19, 2017

முடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் –அவை முடியவில்லை என்றாலும் தளர வேண்டாம்



முடிந்தவரைப்  பிறருக்கு  உதவ  வேண்டும் அவை
     முடியவில்லை  என்றாலும்  தளர  வேண்டாம்
விடிவுவரும் வரைநமக்கு  பொறுமை  வேண்டும் இரவு
     விடியாமல்  போவதுண்டா  கலங்க வேண்டாம்
கடிதுவரும்  என்றெண்ணி  இருத்தல்  வேண்டும் சற்று
      காலமது  ஆனாலும்  கவலை    வேண்டாம்
கொடிதுயெனில்  எதையுமே  தவிர்த்தல்   வேண்டும் சிறு
     குற்றமெனில்  அதைப்பெரிதுப்  படுத்தல்  வேண்டாம்

எண்ணியெண்ணி  எச்செயலும்   செய்தல்  வேண்டும் நாம்
     எண்ணியபின்  தொடங்கியதை  விடுதல்   வேண்டாம்
கண்ணியமாய்  என்றுமே  வாழ்தல்  வேண்டும் வரும்
      களங்கமெனில்  அப்பணியைச்  செய்தல் வேண்டாம்
புண்ணியவான்  என்றும்மைப்  போற்ற  வேண்டும் பிறர்
     புண்படவே  சொல்லெதுவும்  புகல  வேண்டாம்
மண்ணுலகில்  அனைவரையும்  மதித்தல்  வேண்டும் குணம்
    மாறுபட்டார்  தம்முடைய  தொடர்பே   வேண்டாம்

சட்டத்தை  மதித்தேதான்  நடத்தல்  வேண்டும் பெரும்
      சந்தர்ப  வாதியாக  நடத்தல்  வேண்டாம்
திட்டமிட்டே  செலவுதனை  செய்தல்  வேண்டும் ஏதும்
     தேவையின்றி  பொருள்தன்னை  வாங்கல்  வேண்டாம்
இட்டமுடன்  ஏற்றபணி  ஆற்ற  வேண்டும் மனம்
     இல்லையெனில்  மேலுமதைத்   தொடர  வேண்டாம்
கட்டம்வரும்  வாழ்கையிலே  தாங்க  வேண்டும் உரிய
       கடமைகளை   ஆற்றுதற்கு   தயங்க  வேண்டாம்

முன்னோரின்   மூதுரையை  ஏற்க  வேண்டும் வாழும்
     முறைதவறி  வாழ்வோரின்  தொடர்பே  வேண்டாம்
பின்னோரும்  வாழும்வழி  செய்தல்  வேண்டும் பழியைப்
      பிறர்மீது  திணிக்கின்ற  மனமே  வேண்டாம்
இன்னாரும்  இனியாராய்க் கருதல்  வேண்டும் பெருள்
     இல்லாரை  எளியராய்  எள்ளல்  வேண்டாம்
தன்னார்வத்  தொண்டரெனும்  பணிவு  வேண்டும் எதிலும்
      தன்னலமே  பெரிதென்று  எண்ணல்  வேண்டாம்
                                புலவர் சா  இராமாநுசம்

Tuesday, July 18, 2017

நன்றி நன்றி தமிழ்மணமே- மீண்டும் நலம்பெறச் செய்தாய் தமிழ்மணமே





நன்றி  நன்றி  தமிழ்மணமே-  மீண்டும்
   நலம்பெறச் செய்தாய்  தமிழ்மணமே

குறையைச்  சொல்லிப்  புலம்பிட்டேன்-உடன்
   குறையை நீக்கினாய் கும்பிட்டேன்
நிறைவாய் புயலென செயல்பட்டாய்-அரிய
    நிம்மதி!  தன்னில் வயப்பட்டேன்
என்றும்  வாழ்க  தமிழ்மணமே-நீதான்
   இன்றுபோல்  வாழ்க  தமிழ்மணமே
குன்றென நிலைத்திட தமிழ்மணமே –ஏதும்
   குறையின்றி  வாழ்க தமிழ்மணமே

புலவர் சா  இராமாநுசம்

தமிழ்மணமே மீண்டும் பழைய நிலையா!!!?



தமிழ்மணமே  மீண்டும்  பழைய  நிலையா!!!?
      என்னுடய பதிவுகள்  கடந்த இரண்டு  மூன்று  கவிதைகள்
ஏற்றுக்  கொண்டதா க  அறிவித்தும்  முகப்பு  பக்கத்தில் வரவில்லையே
என்ன காரணம்!? தள்ளாத  வயதில் ,துன்பத்தோடு  நான்  எழுதும் பதிவுகள்
முகப்பில்  வர  ஆவன செய்ய  வேண்டுகிறேன்  நிர்வாகம்  கவனிக்குமா
இந்த இடர் பாடு  எனக்கு மட்டுமா???? உறவுகளே உங்களுக்கு  இருந்தால்
தெரிவிக்க  வேண்டு கிறேன்

      புலவர்  சா  இராமாநுசம்

ஆடிப் பட்டம் தேடி விதை –என்று ஆன்றோர் சொன்னது பழைய கதை!






ஆடிப் பட்டம் தேடி விதை –என்று
ஆன்றோர் சொன்னது பழைய கதை
                   இன்று
வாடிய முகத்தொடு வற்றிட வயலும் -கண்டே
வருந்திடும் உழவன் நெஞ்சில் புயலும்
ஓடிட வாழ வழிதனைக் காண!-அவனது
உள்ளமோ பல்வகை எண்ணங்கள் பூண
தேடியே போனான்! தெளிவுடன்! முடிவாக-உழவுத்
தொழிலையே மறந்தான் !வேற்றூர் !விடிவாக


புலவர் சா இராமாநுசம்

Monday, July 17, 2017

திருத்தொண்டு செய்திட்டேன் இளமை வரையில்-உரிய தேவைதனை சேவையென அறிந்த நிலையில்







திருத்தொண்டு செய்திட்டேன் இளமை  வரையில்-உரிய
  தேவைதனை சேவையென அறிந்த  நிலையில்
            ( ஆனாலின்று )
 விருந்துண்டு  வாழ்கின்ற வயதா  இல்லை-நாளும்
  விட்டுவிட்டு  வருகிறது   நோயின்  தொல்லை
மருந்துண்டு வாழ்கின்ற  வாழ்கை  தானே-ஆனல்
   மனத்தளவில்  என்றென்றும்  இளைஞன்  நானே!  
இருந்துண்டு என்னாலே இயன்ற வகையில் –ஏதோ
    எழுதுகின்றேன் உறவுகளே நாளும்  வலையில்

புலவர் சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...