Monday, October 16, 2017

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம் முயன்றால் தந்திடும் முன்னேற்றம்!தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்!
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக!
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை!
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை!

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம்!
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானெனப் பண்ணாதீர்!
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்!
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப்
போக வந்திடும் முன்னேற்றம்!

எண்ணிச் செயல்படின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்!
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்!
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும் ஏமாற்றம்!
மண்ணில் எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்!

                         புலவர்  சா  இராமாநுசம்

Saturday, October 14, 2017

வேங்கடவனைப் போற்றும் பாடல்
   ஆதவன் எழுவான் அதிகாலை
      ஆயர் பாடியில்  அதுவேளை
    மாதவன்  குழலை  ஊதிடுவான்!
      மாடுகள்  அனைத்தும்   கூடிடவே
    ஒன்றாய்   கூடிய   ஆவினங்கள்
      ஊதிய  குழலின்  இசைகேட்டு
    நன்றாய்  மயங்கி  நின்றனவே
      நடந்து மெதுவாய் சென்றனவே!
 
   ஆயர்  பாடியில் மங்கையரும்
     ஆடவர்  பிள்ளைகள் அனைவருமே!
   மாயவன் இசையில் மயங்கினரே
     மகிழ்வுடன் பணியில் இயங்கினரே !
   சேயவன்   செய்த  குறும்புகளே
     செப்பிட இனிக்கும் கரும்புகளே!
   தூயவன்  திருமலை வேங்கடவா
     திருவடி தலைமேல்  தாங்கிடவா !

   ஆயிரம் ஆயிரம்  பக்தர்தினம் 
      ஆடிப் பாடி வருகின்றார்!
   பாயிரம்  பலபல பாடுகின்றார்
      பரமா நின்னருள்  தேடுகின்றார்!
   கோயிலைச்  சுற்றி  வருகின்றார்
     கோபுர தரிசனம் பெறுகின்றார்!
   வாயிலில் உள்ளே நுழைகின்றார்
     வரிசையில் நின்றிட விழைகின்றார்!
 
    எண்ணில் மக்கள் நாள்தோறும்
     ஏழாம் மலைகள் படியேறும்
   கண்ணுக் கெட்டிய தூரம்வரை
     கண்ணன் புகழே போற்றுமுரை
   பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
     பஜகோ விந்தமே செய்கின்றார்!
   விண்ணொடு மண்ணை அளந்தவனே
      வேங்கட உன்னடி தொழுகின்றேன்
        
              புலவர் சா இராமாநுசம்

Friday, October 13, 2017

ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலேஏதேதோ  நடக்குது  நாட்டுனிலே –முழுதும்
   எழுதிட  முடியுமா  பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ  தெரியாது  வாழுகின்றோம்-போகும்
   திசைகாணாத் துயர்தன்னில்  வீழுகின்றோம்-மேலும்
போதாது விலைநாளும்  விண்ணைமுட்ட –மனம்
   புலம்பிட  மக்களும்  கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட  இயலவில்லை-ஏதோ
   உள்ளத்தை  வருத்திட வந்ததொல்லை
 
 
பகல்கொள்ளை அளவின்றி  பெருகிப் போச்சே-இரவு
    பயத்துடன் உறங்கிடும்  நிலையு மாச்சே!-வேறு,
புகலில்லை ! வழியின்றி!  வருந்த லாச்சே-நாடும்
    புலிவாழும்  காடாக!  மாற லாச்சே!-மேலும்
 நகலின்றி  அழுகையால் நாளும் போக-நோயால்
    நலம்மின்றி ஏழைகள் நொந்து சாக!-காணும்
 அகமின்றி ஆள்வோரே  எண்ணி பாரீர்- ஏழை
    அன்னாரைக் காப்பாற்றி வாழ்வு தாரீர்!
புலவர்  சா  இராமாநுசம்

Thursday, October 12, 2017

மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்!மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரம் பெட்ரோல்விலை எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதியென்ப! இதுதான் போலும்!ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி  கலங்க விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -எதையும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, October 10, 2017

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில் பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!


