Saturday, February 22, 2014

என்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்

காரணம்  எதுவென ஆய்தலோ  மடமை- செய்த
   காரியத்தை பாராட்டி  போற்றலே  கடமை!
தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி
   தோற்காது நிலைத்திட  செய்வோமே  யாண்டும்

ஏன்செய்தார்  என்பதோர் கேள்வி யல்ல –மேலும்
   எவர்செய்தார் என்பதும்   கேள்வி  யல்ல
தான்செய்தேன்  எனச்சொல்ல முதல்வர் பதவி-அவர்
   தக்கபடி  முடிவெடுத்து செய்ய உதவி

மூவரொடு எழுவரையும் காத்தார் நன்றே –அதில்
  முரண்பட்டு  பேசுதற்கு  இல்லை ஒன்றே
ஆவலொடு காத்திருந்த  தமிழர் இனமே –இன்பம்
   அலைபோல பொங்கிட களிக்கும்  மனமே

நன்றிதனை  மறப்பது  நன்றல்ல என்றே –ஐயன்
    நவின்றதை மறவாது அனைவரும் இன்றே
என்றுமே  வாழ்கயென முதல்வரைப்  போற்றுவோம்-ஏதும்
     ஈடில்லா செயலென்றே  நன்றியுரை ஆற்றுவோம்

புலவர்  சா  இராமாநுசம்


Friday, February 21, 2014

பெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ


அன்று , மூவர் உயிர் காக்க தீக்குளித்து தன், உயிர்
தியாகம் செய்த செங்கொடிக்கு அஞ்சலியாக
எழுதிய கவிதை!

பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
பிரிந்து எங்கே போனாயோ
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
வேலூர் சிறையில் நின்றாயா
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
கதறி துயரில் விழுகின்றார்
எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனி
எத்தனை உயிர்கள் மாள்வாரே

வஞ்சம் மட்டுமே உருவாக-மூவர்
வாழ்வைப் பறிக்கும் கருவாக
நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
நீங்கின் மீண்டும் வருமொன்றா
தஞ்சம் அடைந்த பறவைக்கும்-தன்
தசையைத் தந்தவன் தமிழனடா
பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ
பற்றி எரியும் திட்டாதீர்

முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாம்
முடங்கியா விடுவோம் ஆகட்டும்
அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
அடக்கவும் தெரியும் தமிழனுக்கு
திடமாய் முடிவு எடுப்பாராம்-அவர்
தினமும் அறப்போர் தொடுப்பாராம்
விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
விடத்தை அவரே தின்பாரா

இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
இழந்தோம் செங்கொடி வீணாவே
குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
கோழையா நாமே தரைமுட்ட
கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
காக்க தமிழரே உடன்ஒல்லை
துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
தூக்குக் கயிற்றை அறுப்பீரே


மீள் பதிவு!       புலவர்  சா இராமாநுசம்

Thursday, February 20, 2014

தள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத் தண்டனை இரத்தா செய்துள்ளார்!


மக்கள் எழுச்சி கண்டு நீதிமன்றம் எட்டு வாரம்
தூக்குத் தண்டனையைத் தள்ளி வைத்தபோது போராட்டம்
தொய்வின்றி தொடர எழுதியது!

தள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத்
தண்டனை இரத்தா செய்துள்ளார்
உள்ளுவீர் தமிழரே ஓயாதீர்- இன
உணர்வில் அணுவும் தேயாதீர்
கொள்ளியை வைத்தவர் அவரென்றே-மேலும்
கொடுமை செய்வது தவரென்றே
எள்ளியே உலகம் நகைக்கட்டும்-செய்ய
ஏதும் வழியின்றி திகைக்கட்டும்

மக்கள் எழுச்சி கண்டாரே-இன்று
மாநிலம் மாற்றிக் கொண்டாரே
இக்கணம் முதலாய் மேன்மேலும்-ஏதும்
இடையின்றி ஒவ்வொரு நாள்போலும்
திக்கது எட்டும் பரவட்டும்-இனத்
தீயெனும் உணர்வே விரவட்டும்
தக்கது அறவழி போராட்டம்-உயிர்
தருவது அல்லென கூறட்டும்

எட்டு வாரம் எதற்காக-ஆட்சி
இணங்கி வருமா இதற்காக
குட்டுப் பட்டதை மறப்போமா-மேலும்
குட்டுப் படுதல் சிறப்பாமா
ஒட்டும் உறவும் வேண்டாமே-இன
உணர்வது ஒன்றாம் ஈண்டாமே
கொட்டும் முரசே ஒலிக்கட்டும்-வெற்றி
கொண்டதை சங்கே முழங்கட்டும்

