Saturday, October 7, 2017

ஏழுமலை வாழும் இறைவா ! கோவிந்தா! –நானும் எழுது கின்றேன் குறைதீர பாவிந்தா!



ஏழுமலை வாழும் இறைவா ! கோவிந்தா! –நானும்
எழுது கின்றேன் குறைதீர பாவிந்தா!
வாழுகின்ற நாளெல்லாம் போற்றித் தானே-நானும்
வணங்கிடுவேன் உம்பெயரை சாற்றித் தானே
சூழுகின்ற இடர் தன்னை பெருமாளே-வானின்
சுடர்கண்ட பனியாக்கி அருள்வாய் நீயே
பாழுமனம் பட்டதெல்லாம் போதும் போதும்-மேலும்
படுவதற்கு இயலாது துயரம் ஏதும்


புலவர் சா இராமாநுசம்

Thursday, October 5, 2017

கோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்க தயங்காதே!



ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
 உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே!

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொரு நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 4, 2017

தனிமை என்னை வாட்டிடவே-கற்ற தமிழாம் அன்னை மீட்டிடவே!





தனிமை என்னை வாட்டிடவே-கற்ற
   தமிழாம் அன்னை மீட்டிடவே
கனிமை மிக்கோர் கருத்துரையும்-தேனில்
   கலந்த பாலென மனதுறையும்
இனிமை மிகவே எண்ணத்தில்-என்றும்
  இதயம் புகவே வண்ணத்தில்
நனிமிக கவிதைகள் எழுதிடுவேன்-உறவை
  நாளும் பணிந்து தொழுதிடுவேன்

புலவர் சா இராமாநுசம்

Monday, October 2, 2017

அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே !



அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே
  அடிமை விலங்கை அகற்றினார் அன்றே
  திண்மை அகிம்சையாம் அறவழி என்றே
  தேடிக்  கொடுத்தார் விடுதலை ஒன்றே
  உண்மையைத் தனது உயிரெனக் கொண்டே
  உத்தமர் காந்தி செய்தார் தொண்டே
  மண்ணில் பிறந்த மாந்தரில் எவரே
  மாகாத்மா வாக மதித்தது!  இவரே!
 
  நிறவெறி தன்னை நீக்கிட வேண்டி
  நீலத்திரைக் கடல் அலைகளைத் தாண்டி
  அறவழிப் நடந்து ஆப்பிரிக்க நாட்டில்
  அல்லல் பட்டது காண்போம் ஏட்டில்
  தீண்டா மையெனும் தீமையை ஒழிக்க
  தீவிரம் காட்டிட சிலரதைப் பழிக்க
  வேண்டா மையா சமூக கொடுமை
  விட்டது இதுவரை நம்செயல் மடமை
 
  இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
  ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி
  உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
  உள்ளம் நொந்தவர் உறுதியே பூண்டவர்
  எடுத்தார் விரதம் இறுதி வரையில்
  இறந்து வீழ்ந்தார் முடிவெனத் தரையில்
  கொடுத்தனர்  பாவிகள் குண்டாம்  பரிசே
  கொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே
 
  எத்தனை நாட்கள் சிறையில் காந்தி
  இருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி
  புத்தனாய் வாழ்ந்தார் போற்றிட உலகம்
  பதவியை நாடா பண்பினில் திலகம்
  சத்திய சோதனை வாழ்வாய்க் கொண்டே
  சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே
  உத்தம உன்புகழ் உலகினில் வாழ்க!
  உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

                     புலவர்  சா இராமாநுசம்

Sunday, October 1, 2017

இன்னலே முதுமை மறக்க வில்லை



அமைதி இன்றி மனமேதான்-ஏனோ
அல்லல் படுவதோ? தினமேதான்!
சுமைதான் வாழ்க்கை என்றேதான்-நாளும்
சொல்லிட நடப்பதும் இன்றேதான்
எமையார் எவரென கேட்டிடவே-யாரும்
இல்லா துயர்மிக வாட்டிடவே
இமையே மூடினும் உறக்கமில்லை-மூளும்
இன்னலே முதுமை மறக்கவில்லை


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...