புலவர் சா இராமாநுசம்

Monday, October 9, 2017

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது எதுவும்  நடக்கவில்லை-உண்மைத்
   தகவலை  எவரும் கொடுப்பதில்லை
அக்கரை இல்லா ஊடகங்கள்-நடப்பது
  அனைத்தும்  இங்கே  நாடகங்கள்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
             
                    புலவர் சா இராமாநுசம்

Sunday, October 8, 2017

முகநூல் பதிவுகள்!அண்ணா தி மு க தற்போது
இரட்டை மாட்டு வண்டிபோல
ஆகிவிட்டது புதிய ஓட்டுனர் வந்து விட்டார்!
வண்டி இனி, எப்படி போகுமென பார்ப்போம்

இன்று தமிழ்நாட்டிலே முதல்வர் பதவிக்குத்தான் ஏகப்பட்ட
போட்டி! அடடா !பலபேர் அந்தக்
கனவிலேயே மிதக்கிறார்கள்! காரணம் அரசியலில் அமைச்சராக ,ஒரு தகுதி என்று ஏதும் இல்லை!கைநாட்டு கூட அமைச்சராகலாம்

உறவுகளே!
வரும் செய்திகளைப் பார்க்கும்
போது பி ஜே பி கட்சிக்குள் ஏதோ
குழப்பம் உள்ளது தெரிகிறது பிரதமர் மோடிக்கு
எதிராக குழு ஒன்று உருவாவதும் தெரிகிறது
விரைவில் மாற்றங்கள் வராது என்றாலும் அதற்கான வாய்ப்புகள்,அறுகுறிகள் தென்படுகின்றன!


நஞ்சுண்டவன் சாவான் என்று
சொன்னால்! நஞ்சுண்டவள்,,
சாவாளா என்று கேட்பவரை என்ன வென்று சொல்வது! அவள் மட்டுமல்ல, அவர்கள் ,அது ஆக அனத்தும் சாகும்!என்பது
தெரிந்தும் கேட்பது விதண்டா வாதம் தானே! இப்படித்தான் நாம் எழுதும் பதிவுகளில் மறுமொழியாக
சிலர் கேட்கிறார்கள்!


மைய, மாநில அரசுகள் , திட்டங்கள் தீட்டுவது நாட்டு
மக்களின் நன்மைக்கே என்பது தவறல்ல ! ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல ! அதனைஏதோ தங்கள் மானப் பிரச்சனை யா்க எண்ணுவது தான் தவறாகும்


புலவர்  சா  இராமாநுசம் 

Saturday, October 7, 2017

ஏழுமலை வாழும் இறைவா ! கோவிந்தா! –நானும் எழுது கின்றேன் குறைதீர பாவிந்தா!ஏழுமலை வாழும் இறைவா ! கோவிந்தா! –நானும்
எழுது கின்றேன் குறைதீர பாவிந்தா!
வாழுகின்ற நாளெல்லாம் போற்றித் தானே-நானும்
வணங்கிடுவேன் உம்பெயரை சாற்றித் தானே
சூழுகின்ற இடர் தன்னை பெருமாளே-வானின்
சுடர்கண்ட பனியாக்கி அருள்வாய் நீயே
பாழுமனம் பட்டதெல்லாம் போதும் போதும்-மேலும்
படுவதற்கு இயலாது துயரம் ஏதும்


புலவர் சா இராமாநுசம்

Thursday, October 5, 2017

கோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்க தயங்காதே!ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
 உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே!

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொரு நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 4, 2017

தனிமை என்னை வாட்டிடவே-கற்ற தமிழாம் அன்னை மீட்டிடவே!

தனிமை என்னை வாட்டிடவே-கற்ற
   தமிழாம் அன்னை மீட்டிடவே
கனிமை மிக்கோர் கருத்துரையும்-தேனில்
   கலந்த பாலென மனதுறையும்
இனிமை மிகவே எண்ணத்தில்-என்றும்
  இதயம் புகவே வண்ணத்தில்
நனிமிக கவிதைகள் எழுதிடுவேன்-உறவை
  நாளும் பணிந்து தொழுதிடுவேன்

புலவர் சா இராமாநுசம்

Monday, October 2, 2017

அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே !அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே
  அடிமை விலங்கை அகற்றினார் அன்றே
  திண்மை அகிம்சையாம் அறவழி என்றே
  தேடிக்  கொடுத்தார் விடுதலை ஒன்றே
  உண்மையைத் தனது உயிரெனக் கொண்டே
  உத்தமர் காந்தி செய்தார் தொண்டே
  மண்ணில் பிறந்த மாந்தரில் எவரே
  மாகாத்மா வாக மதித்தது!  இவரே!
 
