Friday 25 May 2012

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்!


 ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்!
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்!
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின்  வருவது துன்பாகும்
!கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
   கருதி நடப்பின் சேதமிலை

சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
   சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
   பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்!

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்!
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த!
   தேசமும் மதவெறி பித்தரென!
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

Wednesday 23 May 2012

கோடைக் காலம் வந்து துவே !


கோடைக் காலம் வந்து துவே
கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே!
ஆடை முழுதும் நனைந் திடவே
ஆனதே குளித்த தாய் ஆகிடவே!
ஓடை போல நிலமெல் லாம்
உருவம் காண வெடித் தனவே!
வீ(ட்)டை விட்டே வெளி வரவே
விரும்பா நிலையை அனல் தரவே!

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்கி டவே!
உச்சியில் வெய்யில் வந்த தெனில்
உடம்பைத் தீயென தொட்ட தனல்!
மூச்சை இழுத் தால் அக்காற்றும்
மூக்கை சுடவே அனல் மாற்றும்!
சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே!

பத்து மணிக்கே பகல் தன்னில்
பாதம் பட்டால் சுடும் மண்ணில்!
எத்தனை வேகம் காட்டு கின்றார்
எங்கே நிழலெனத் தேடு கின்றார்!
இத்தனை நாள் போல் வீட்டோடு
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு!
பித்தனைப் போலவர் தமக் குள்ளே
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே!

வற்றிய நீர்நிலை இல் லாமே
வளர்ந்த புல்பூண் டெல் லாமே!
பற்றி எரிய முற்ற றாக
பறந்திடக் காற்றில பஞ் சாக!
வெற்றிடம் தன்னில் கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே!
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே!

புலவர் சா இராமாநுசம்

Monday 21 May 2012

பதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்!



காணாது தம்முள்ளே நட்பு கொண்ட-சங்க
   காலத்து பிசிராந்தை சோழன் போல!
காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே
   கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும்!
  

இதயத்தில் வாழ்ந்திடும் திருநா ளாகும்-அது
   என்றுமே மறவாத ஒருநா ளாகும்!
உதயத்து எழுகின்ற கதிரைப் போல-என்
   உள்ளத்தில் உவகையோ எழவும் சால!

தலைநகர் சென்னையில் பதிவர் கூடி-ஏதும்
  தன்னலம் இல்லாத வழியே நாடி!
இலைநிகர் எனச்சொல்ல செய்த பணியே-அதை
   இயம்பிட வேண்டுமா? தங்க அணியே!

குடத்துள்ள விளக்கினைக் எடுத்துச் சென்றே-உயர்
   குன்றின்மேல் வைக்கின்ற செயலைப் போன்றே!
நடத்தினர் அறிமுக நிகழ்வு ஒன்றே-உலக
   நாடுகள் அறிந்துமே புகழ நன்றே!

வயதுக்கு மீறிய அறிவும் பெற்றே-அங்கு
   வந்திட்ட குழந்தையைக் காண லுற்றே!
வியப்புக்கே போனோமே நாங்கள் எல்லாம்-மேலும்
   விளக்கிட தமிழிலும் இல்லை சொல்லாம்!

எண்ணற்ற மரங்களை நாளும் நட்டார்-நம்
    எண்ணத்தில் பதியவே உரையும் இட்டார்!
கண்ணற்ற கயவரே! மரத்தை வெட்டும்-உம்
   கயமைக்கு இனியேனும் முடிவு கட்டும்!

மாப்பிள்ளை கோகுலும் விருது பெற்றார்-அவர்
   மகிழ்விலே கண்ணீரும் தளும்ப லுற்றார்!
மாப்பிள்ளை அழைப்பிதழ் தந்துவி ட்டார்-வந்தோர்
   மனமார அங்கையே வாழ்த்தி விட்டார்!

நிகழ்சிக்கு வித்தாக, சிவக்குமார் நண்பருடன்-அரிய
   நிகழ்ச்சியைத் தொகுத்திட்டார் கேபிள் சங்கர்!
புகழ்ச்சி உரியவரே வந்தோர் எல்லாம்-மேலும்
   போற்றலுக்கே ஆளானார் சங்கர லிங்கம்!

வந்தாரின் வயதில் மூத்தோன் யானே-ஆயின்
   வலைதன்னில் மிகமிக இளையோன் நானே!
தந்தார்கள் பரிசதரும் வாய்பு தானே-இத்
   தரணியில் வாழும்வரை மகிழ நானே!

              புலவர் சா இராமாநுசம்
  
  


  


Related Posts Plugin for WordPress, Blogger...