Friday, June 29, 2012

மனித நேயம் இல்லையா மத்திய அரசே சொல்லையா?

மனித நேயம் இல்லையா
      மத்திய  அரசே  சொல்லையா?

தினமேத்  தொல்லைப்  படுகின்றான்
      தேம்பியே  மீனவன்  கெடுகின்றன்
மனமே  இரங்க  வில்லையா
       மனதில்  அரக்கனா சொல்லையா!

சுண்டைக்  காய்போல்  அந்நாடே
    சொன்னால் வெட்கம்  பெருங்கேடே
அண்டையில்  இருந்தேத்  தரும்தொல்லை
    அளவா?  அந்தோ  துயரெல்லை!

கச்சத்  தீவைக்  கொடுத்தீரே
      காரணம்  எதுவோ  ?கெடுத்தீரே
அச்சப்  பட்டே மீனவனும்
       அல்லல்  படுவதைக்  காண்பீரே!

படகொடுப்  பிடித்தே  மீனவரைப்
      பாழும்  சிறையில்  தள்ளுகின்றான்!
இடமிலை  மீனவர்  உயிர்வாழ
     எண்ணமும்  உமக்கிலை  அவர்வாழ!

மாநில  அரசையும்  மதிப்பதில்லை!
    மத்திய  அரசுக்கோ  செவியில்லை!
நாமினி  செய்வதை  ஆய்வோமா?
      நல்லது  நடப்பின்  உய்வோமா?

கடிதம் எழுதினால் போதாதே
    காரியம் அதனால் ஆகாதே!
முடிவது எதுவென எடுப்பீரா
     முடங்கிட மீனவர் விடுப்பீரா?

அலைகடல் தானே அவன்வீடாம்
     அந்தோ! இன்றது சுடுகாடாம்!
நிலைமை அப்படிப் போகுமன்றோ
    நிம்மதி, அமைதி ஏகுமன்றோ?
 
                  புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, June 27, 2012

பதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19!



   பதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19!

வலையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. கவிரயங்கம், கருத்தரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமுள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமைஇடம் : மாணவர் மன்றம், சென்னை.

            தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்.


                                           சா இராமாநுசம்

Monday, June 25, 2012

வலையேற ஒருகவிதை வாராது போகுமந்தோ!


புத்தம் புதுமலரே பூங்கொத்தே உனைப்போன்றே
நித்தம் ஒருகவிதை நினைக்கின்றேன்! எழுதிவிட
சித்தம் கலங்கிவிட சிலநேரம் குழம்பிவிட
எத்தனை முயன்றாலும் இயலாது போகுமந்தோ!

அலைபோல ஓயாது அலைகின்ற உள்ளத்தில்,
விலைபோகாப் பொருளாகி வீணாகும்!பள்ளத்தில்
நிலைதவறி வீழ்கின்ற நிலைதானே! என்நிலையும்     
வலையேற ஒருகவிதை வாரது போகுமந்தோ!

எடுத்த அடிதன்னை எப்படியோ முடித்தாலும்
அடுத்த அடிகாணா! அடிப்பட்டு போகுமனம்
தொடுத்த மாலையது துண்டுபல ஆனதுவே
விடுத்த விடுகதையாய் விடைகாணாப் போகுமந்தோ!

தேன்தேடும் வண்டெனவே திரிகின்ற என்மனமோ
தான்தேடி அலைந்தாலும் தவிப்பேதான் கண்டபலன்
மான்தேடி ஏமாந்த வேடனது நிலையேதான்
நான்தேடி அலைந்திடவும் நாட்கள்பல போகுமந்தோ!

கூடிக் கருமேகம் மின்னலிட்டும் இடிமுழக்கி
ஓடிக் கலைந்தனவே ஒருசொட்டும் பெய்யாமல்
வாடும் பயிர்பச்சை வானநோக்க, என்கவிதை
தேடும்  மனவெளியில் திசையறியா போகுமந்தோ!

இலவே காத்தகிளி என்நிலையும் ஆனதய்யா!
உலவாத் தென்றலென உள்ளம்தான் போனதய்யா
நிலவே காணாத நீள்வானாய் நெஞ்சந்தான்!
பலவே நினைத்தேனோ பாழ்பட்டு போகுமந்தோ!

                    புலவர் சா இராமாநுசம்




இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...