  நிறவெறி தன்னை நீக்கிட வேண்டி
  நீலத்திரைக் கடல் அலைகளைத் தாண்டி
  அறவழிப் நடந்து ஆப்பிரிக்க நாட்டில்
  அல்லல் பட்டது காண்போம் ஏட்டில்
  தீண்டா மையெனும் தீமையை ஒழிக்க
  தீவிரம் காட்டிட சிலரதைப் பழிக்க
  வேண்டா மையா சமூக கொடுமை
  விட்டது இதுவரை நம்செயல் மடமை
 
  இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
  ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி
  உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
  உள்ளம் நொந்தவர் உறுதியே பூண்டவர்
  எடுத்தார் விரதம் இறுதி வரையில்
  இறந்து வீழ்ந்தார் முடிவெனத் தரையில்
  கொடுத்தனர்  பாவிகள் குண்டாம்  பரிசே
  கொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே
 
  எத்தனை நாட்கள் சிறையில் காந்தி
  இருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி
  புத்தனாய் வாழ்ந்தார் போற்றிட உலகம்
  பதவியை நாடா பண்பினில் திலகம்
  சத்திய சோதனை வாழ்வாய்க் கொண்டே
  சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே
  உத்தம உன்புகழ் உலகினில் வாழ்க!
  உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

                     புலவர்  சா இராமாநுசம்

Sunday, October 1, 2017

இன்னலே முதுமை மறக்க வில்லைஅமைதி இன்றி மனமேதான்-ஏனோ
அல்லல் படுவதோ? தினமேதான்!
சுமைதான் வாழ்க்கை என்றேதான்-நாளும்
சொல்லிட நடப்பதும் இன்றேதான்
எமையார் எவரென கேட்டிடவே-யாரும்
இல்லா துயர்மிக வாட்டிடவே
இமையே மூடினும் உறக்கமில்லை-மூளும்
இன்னலே முதுமை மறக்கவில்லை


புலவர் சா இராமாநுசம்

Friday, September 29, 2017

முகநூலில் வந்தவை!உறவுகளே
துடப்பக் கட்டைக்கும் விளம்பரம் செய்யும் அளவிற்கு
நம் நாடு முன்னேறியுள்து ! பார்த்தீர்களா! மாண்பு மிகு
பிரதமர் அவர்களின் தூய்மை இந்தியா திட்டம் இனி
வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை

மத்திய ,மாநில அரசுகள் தாம்
கொண்டு வரும் திட்டங்கள் செயல் படுதா என்பதைக் கவனிக்காமல் மேன்மேலும் திட்டங்களை அறிவிப்பதால் என்ன பயன் ? அறிவித்த திட்டங்களை
செயல்படுத்த வழிகளை ஆய்ந்து நடைமுறை படுத்தஆவனl
செய்வது அரசின் கடமையாகும் படிப்பறிவு குறைந்த
பாமர மக்கள் அதனை அறிந்து கடை பிடிக்க அரசுதான்
முயல வேண்டும்


மூட நம்பிக்கையை ஒழிக்கத்தான் கர்நாடகச் சட்டசபை சட்டம் போட்டது, ஆனால்அதற்காவே இங்குதோன்றிய ,தந்தை பெரியார் ,அண்ணா வழிவந்த திராவிட இயக்கதில் முக்கிய தலைவர்களான மாறன்
சகோதரர்கள் நடத்தும் சன் டிவியோ நாள்முழுதும் ஒளிபரப்பும் தன சீரியல்கள் மூலம் மூடநம்பிக்கையை
வளர்த்துக் கொண்டிருப்பது முறைதானா?? இதனைத்
தடுக்க வேண்டிய கடமை செயல் தலைவர்,தளபதி அவரகளுக்கு உண்டல்லவா! செய்வாரா?


