Friday, February 15, 2013

வான் சிறப்பும் வேண்டுதலும்!



மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா! 

சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 13, 2013

காதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்!




கண்ணே  இழந்து  போனாலும்  -வாழக்
     கருதியே  உறுதியாய்  இருந்தவளே!
பெண்ணே  இறந்து  போனாயே  -காமப்
     பேயனால்  இந்நிலை  ஆனாயே!

காதல்  கிறுக்கர்கள்  பெருகிவிட்டார்-இளம்
    கன்னியர்  பலரும்   கருகிவிட்டார்!
வேதனை  நடப்பதே   நாடெங்கும் கண்ணீர்
   விடுவதா  பெற்றோர்  வீடெங்கும்!

பெற்றே  வளர்த்து  சீராட்டி கொஞ்சிப்
    பேசியே  நாளும்  பாராட்டி !
 கற்றே  உயர்ந்திடச்   செய்தாரே இன்று
     கண்ணீர்  மழையெனப்  பெய்தாரே!

அந்தோ இனியவர்   என்செய்வார் மன
   ஆறுதல்  எவ்வண்  அவரெய்வார்
வெந்தே  சாவது  தலைவிதியா! மேலும்
   விளம்பிட  வேறு    மதியிலையா!?

இருவர்  மாட்டு  ஏற்படுமே காதல்
   என்றால்  உண்மை  பொருள்படுமே
ஒருவர்  மாட்டு   தோன்றுவது என்றும்
    ஒருதலைக்  காதல்  எனப்படுமே!

வேண்டாம்  இந்த  விளையாட்டும் அதன்
   விளைவை  எடுத்தே  இதுகாட்டும்!
ஈண்டே   இதுவே  முடிவாக பாடம்
     இளையோர்   கற்றிட  விடிவாக!


               புலவர்  சா  இராமாநுசம்
   

Monday, February 11, 2013

போறா தம்மா போறாதே -உழவன் போட்ட முதலே ஆகாதே!




போறா  தம்மா போறாதே  -உழவன்
       போட்ட  முதலே  ஆகாதே!
ஆறாப்  புண்ணாம்  அவன்மனமே உடன்
      ஆற்ற வேண்டும்   இத்தினமே!
மாறா  தம்மா  அவன்வறுமை தொகை
      மாற்றி உயர்ந்திடின்  வரும்பெருமை!
சோறே பொங்குமா  அவன்வீட்டில் அதை
       சொல்வீர்   அம்மா  நாளேட்டில்!

உழைக்கும்  கூலியாம்  விவசாயி அவன்
      உழைத்த  நிலத்தில்  பயிர்சாவி!
பிழைத்திட  ஏதும்  வழியில்லை  -பசிப்
       பிணியில்  வருந்திடு மப்பாவி!
தழைத்திட   வழியும்  செய்வீரே துயர்
      தவிர்த்திட  அன்பைப்  பெய்வீரே!
அழைத்திட  காலன்  வருமுன்னே ஆளும்
      அம்மா  அருள்வீர்  நனியின்னே!

எண்ணிப்  பார்த்தால்  இழப்பீடு யாரும்
       எண்ணிட  இயலா   பெருங்கேடு!
கண்ணில்  வழிந்த   கண்ணீரே  -உழவன்
      கழனியில்  விழுந்த தண்ணீரே!
மண்ணில்  உழுதொழில்  முடங்கிவிட உயிர்
      மண்ணொடு  மண்ணாய்  அடங்கிவிட
புண்ணில்  வேலைப்  பாச்சாதீர் பால்
      பொங்கிய  பின்னும்  காச்சாதீர்!
மண்ணில்  உழுதொழில்  முடங்கிவிடும் உயிர்
      மண்ணொடு  மண்ணாய்  அடங்கிவிடும்

உலகின்  அச்சாம்   ஆணியவன் வாழ
        உதவும்  உயிருக்கே  ஏணியவன்
அலகில்  துயரால்  அல்லல்பட  - இந்த
        அவனியில் பஞ்சம்   மிஞ்சிவிட
கலகமே  எங்குமே  தோன்றிவிடும்-இக்
       கருத்தை  மனதில்  ஊன்றிவிடும்
இலவுக்  காத்த  கிளியல்ல அமைதியாய்
      இனியும்  இருத்தல்  சரியல்ல!

                    புலவர்  சா  இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...