Saturday, March 15, 2014

என் முகநூலில் முகம் பதித்தவை!





ஆமை நகரத் தொடங்கினா அதன் ஐந்து உறுப்புகளும் வெளியே நீட்டிக் கொள்ளும் ! ஆபத்துன்னு தெரிஞ்சா,
உடன்,அவற்றை தன் ஓட்டுக்குள்ளே அடக்கிக் கொள்ளும்!
அதுபோல மனிதனும் சூழ்நிலையை உணர்ந்து தன்னுடைய
ஐம்புலன்களையும் அடக்கிக் ஆளத் தெரிந்தவனாக ,இருந்தால்
தனக்கு வரும் எல்லா ஆபத்துக்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளலாம்!

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து- குறள்



பொதுவாக ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்றாலும், வாய் ,அதாவது நாக்கு ,அதைமட்டுமாவது
அடக்கியே வாழ வேண்டும்! வள்ளுவர் இதனைப்பற்றி தனியாகவே கூறுகிறார் ! நம்முடைய வாய் பேசுவதற்கும் ,உண்ணும் உணவின் சுவையை அறிவதற்கும் துணையாக இருப்பதே நாக்குதான்! ஒருவன் , புலன்களில் எதனை அடக்க
முடியாவிட்டாலும் நாக்கை மட்டுமாவது கட்டுப் படுத்தாமல் விட்டால் , மற்றவர்களின் இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகி சோகத்தையே முடிவாக பெறுவார்கள்

தகாத சொற்களைப் பேசுவதால் வருவது தண்டணைதான்
என்ற நேர் பொருளோடு ,குறிப்புப் பொருளாக, சுவை அறிய உதவும் நாக்கால் தகாத(உடல் நலத்திற்கு) உணவுகளை உண்ணுவதும் கேடுதான் என்பதையும், நயமாக உணர்துவது
இன்புறத் தக்கது!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டுகுறள்


பசி வந்தா பத்தும் பறக்கும் என்பாங்க! இதில் பத்து என்பது எண்ணிக்கையல்ல! எல்லாமே பறக்கும் என்பதே ஆகும். எடுத்துக் காட்டாக, ஆசைகளைத் துறந்து தவம் செய்யும் முனிவனோ, ஏன், மானம், கல்வி, செல்வம் என, மற்ற பிற உயர்வுகள் , அனைத்தும் பசி வரின் பறந்துதான் போகும்!

தாம் பெற்ற மக்களை , உலகோர், சான்றோர் என போற்றும்படி செய்வதே, தாய் தந்தையருக்கு அழகாம்!

சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு-ஔவை


ஒருவரை வணங்கி, அதன் மூலம் உண்டு வாழ்வதைக்காட்டிலும்,பூமியை உழுது பயிரிட்டு வரும் வருவாயைக் கொண்டு , உண்டு வாழும் உணவே மிக
இனிமையும் சுவையும் உள்ளதாகும்

தொழுது ஊண் சுவையின் ஊழுது ஊண் இனிது-ஔவை

நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய வலிமையை அறிந்து அதற்கேற்ப செயல் படவேண்டும்! இல்லையெனில் தோல்விதான் மிஞ்சும்! எதுபோல என்றால், மிகவும் மெலிதான மயிலிறகு கூட அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வலிமை மிக்க அச்சும் உடைந்துதான் போகும்! அதுபோல!

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்- குறள்

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, March 11, 2014

தேர்தலோ தேர்தல்!



 தேர்தலோ  தேர்தல்!

நல்லோரே நல்லோரே வாரு மிங்கே-தேர்தல்
நாடக ஒத்திகை பாரு மிங்கே
வல்லோரே வைப்பதே சட்ட மாக-ஆள
வந்தவர் போடுவார் கொட்ட மாக
பல்லோரே சேருவார் கூட்ட ணியாய்- கொள்கை
பறந்திட தேடுவார் ஓட்டி னியே
சொல்வாரே கூசாமல் நாக்கு மின்றே-பணி
செய்திட நிற்பதாம் நோக்க  மென்றே

தன்னலம் இல்லாதார் ஒன்று  கூடி-பெற்று
தந்தாராம் சுதந்திரம் போரு மாடி
என்நலம் காப்ப தாம் என்றேமனம்-நாளும்
எண்ணுவர் கைகளில் சென்றேதினம்
உன்நலம் அழிப்பாரே அவருமென -நீர்
உணராது இருப்பதும் தவறேயென
பொன்மனப் பெரியோரே உணர்ந் திடுவீர்-இந்த
போக்கினை நீக்கிட என்ன வழியே

யாராள வந்தாலும் ஊழல் மட்டும்-இங்கே
உருவாகா நிலைகாணும் சூழல் மட்டும்
வாராது ஒருநாளும் உண்மை யிதாம்-கடந்த
வராலாறு காட்டிடும் தன்மை யிதாம்
சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
செய்வதே உண்மையில் நமதுகடன்
போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்

கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
கொடிகட்டிப்பறந்திட தங்களினம்
போட்டியில் கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
போடவும் தருகின்றார் நோட்டேபல
கேட்டிட யாரிங்கே நாதி யில்லை-தட்டி
கேட்டவர் பெறுவதோபீதி யெல்லை
ஓட்டிட போகவே அஞ்சு கின்ற-நிலை
உள்ளதை எண்ணுவீர் கொஞ்ச மின்றே

வந்ததே லாபமாய் மக்கள் எண்ணும்-நிலை
வந்தவர் வாக்கினை வழங்கில் மண்ணும்
சொந்தமாய் பிடியின்றி போவா ரந்தோ-நல்
சுடுகாடும் இல்லாமல் ஆவா ரந்தோ
சிந்தனை செய்திட வேண்டு முடன்-என
செப்பியே மக்களை தூண்டு முடன்
வந்தனை கூறியே முடித்தே னதை-நெஞ்சில்
வடிந்ததை கவிதையாய் தொடுத்தே னதை

                                    புலவர் சா இராமாநுசம்

Sunday, March 9, 2014

மகளிர் தினம்! கவிதை இரண்டு!


 மகளிர் தினம்! கவிதை இரண்டு!

மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை

இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்

எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே

மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக்  கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே

அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்

பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே

விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே

சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே

நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்

            புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...