Saturday, May 23, 2015

துடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத் தொலைத்தவன் இருப்பதா!? கோழையென!?



எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன் –வீணில்
இதயத்தில் சுமையே சேர்க்கின்றேன்!
கண்ணியம் அறவே காணவில்லை-பெற்ற
கடனை மறுக்க நாணவில்லை!
புண்ணியம் பாவம் பார்ப்தெவர்?- பெரும்
பொருளைத் தேடவே முயலாதவர்!
மண்ணிலே பிழைக்கத் தெரியாதவர்-என்றே
மக்கள் நினைப்பதை அறியாதவர்!


குடிப்பதும் பெருமை ஆயிற்றாம் –என்ற
கொடுமை நிலையாய் போயிற்றாம்!
படிப்பதும் விற்பனைப் பொருளாகும்-வசதி
படைத்தவர் இன்றெனில் இருளாகும்!
வெடிப்பது ஏழைகள் நெஞ்சம்தான் –ஏற்ற
விலைதரும் எவர்க்கும் மஞ்சம்தான் !
துடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத்
தொலைத்தவன் இருப்பதா!? கோழையென!?

புலவர் சா இராமாநுசம்

Friday, May 22, 2015

போதுமடா சாமி-நாங்க பொழைக்க வழி காமி!



போதுமடா சாமி-நாங்க
பொழைக்க வழி காமி!
தீது மலிந்து போச்சே-இந்து
தேச மெங்கும் ஆச்சே!
சாதி சண்டை நீங்க-நல்
சமத் துவமே ஒங்க!
பீதி போக நாங்க-நாளும்
பிழைக்க வழி தாங்க!


ஊற்று போல ஊழல்-இங்கே
ஊறி வரும் சூழல்!
மாற்ற வேண்டும் சாமி-உடன்
மாற்ற வாரும் பூமி!
போற்று வோமே வந்தே-நீர்
பதுமை பலவும் தந்தே!
ஆற்றும் உங்கள் பணியே-மேலும்
அழிக்க வேண்டும் பிணியே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 20, 2015

மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா!



மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள்
மரணம் உண்டெனத் தெரிந்தாயா!
இனிதாய் இருப்பதும் இவ்வுலகே-தீரா
இன்னல் தருவதும் இவ்வுலகே!
புனிதா என்றே போற்றுவதும்-பெரும்
பொய்யன் என்று தூற்றுவதும்!
நனிதா! அல்ல! நடைமுறையே –என்றும்
நம்மிடைய உள்ள பெருங்குறையே!


ஏனோ வீணில் அலைகின்றாய் –நாளும்
எதற்கே உள்ளம் குலைகின்றாய்!
தேனாய் இனிப்பதும் சிலநேரம் –கடும்
தேளாய் கொட்டும் சிலநேரம்!
தானாய் அறிவதும் உண்டாமே-செல்லும்
தடமது ஆய்ந்து கொண்டாமே!
போனால் புகழ்வரும் ஒன்றாமே –இதுவே
புரிந்தால் வாழ்வே நன்றாமே!!

புலவர் சா இராமாநுசம்

Monday, May 18, 2015

முள்ளி வாய்க்கால் நினைவுதினம்!


முள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம்
முழுவதும் வாழும் தமிழர்இனம்!
உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த
உறவுகள் தம்மைத் தொழுவாராம்!
கொள்ளி வைக்கவும் ஆளின்றே –அவர்
குடும்பமே அழிந்த நாளின்றே!
சொல்லி ஆற்றாத் துயரன்றோ- போனது
சொல்லிட இயலா உயிரன்றோ!


தேதி இன்று பதினெட்டே –இந்த,
தேதியில் அந்தோ !மதிகெட்டே!
நீதியில் படுகொலை நடந்ததுவே –என்றும்
நீங்காத் துயரொடு கடந்தனவே!
வீதியில் பிணங்கள் சிதறிடவும்-ஈழம்
வேதனைப் பொங்கக் கதறிடவும்!
பீதியில் இன்றுமே! வாழ்கின்றார் –பலமுறைப்
பேசியும் பயனிலை என்கின்றார்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...