Saturday, November 4, 2017

சிந்தனை செய்வீர் மானிடரே-இதை செவியில் ஏற்றால் ஏனிடரே!




சொந்தம் என்றே ஏதுமிலை –சிலர்
   சொல்லும் சொற்களில் பொருளில்லை
பந்தம்  பாசம் எல்லாமே-பெரும்
    பணமும் வந்தால் சொல்லாமே
அந்தம் ஆகிடும் அறிவீரே-இந்த
    அவனியில் நடப்பதாம் புரிவீரே
சிந்தனை செய்வீர் மானிடரே-இதை
    செவியில் ஏற்றால் ஏனிடரே

பிறந்த உடனே அழுகின்றோம்-இனி
   பிறவா நிலைதர தொழுகின்றோம்
இறந்தால் மண்ணொடு கலக்கின்றோம்-அது
   இயற்கை என்றே உரைக்கின்றோம்
சிறந்தார் இவரெனச் செப்பிடவே-நம்
   செயலைக் கூறியே ஒப்பிடவே
மறைந்தார் அடடா இன்றென்றே-மக்கள்
    மதிக்க மறைதல் நன்றின்றே


வந்தவர் அனைவரும் போவதுவே-இயற்கை
    வகுத்த நிலையென ஆனதுவே
நிந்தனை பேசிட ஏதுமில்லை-இங்கே
    நிலையென இருப்பவர் எவருமில்லை
சந்தையில் கூடும் கூட்டமென-மனித
    சரித்திரம் கலைந்து ஓட்டமென
மந்தையுள் மாடென வாழ்கின்றோம்-தேடி
    மரணம் வரவும் வீழ்கின்றோம்


இதுதான் வாழ்க்கை இன்றுவரை-இதில்
    ஏற்றமும் தாழ்வும் வருமேமுறை
எதுதான் வாழ்வென அறிவோமே-அதில்
    ஏற்புடை தன்னை ஏற்போமே
மதிதான் நல்வழி கண்டிடவும்-நம்
   மனமே அவ்வழி விண்டிடவும்
விதிதான் வலிதென ஆயாதீர்-வரும்
   வினையெனச் சொல்லி ஓயாதீர்

                       புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 1, 2017

இதுவென் பதிவே கணக்கென அறியேன் புதுமலர் போன்றே பூத்திட காத்திட !




இதுவென்  பதிவே  கணக்கென அறியேன்
புதுமலர்  போன்றே  பூத்திட  காத்திட
மதுநிகர்  மறுமொழி தந்தெனை  வாழ்த்திட
நிதியெனத்  தந்தவர்  நீங்களே ஆகும் !

என்னிரு  கரங்களை  என்றும்  கூப்பியே
மன்னிய  உலகில்  மன்னும்  வரையில்
எண்ணியே  தொழுவேன்   இணையில்  உறவுமை
கண்ணின்  மணியெனக்  கருதியே வாழ்வேன்  !

சுயநலம்  கருதா  சொந்தங்கள்  நீரே
பயனெதிர்  பாரா  பண்பினர்  நீரே
நயமது மிக்க நண்பினர்  நீரே
செயல்பட  என்னைச்  செய்தவர்  நீரே !

எண்பதைத் தாண்டியே ஆறென இருப்பதும்
உண்பதும்  உறங்கலும்  உம்மிடை இருப்பதும்
என்புடை தோலென  என்னெடு  இருப்பதும்
அன்புடை  உம்மோர்  ஆதர   வன்றோ !

இனியும்  வாழந்திட  என்வலை  வருவீர்
கனியென  இனித்திடக்  கருத்தினைத் தருவீர்
பனிமலர்  போன்றே  குளுமையும்  தோன்ற
நனிமிகு  நாட்களும்! வாழ்வேன்  நன்றி!நன்றி!
                        
புலவர் சா இராமாநுசம்

Monday, October 30, 2017

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
      அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
       பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
       தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
       வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
      கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
      ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
      அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
      எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே

தலைமுறை பலவும் தாண்டிய போதும்
      தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
      நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
     கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
     மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்

                        புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...