Saturday, December 26, 2015

தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எமைவாட்டும்!



பொங்கிய வெள்ள போயிற்றே-கண்ணீர்
பொங்கும் நிலைதான் ஆயிற்றே!
திங்கள் ஒன்றும் ஆகிறதே-இங்கே
தினமும் நெஞ்சம் வேகிறதே!
எங்கள் வாழ்வும் நலமுறுமா-மழை
இழைத்த அழிவும் வளமுறுமா?
தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி,
தையின் குளிரோ எமைவாட்டும்!


புள்ளி விபரம் போடுகின்றார்-வந்து
போவதும் வருவதாய் ஒடுகின்றார்!
அள்ளிப் போடவும் மனமில்லை-ஐந்து
ஆயிரம் அளிப்பதால் பயனில்லை!
கொள்ளி வைக்கவே பயன்படுமே-எம்
குடும்பமே அதிலே எரிபடுமே!
வெள்ளம் வந்தால் வடிந்துவிடும்-துயர
வெள்ளத்தில் ஊரே மடிந்துவிடும்!

யானைப் பசிக்கு எதுவேண்டும்-அரசே
எமக்கு உதவ நி(ம)திவேண்டும்!
ஏனோ உடமைகள் இழந்திட்டோம்-வாழ
ஏதினி வழியின்றி அழிந்திட்டோம்!
விணே எம்மை வாட்டாதீர்-வெறும்
வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!
தேனாய் இனித்திட வாழ்ந்தோமே-எட்டு
திசையும் இருண்டிட வீழ்ந்தோமே!

புலவர் சா இராமாநுசம்

Friday, December 25, 2015

ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால



ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்

புலவர் சா இராமாநுசம்

Thursday, December 24, 2015

முகநூல் பதிவுகள்!




கெடுதலை செய்த மழை ஓய்ந்து விட்டது! இட்ட பயிர் அழிந்து விட்டது என்றாலும் வள்ளுவன் ஒரு குறளில் சொன்ன பாதி முடிந்தது! இனி மறுபாதி நடக்க வேண்டுமல்லவா! நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது ! விவசாயம் செழிக்க என்ன வழி!? உழவன் பாடுபட, வேண்டிய உதவிகளை மத்திய .மாநில அரசுகள் ஆவன உடனே செய்ய வேண்டும் அப்பணி விரைந்து நடந்தால்தான் விலைவாசி விலை குறையும் மக்கள் ஒரளவாது நிம்மதி காண்பர்!

குற்றம் ஏதும் இல்லாதவனாக மக்களுக்கு நன்மை செய்து முறையாக ஆளும் அரசனை அவன் நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகமே சுற்றமாக எண்ணி மகிழ்ந்து பாராட்டும் என்பது வள்ளுவர் வாக்கு!

கெடுதல் வருவதில் இரண்டு வகை ! ஒன்று செய்யக் கூடாத வேலைகளை செய்வதனாலும் வரும்! அடுத்தது செய்ய வேண்டிய செயல்களை உரிய காலத்தில் செய்யாமல் விடுவதாலும் வரும் இன்று சென்னை அழிவுகுக் காரணமே இவைதான் ! ஆக்கிரம்பை தடுக்காததோடு உரிய காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய தவறியது தான்

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 22, 2015

முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்டாரே மத்திய அரசே!



முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்
முடமாகி விட்டாரே மத்திய அரசே
குறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்
குமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே
கறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்
கண்ணீரைத் துடைப்பிரா மத்திய அரசே
நிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்
நீங்கிட உதவுங்கள் மத்திய அரசே


காலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்
காலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே
ஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை
அவசர சிகிச்சைதான் மத்திய அரசே
உயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று
உடைகூட இல்லாது மத்திய அரசே
வயிர்மட்டும் உணவுக்கு மத்திய அரசே-ஏனோ
வைத்தானோ இறைவன் மத்திய அரசே

புலவர் சா இராமாநுசம்

Sunday, December 20, 2015

மாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!



அள்ளிக் கொடுத்தாலும் சரி செய்ய முடியாத பேரழிவு அடைந்துள்ள தமிழகத்திற்கு மத்திய அரசோ கிள்ளிக் கொடுப்பது நியாயமா!???
மாண்பு மிகு முதல்வர் கடிம் எழுதினால் மட்டும் போதுமா?
நேரில் போங்கள் இத்தனை எம்-பிக்களை உடன் அழைத்துக் கொண்டு
பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துங்கள்!

 புலவர்  சா  இரா மாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...