உறவுகளே
நாம் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை!
நாங்கள் பொய்தான் சொன்னோம் மன்னித்து விடுங்கள் என்று பொதுக்கூட்ட மேடையில் கொஞ்சமும் கூசாமல் கூறுகின்ற அமைச்சர்கள்
ஆட்சி இங்கே நடக்கிறது!இதைவிட கேவலம் வேறு
உண்டா? இனி இறைவன்தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்


புலவர்  சா  இராமாநுசம் 

Tuesday, September 26, 2017

நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே


மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மாறினாலும் இதுவரையில் மாறாத் தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கே –எடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்க
நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா
நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே


புலவர்  சா இராமாநுசம்

Monday, September 25, 2017

ஆழ்துளை கிணரும் வற்றியதே-எம்மை அளவில் துயரது பற்றியதே!ஆழ்துளை கிணரும் வற்றியதே-எம்மை
அளவில் துயரது பற்றியதே
வாழ்வது எவ்வண் வான்மழையே-உடன்
வாராது போவது ஏன்மழையே
வீழ்வது மழைத்துளி நீரன்றே –பொங்கி
வீழுவது இருவிழி நீரொன்றே
சூழ்வது உண்டே! மழைமேகம் –கலையும்
சுடர்கண்ட பனியாம் அதன்வேகம்


புலவர் சா இராமாநுசம்

Sunday, September 24, 2017

சமன்செய்து சீர்தூக்கும் கோலை போன்றே -மன்றம் சரியாக செயல்படின் விளைதலும் நன்றே -நாளும்சமன்செய்து சீர்தூக்கும் கோலை போன்றே -மன்றம்
சரியாக செயல்படின் விளைதலும் நன்றே -நாளும்
அமர்கின்ற உயர்நீதி மன்றங்கள் தாமே-எடுத்து
ஆராயின் ஊழலை ஒழித்திட போமே - அவரே
தமரென்ற போதும் தவறென்று கண்டால்-சற்றும்
தயங்காது தண்டணை தருவதாய் கொண்டால் -என்றும்
இமயோரும் வாழ்திட இறைவனாய் ஆவார்-அவரே
எல்லோரும் போற்றிட இதயத்தில் வாழ்வார்


புலவர் சா இராமாநுசம்

Saturday, September 23, 2017

இரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் நாளும் கடக்கிறது

இரட்டை  ஆட்சியே  நடக்கிறது –அதனால்
   இன்னலில்  நாளும்  கடக்கிறது
விரட்ட வேண்டும்  இம்முறையை-இன்றேல்
   விரைவில் தீரா நம்குறையே
புரட்டும் பொய்யும் வாழ்வாக-பொழுது
   புலர்ந்தும் இருளே  சூழ்வாக
மிரட்டிட பணியும் அடிமைகளே – ஆளின்
   மேலும் நீளும் கொடுமைகளே 

புலவர்  சா  இராமாநுசம்

Friday, September 22, 2017

மழையே மழையே வாராயோ-எங்கள் மனம்குளிர் நல்மழைத் தாராயே

மழையே  மழையே வாராயோ-எங்கள்
   மனம்குளிர் நல்மழைத் தாராயே
அழையார் வீட்டுக்குப்  போகின்றாய்-நாங்கள்
   அழைத்தும்  வராது ஏகின்றாய்
விழைவார் தம்மிடம் போகாமல்-நாளும்
   வேதனைப்  பட்டு  சாகாமல்
பிழையார் செய்தார்? பொறுப்பாயா –உந்தன்
   பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!!?
புலவர்  சா  இராமாநுசம்

Thursday, September 21, 2017

இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே!கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
    கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
   தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
    ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்பட அறிவீரா? -உடன்
    நிம்மதி ஏற்பட செய்வீரா?

பட்டப் பகலில் வீடெங்கும்-நகையோ
    பணமோ கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறது!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
    திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!


வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
     வாழ்வை நடத்திட கடலோரம்
அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

             புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 20, 2017

போதுமென்ற மனம் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே?போதுமென்ற மனம் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...