Saturday, August 5, 2017

அன்பெனப் படுவது யாதென அறிந்திட இன்புற வள்ளும் இயம்பன கேட்பீர்!



அன்பெனப் படுவது யாதென அறிந்திட
இன்புற வள்ளும் இயம்பன கேட்பீர்
அன்பிற் கில்லை அடைக்கும் தாளே
என்பும் தருவர்! சொல்லார் தமதென!
உடலும் உயிர்போல் அன்பும் வாழ்வும்
ஆர்வம் தந்தும் நட்பினைப் பெற்றும்
அறமோ மறமோ அதுவே துணையே
அன்பில் வாழ்வு பட்ட மரமே
அகத்தின் இயல்பே அன்பெனப் படுமே
அன்பின் வழியே உயிர்கள் இயங்க
இன்றெனில் உடம்பு எலும்பொடு போர்த்திய
ஒன்றென ஓதினார் வள்ளுவப் பெருந்தகை
நன்றென நானும் பாடலை முடித்தேன்!


புலவர் சா இராமாநுசம

Friday, August 4, 2017

உறவே இன்றே உரைப்பது ஒன்றே அறிவெனப் படுவது யாதென அறிந்தே




உறவே இன்றே உரைப்பது ஒன்றே
அறிவெனப் படுவது யாதென அறிந்தே
ஓதிய வள்ளுவன் கருத்தினைத் தெரிந்தே
ஒருசில இங்கே உரைத்திட லானேன்
அழிவினை நீக்கி பகைவரைத் தடுத்தும்
மனதினை அடக்கி எப்பொருள் ஆயினும்
எவரதைச் சொல்லினும் உண்மை உணர்ந்தும்
சான்றோர் நட்பொடு உலகுடன் ஒத்தும்
பின்வரல் உணரந்து அஞ்சுவ அஞ்சியே
நடப்பதே அறிவென நவின்றார் வளுவர்


புலவர் சா இராமாநுசம

Thursday, August 3, 2017

அழகெனப் படுவது யாதெனில் உறவே!




அழகெனப் படுவது யாதெனில் உறவே
அகத்தின் அழகே அழியா என்றும்
செகத்தில் நம்மிடம் செப்பிட இன்றும்
இருப்பது தாமே! அறிவோம் நாமே
புறத்தில் தோன்றுவ காலப் போக்கில்
மாறியே வருமே முதுமையைத் தருமே
அகத்தின் அழகே அழியா என்றும்
இகத்தில் நமதுயிர் ஏகும் வரையில்


புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 2, 2017

இனியது கேட்பின் எனதரும் உறவே இனிது இனிது இல்லற வாழ்வே




இனியது கேட்பின் எனதரும் உறவே
இனிது இனிது இல்லற வாழ்வே
ஈட்டிய பொருளும் இணையில் மனைவியும்
வீட்டுடன் வசதியாய் அமைந்திடு மானால்
இனிது இனிது இல்லற வாழ்வ
இல்லற இல்லது நல்லறம் இல்லை
இணையில் வள்ளுவர் இயம்பிய வழியில்
மக்கள் செல்வம் ஆணென பெண்ணென
இரண்லடே போதும் இனிதென ஓதும்
இப்பெரு உலகில் இனியதே யாதும்
ஓப்பிலா என்றே செப்பிடல் ஒன்றே
இனிது இனிது இல்லற வாழ்வே!\\


புலவர் சா இராமாநுசம்

Tuesday, August 1, 2017

பெரியது கேட்பின் எனதரும் உறவே!




பெரியது கேட்பின் எனதரும் உறவே
பெரிது பெரிது பெரியோர் துணையே
அதனினும் பெரிது அவர்வழி நடத்தல்
அறம்வழி வாழ்ந்து மறம்தனை தவிர்த்தல்
அதனினும் பெரிதென அறிவது நன்றே
பெண்மையைப் போற்றி உண்மையே சாற்றி
பூண்பதே இன்பம் போய்விடத் துன்பம்
காண்பதே பெரிதெனக் கவிதையை முடித்தேன்


புலவர் சா இராமாநுசம்

Monday, July 31, 2017

அரியது கேட்பின் எனதரும் உறவே





அரியது கேட்பின் எனதரும் உறவே
அரிது அரிது இன்றைய உலகில்
வாழ்தல் தானே மிகமிக அரிது
அதைவிட அரிது நேர்மைவாழ்வே
சூழ்நிலை அவனை விடுவதோ அரிது
அதைவிட அரிது சுயநலம் மறத்தல்
இவ்வண் வாழ்தல் எவ்வண் ஆகும்
இருப்பதே போதுமாய் எண்ணலோ அரிது

இன்னும் பலவே எழுதினேன்  சிலவே

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...