Friday, August 19, 2011

கோடை

கோடைக் காலம் வந்து துவே
கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே
ஆடை முழுதும் நனைந் திடவே
ஆனதே குளித்த தாய் ஆகிடவே
ஓடை போல நிலமெல் லாம்
உருவம் காண வெடித் தனவே
வீ(ட்)டை விட்டே வெளி வரவே
விரும்பா நிலையை அனல் தரவே

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்கி டவே
உச்சியில் வெய்யில் வந்த தெனில்
உடம்பைத் தீயென தொட்ட தனல்
மூச்சை இழுத் தால் அக்காற்றும்
மூக்கை சுடவே அனல் மாற்றும்
சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே

பத்து மணிக்கே பகல் தன்னில்
பாதம் பட்டால் சுடும் மண்ணில்
எத்தனை வேகம் காட்டு கின்றார்
எங்கே நிழலெனத் தேடு கின்றார்
இத்தனை நாள் போல் வீட்டோடு
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு
பித்தனைப் போலவர் தமக் குள்ளே
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே

வற்றிய நீர்நிலை இல் லாமே
வளர்ந்த புல்பூண் டெல் லாமே
பற்றி எரிய முற்ற றாக
பறந்திடக் காற்றில பஞ் சாக
வெற்றிடம் தன்னில் கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே

புலவர் சா இராமாநுசம்

Thursday, August 18, 2011

திருக்குறள்

தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ
திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு
உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன்று
உலகமெலாம் பலகுலமாய் திகழுமடா வீணில்

சாதிமத பேதங்களில் சாய்ந்திடுவீர் என்றே - தம்பீ
சாற்றுகின்ற சமயநெறி சார்புடைய தன்றே
நீதிநெறி வழிகளிலே நீக்கமற நின்றே - என்றும்
நிலவிடவே சொல்லுவதும் திருக்குறளாம் ஒன்றே

எம்மதமே ஆனாலும் ஏற்கின்ற விதமே - தம்பீ
எழுதியுள்ளார் வள்ளுவரும் ஏற்றநல்ல பதமே
தம்மதமே உயர்ந்ததென சொல்லுகின்ற எவரும் - இந்த
தமிழ்மறையை படித்துப்பின் மாறிடுவார் அவரும்

எம்மொழியும் எந்நாடும் போற்றிக் கொள்ளுமாறே - தம்பீ
எழிதியுள்ள திருக்குறளும் தமிழ்ப் பெற்றபேறே
செம்மொழியாய் நம்மொழியைச் சேர்த்திடவும் இன்றே - இங்கே
செப்புகின்ற காரணத்தில் திருக்குறளும் ஒன்றே

எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை
முக்கால(ம்) மக்களும் ஏற்கின்ற வகையே - குறளை
மொழிந்தாரே உலகுக்கே பொதுவான மறையே

உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

-புலவர் சா. இராமாநுசம்.

Tuesday, August 16, 2011

காந்தியம்

காந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில
கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட
ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே
இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட
சாந்தியம் மட்டுமே நெஞ்சில்கொண்டே-அவர்
சாதித்த வெற்றிகளை மக்கள்கண்டே
காந்தியின் பெயரோடு மகான் என்றே-பட்டம்
மனமுவந்து வைத்தாராம் போற்றியன்றே

உப்புக்கும் வழியின்றி அடிமை யாக-நம்
உரிமைக்குப் போராடி கொடுமைபோக
செப்பியவர் மொழி கேட்டே மக்கள் -தாமே
சென்றனரே வெள்ளமென உண்மையாமே
ஒப்பிடவும் அவர்போல ஒருவர் உண்டா-இவ்
உலகத்தில் இன்றுவரை சொல்வீர் கண்டால்
தப்புதனைச் செய்தாலும் ஒத்துகொள்ளும்-அவர்
தனிப்பிறவி காந்தியென உலகம் சொல்லும்

பாடுபட்டுச் சுதந்திரத்தை பெற்றார் அவரே-பின்
பதவிதனை மறுத்தவரும் இவரே இவரே
கேடுகெட்டுப் போனதந்தோ நாடுமின்றே-பதவி
கேட்டுபேரம் பேசுவதா நொந்தோம்நன்றே
கூடுவிட்டுக் கூடுபாயும் தன்மைபோல-கட்சி
கொள்கைதனை கைவிட்டு நாளுமாள
ஓடுகின்ற காட்சிபல கண்டோ மிங்கே-இனி
உருப்படுமா இந்நாடு வழிதான் எங்கே

கத்தியின்றி இரத்தமின்றி பெற்றார் காந்தி-தம்
கைகளிலே அகிம்சையெனும் கொள்கைஏந்தி
புத்திகெட்டு நாமதனை அழித்தே விடுவோம்-நல்
போக்கற்று நோக்கற்றால் நாமேகெடுவோம்
சுத்திவந்து தொடுவதில்லை யாரும் மூக்கை
சொல்வதென்ன இனியேனும் உமதுவாக்கை
சத்தமின்றி நல்லவர்கே அளிக்க வேண்டும்-நல்
சரித்திரமே உருவாகி களிக்க யாண்டும்

புலவர் சா இராமாநுசம்

Sunday, August 14, 2011

சுதந்திரத் தேவியே தரவேண்டும்

      பாருக்  குள்ளே  நம்நாடே-புகழ்
          பாரதம்!  உண்டா அதற்கீடே
      ஊருக்கு ஊரே!  கொடியேற்றி-இன்று
          ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
      பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
          போற்றியே  புகழ்ந்து மறுநாளே
       யாருக்கும் நினைவில் வாராதே-இனி
          என்றும் இந்நிலை மறாதே

      வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
        வந்தே  மாதரம்   ஊருக்காம்
      தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
         தன்னல மிக்கோர் ஈண்டுசில
      சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
         செப்பும் நிலையே  ஆனதென
      நிந்தனை செய்து என்னபலன்-இந்த
          நிலையை மாற்ற எவருமிலன்


      வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
          வேதனை  தீர்ந்தது  என்றாலும்
      கொள்ளையர் சிலர்கை  அகப்பட்டோ-நாளும்
          கொடுமை அந்தோ மிகப்பட்டே
      தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
          தொடர்கதை யாகப் போயிற்றே
       எல்லை  மீறின்  தன்னாலே-நாம்
          இழப்போம் அனைத்தும் பின்னாலே
 
       
       கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
          கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
       கள்ள  வாணிகம் சுதந்திரமே-பொருள்
           கலப்படம் செய்யவும் சுதந்திரமே
       வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
           விடுதலை நோக்கி நடைபோட
       நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
          நாளில் வரமே தரவேண்டும்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...