முடங்கிட அனைத்து வேலைகளும்-நகரின்
முக்கிய அனைத்து சாலைகளும்
தொடங்கிட ஊர்வல ஆர்பாட்டம்-நாளும்
தொடர்கதை ஆகிட போராட்டம்
திடங்கொள செய்வீர் மறவர்களே-நன்கு
திட்டமே வகுப்பீர் உறவுகளே
அடமிகு அரசும் இறங்கிவரும்-போர்
அறவழி செய்யின் நன்மைதரும்


மீள்பதிவு!             புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, February 19, 2014

நீதி நிலைத்தது! மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது!
உறவுகளே!
நீதி நிலைத்தது! மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது! 2011-இல் மூவரையும் தூக்கிலிட முயன்றபோது தமிழகம் கொந்தளித்தது அது போது , நான் எழுதிய மூன்று கவிதைகளை  இன்று  முதல் இங்கு வெளியிடுகிறேன்!


உயிர்மூன்று ஊசலென கண்முன் ஆட-அதை
உணராது உறக்கத்தில் விழிகள் மூட
மயிர்நீப்பின் உயிர்வாழா. கவரி மானா-அட
மறத்தமிழா சொன்னதெலாம் முற்றும் வீணா
வயிர்நிறைய போதுமென அந்தோ நோக்கே-ஏனோ
வந்ததடா சொந்தமடா அங்கே தூக்கே
கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே-பொங்கும்
கடலாக அலையாகி எதிர்ப்பாய் நீயே

செய்யாத குற்றத்தை செய்தார் என்றே-பழி
செப்பியே சிறைச்சாலை தன்னில் இன்றே
பொய்யாக இருபத்து ஆண்டும் செல்ல-உடன்
போடுவீரே தூக்கெனவே ஆள்வோர் சொல்ல
ஐயாநான் கேட்கின்றேன் இதுநாள் வரையில்-அவர்
அடைபட்டு கிடந்தாரே ஏனாம் சிறையில்
மெய்யாக இருந்தாலே அன்றே அவரை-தூக்கு
மேடையில் ஏற்றினால் கேட்பார் எவரே

வீணாகப் பழிதன்னை ஏற்க வேண்டாம்-அவரை
விடுவிக்க கௌரவம் பார்க்க வேண்டாம்
காணாத காட்சிபல காணல் நேரும்-எதிர்
காலத்தில் இந்தியா உடைந்து சிதறும்
நாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி
நாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்
தூணாக ஒற்றுபட இருந்தோம் நாங்கள்-எம்மை
துரும்பாக நினைத்தீரே நன்றா நீங்கள்

இரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்
இதயமென சொல்லுவதும உம்முள் இன்றா
அரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்
அடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற
கரக்கமலம் குவித்து உமை வேண்டுகின்றோம்-உயிர்
காத்திடுவீர்! கனிவுடனே என்றேமீண்டும்
உரக்ககுரல் கொடுக்கின்றார் தமிழர்! உண்மை-எனில்
ஒற்றுமைக்கு உலைவைப்பார் நீரே! திண்மை

புலவர் சா இராமாநுசம்

மீள் பதிவு

Tuesday, February 18, 2014

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது மனமென்னும் நிலத்திலே போட்ட விதை!  மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது
                    மனமென்னும் நிலத்திலே போட்ட விதை!
    இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல
                  எண்ணினால வந்துடன் கண்ணில் படும்
    புறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்
                  புனைந்தது பத்தோடு தொகையும் எட்டே
    அறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு
                  வழியொற்றி வந்ததாம்  பலரும் பாட

      ஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்
                    உயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்
      வருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை
                  வடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே
      இருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்
                எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
      திருமுறை எந்நாளும் மரபே ஆகும்-இன்றேல்
                தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்

      இலக்கியம் கண்டேபின் இலக்கணம் கண்டார்-பின்
                  எதற்காக அன்னவர் மரபினை விண்டார்
     கலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என
                கருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்
     விளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதனை
                வீணென்று எண்ணிட எவருமே சொல்லார்
      அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
            அழியாமல் காப்பதும் நமக்குள்ள பொறுப்பே

      மழைநாளில் தோன்றிடும்  காளானைப் போல-உடன்
                மறைவதா எண்ணுவீர் கவிதையும்  சால
      விழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்
              வேண்டுகோள் மட்டுமே  மாசில்லை வேறே
      பிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்
              பிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்
     அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
              ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை

                                                புலவர் சா இராமாநுசம்
             மீள் பதிவு

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...