Saturday, August 15, 2015

பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே



பாருக் குள்ளே நம்நாடே-புகழ்
பாரதம்! உண்டா அதற்கீடே
ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று
ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
போற்றியே புகழ்ந்து மறுநாளே
யாருக்கும் நினைவில் வாராதே-இனி
என்றும் இந்நிலை மறாதே


வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
வந்தே மாதரம் ஊருக்காம்
தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
தன்னல மிக்கோர் ஈண்டுசில
சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
செப்பும் நிலையே ஆனதென
நிந்தனை செய்து என்னபலன்-இந்த
நிலையை மாற்ற எவருமிலன்

வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
வேதனை தீர்ந்தது என்றாலும்
கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
கொடுமை அந்தோ மிகப்பட்டே
தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
தொடர்கதை யாகப் போயிற்றே
எல்லை மீறின் தன்னாலே-நாம்
இழப்போம் அனைத்தும் பின்னாலே

கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
கலப்படம் செய்யவும் சுதந்திரமே
வெள்ளமே  ஊழல் அணைபோட-தூய
விடுதலை நோக்கி நடைபோட
நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
நாளில் வரமே தரவேண்டும்

Thursday, August 13, 2015

நாட்டுக்கு நல்லது செய்திட வேண்டும்-கூடி நாடாளும் மன்றம் செய்யுமா ஈண்டும்!!?


இன்றோடு முடிந்தது பாராளு மன்றம்- நாளும்
இந்நிலை நீடித்தால் நடவாது ஒன்றும்
நன்றாமோ நாட்டுக்கே எண்ணுவீர் நன்றும்-வீணாய்
நட்டமே பலகோடி வரிப்பணம் இன்றும்

நம்பியே மக்களும் ஓட்டினைப் போட்டார்-அவையும்
நடவாது முடங்கிடும் அவலமா கேட்டார்
வெம்பிடும் மக்களின் வேதனைப் போக்கும்!-உடன்
வீம்பினை அனைவரும் விலக்கிட நோக்கும்

ஏட்டிக்குப் போட்டி வேண்டாமே இங்கே-வாடும்
ஏழைக்கு நல்வாழ்வு வருவது எங்கே
நாட்டுக்கு நல்லது செய்திட வேண்டும்-கூடி
நாடாளும் மன்றம் செய்யுமா ஈண்டும்!!?

புலவர் சா இராமாநுசம்

Monday, August 10, 2015

போக்கிடமே ஏதுமில்லா கோழை நாங்கள் –எண்ணி புலம்புவதா ? ஆவனவே செய்வீர் தாங்கள்!


சாக்கடையும் குடிநீரும் கலந்து வருதே-மனம்
சகிக்காத நாற்றமிகத் தொல்லை தருதே!
நீக்கிடவே முடியாத மேயர் ஐயா –உடன்
நேரில் ஆய்ந்து பாருங்கள் பொய்யா மெய்யா?
நோக்கிடுவிர் தொற்றுநோய் பரவும் முன்னே-மக்கள்
நொந்துமனம் வருந்திடவும் செய்வார் பின்னே!
போக்கிடமே ஏதுமில்லா கோழை நாங்கள் –எண்ணி
புலம்புவதா ? ஆவனவே செய்வீர் தாங்கள்!


மழைநீரின் வடிகால்வாய்  நகரில் முற்றும் –வடிவதிலே
மந்தகதி! இன்றும்! பயனில் சற்றும்!
அழையாத விருந்தினராய் கொசுவின் கூட்டம் –பெரும்
அலையலையாய் வந்தெம்மை தினமும் வாட்டும்!
பிழையேதும் செய்யவில்லை ஓட்டே போட்டோம் –உயிர்
பிழைப்பதற்கே யாதுவழி!? ஐயா கேட்டோம்!
கழையாடும் கூத்தாடி ஆட்டம் போன்றே –வாழ்வு
காற்றாடி ஆடுவதைக் காண்பீர் சான்றே!

நாள்தோறும் விலைவாசி நஞ்சாய் ஏற –ஒரு
நாள்போதல் யுகமாக எமக்கு மாற!
ஆள்வோர்க்கும் குறையொன்றும் எட்ட வில்லை-மேயர்
ஐயாவே நீரேனும் தீர்பீர் தொல்லை!
குடிநீரின் குறைதன்னை போக்க வேண்டும்–தீரா
கொசுத்தொல்லை! இல்லாமல் நீக்க யாண்டும்!
விடிவதனை எதிர்பார்த்து நாளும் காத்தேன் –இரவு
விழிமூட இயலாமல் கவிதை யாத்தேன்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...