Saturday, July 18, 2015

மதுவே மதுவே மயக்கும் மதுவே –இன்று மக்களை அழிக்கும் கூற்றாம் எதுவே!



மதுவே மதுவே மயக்கும் மதுவே –இன்று
மக்களை அழிக்கும் கூற்றாம் எதுவே!
அதுவே அதுவே டாஸ்மாக் அதுவே-ஐயம்
அணுவும் இல்லை உண்மை இதுவே!

குடியை ஒழிக்கும் கொள்கை ஒன்றே-பலரும்
குறிக்கோள் ஆமென சொல்வார் இன்றே!
விடிவே வருமா! தேர்தல் வருதே –மதுவினை
விலக்கிட சட்டம் மீண்டும் தருமா!

வாக்கினை அளிக்க வரிசையில் நின்றும்-பணம்
வழங்கிய கட்சிக்கு அளித்திடச் சென்றும்!
போக்கினை மக்கள மாற்றினால் போதும்-அவரே
புரிந்து தெளியின், போமே ஏதம்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 16, 2015

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்!



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
ஆன்றோர் பழமொழி என்மனதை!
நாடி வந்திட இக்கவிதை-ஐயா
நவின்றேன் இங்கே காணுமிதை!
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
தேவை அளவே நீர்சேர்த்தே!
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
படையல் இட்டுத் தொழுவாரே!


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
உலகம் ஏத்தி தொழுவாராய்!
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
நன்மை விளையா அதுவரையில்!
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
அகத்தில் அதனைக் கொள்ளுவரே!

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
உலக வாழ்வே முடங்கிவிடும்!
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
வருவாய் ஒன்றும் நிலையன்றோ!
எழவே முடியா நட்டத்தில்-அரசு
எந்திரம் போடும் சட்டத்தில்!
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
அனைவரும் வருகிறார் நகர்தோறும்!

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
இவ்விதம் நாளும் சென்றாலே!
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
எரியுமா நமது வீட்டினிலே!
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
அரசு செய்யுமா சொன்னாலே!
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
தவறின் பஞ்சம் ஈண்டமே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 14, 2015

இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ் இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!



இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ்
இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!
அசைந்தாடும் செடிகொடிகள் மயங்கிப்போக-அவர்
அமைத்திட்ட இசையாலே அமைதியாக!
திசைஎட்டும் கொடிகட்டி பரவபுகழே –காது
தித்திக்க தெவிட்டாது என்றும் திகழ!
வசையேதும் இல்லாது புனிதரவரே-இசை
வரலாற்றில் நிகராக இருப்பதெவரே!


புலவர் சா இராமாநுசம்

Monday, July 13, 2015

ஆதாரம் ஆனது வலையே ஆகும் – எந்தன் ஆயுளை வளர்ப்பதும் உண்மையாகும்!



ஏதேதோ எண்ணங்கள் இரவு முழுதும்-நெஞ்சில்
எழுந்துவர உறக்கமில்லை! விடிய! பொழுதும்!
தீதேதும் இல்லாமல் நாளும் கழிய –இறையைத்
தொழுதபடி எழுந்துவர இருளும் அழிய!
மாதேதும் இல்லாத மனையைப் போன்றே-எந்தன்
மனந்தனில் வெறுமையாம் உணர்வுத் தோன்ற
ஆதாரம் அற்றுப்போய் நிற்கும் மரமாய்-நானும்
ஆனேனோ!? அறியேனே! சொல்ல! தரமாய்!


வாழ்கின்ற நாள்வரையில் தொல்லை யின்றி-காத்து
வருகின்ற மகளுக்கு செய்யும் நன்றி!
வீழ்கின்ற நாள்வரையில் அமைய வேண்டும்-இதுவே
வேண்டுதல்! ஆண்டவ! அறிவாய் ஈண்டும்!
சூழ்கின்ற கவலைகள் விலகிப் போக-காலைச்
சுடர்கண்ட பனியாக முற்றும் ஆக!
ஆதாரம் ஆனது வலையே ஆகும் – எந்தன்
ஆயுளை வளர்ப்பதும் உண்மையாகும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...