Saturday, October 3, 2015

நல்லோரே எண்ணுங்கள் நாட்டின் நடப்புதனை



உறவுகளே! வணக்கம்!
நேற்று முகநூலில் வந்த செய்தி! நீங்களும் படித்திருக்கலாம்! ஒட்டன் சத்திர விவசாயி(அவரும் பதிவர்தான்) தன், தோட்டத்தில் விளைந்த பீட்ருட் கிழங்கை கிலோ மூன்று ரூபாயிக்கே. விற்க வாங்கி ,அதனை வெளிச் சந்தையில்
கிலே முப்பதுக்குமேல் நாற்பது வரைவிற்று வர்த்தகர் இலாபம் அடைகிறார்கள்!
இக் கொள்ளைக்கு யார் கரணம்! உற்பத்தி செய்தவனுக்கோ , வாங்கும்
பொதுமக்களுக்கோ இதனால் பயனுண்டா? விவசாயிஎப்படி வாழமுடியும்! இதனைத் தட்டிக் கேட்கும் அரசோ , கட்சிகளோ இங்கு உண்டா! ஆனால் வருங்காலம்  இதனை உணர்த்தும்
                     இன்று  ஓட்டு  வாங்குவதை மட்டுமே  குறியாகக்  கொண்டு   அனைத்துக்  கட்சிகளும்  போராடுவதும், பதவி, அதிகாரம் பெற  யாரோடு  யார்  சேர்ந்தால்  பயன் பெறலாம் என்று  கணக்குப் போடுவதும்   தானே  நாட்டின்  நடப்பாக உள்ளது
                       பசிப்பிணி மருத்துவன்  என்று  பாரட்டப்  பட்ட  உழவன்  பட்டினியால்
சாவதும் நன்றா?குண்டூசிகூட விலை  வைத்துதான் உற்பத்தி சாலையை விட்டு விற்பனக்கு
வருகிறது! ஆனால் விவசாயி,அவன்  விலை பொருளுக்கு  வியாபரி தானே  விலை  வைக்கிறான்  என்றால் விவசாயி  வாழ்வனா! இந்நிலை  நீடித்தால் எதிர்காலம்  என்ன  ஆகும்
                      நல்லோரே சிந்தியுங்கள்!

            புலவர்  சா  இராமாநுசம்

          

Friday, October 2, 2015

அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண்டும்!

அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும்
அவனியில் பிறக்க வேண்டும்!
கண்ணியம் இல்லாக் கையர்-ஊழல்
கறையது மிகுந்த பொய்யர்!
எண்ணிலார் மிகுந்து விட்டார்-இங்கே
ஏழைகள் துயரப் பட்டார்!
புண்ணிய வந்தே பாரீர்-மக்கள்
புலம்பலை நீக்க வாரீர்!


உத்தம காந்தி நீங்கள் –மீண்டும்
உதித்திட வேண்டும் வேண்டும்!
எத்தர்கள் செயலால் இங்கே –என்றும்
ஏழ்மைக்கும் விடுதலை எங்கே?
சித்தமே கேட்கும் கேள்வி –அன்று
செய்தீரே தியாக வேள்வி!
புத்தரே காந்தி நீவீர்-உடன்
பூமியில் பிறந்து காவீர்!

தன்னலம் இல்லாத் தொண்டே –நீர்
தந்ததை மக்கள் கண்டே!
பொன்னென மக்கள் போற்றி –அறப்
போரினை உம்மொடு ஆற்றி,
கண்ணெணப் பெற்ற விடுதலை –இன்றே
கயவரால் உற்ற கெடுதலை
எண்ணியே நீக்க வாரீர் !–மக்கள்
இன்னலைப் போக்க வாரீர்!

புலவர் சா இராமாநுசம்
   ( மீள் பதிவு)

Wednesday, September 30, 2015

கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர்


கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை
கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர்
ஏட்டில் வாராச் செய்திகளும் முந்தித் தருவார்–அன்னார்
இணையத்தில் நாள்தோறும் பதிவில் வருவார்!
நாட்டை நாளும் நல்வழியில் நடத்திச் செல்லவே- உரிய
நற்கருத்தை அழுத்தமாக நெஞ்சில் கொள்ளவே
ஊட்டமான சத்துணவாம் பதிவர் ஆகுமே –என்றே
உணர்ந்தாலே போதுமுடன் தீமை போகுமே!


கைமாறு கருதாமல் தெண்டு செய்யவே–நேரம்
கருதால் கடமையென உலகம் உய்யவே
பெய்மாரி போன்றுமவர் பணியே ஆற்றுவார்-தம்மை
போற்றினாலும் தூற்றினாலும் கருத்தை சாற்றுவார்
பைமாரி ஊடகங்கள் கொடுக்கும் செய்தியே –கண்டு
பரிதாபம் மக்களவர் குழப்பம் எய்தவே
உய்மாறு உண்மைகள் உரைக்கும் இவரே –ஐயா
உலகத்தில் சொல்லுங்கள் உண்டா? எவரே!

கூடுங்கள் ! பதிவர்களே அனைவருமே ஒன்றாய் –நம்மில்
குறையிருப்பின் ஆய்ந்ததனை நீக்கிடவே நன்றாய்
தேடுங்கள் பதிவருக்கோர் பாது காப்பே –உடன்
தேவையது சங்கத்தின் பதிவுதான்! இப்போ
நாடுங்கள் ஏற்றவழி தன்னை நன்றே-கால்கோள்
நடக்கட்டும்! அமையட்டும் திருநாளாம் அன்றே
போடுங்கள் உண்மைகளை உலகறிய என்றும் –நன்கு
புடமிட்ட பென்னெனவே வாழ்த்தட்டும் நன்றும்!

தங்கமது செய்யாத நன்மைகளைக் கூட –ஏதும்
தடையின்றி தேடிவந்து நம்மிடமே நாட
சங்கமென ஒன்றிருந்தால் ஆகும் என்றே-முன்னே
சான்றோர்கள் சாற்றியதை அறிவோம் நன்றே
பொங்கிவரும் அலைபோல புதுக்கோட்டை வந்தே –முதிய
புலவனிவன் வேண்டுகோளை நிறைவேற்றி தந்தே
எங்குமுள நம்தமிழர் வாழ்த்தவழி காண்போம் –வலிமை
ஏற்றமுற சங்கமென உறுதிமொழிப் பூண்போம்

புலவர் சா இராமாநுசம்

Monday, September 28, 2015

நீரளவு இல்லாத அன்பைக் காட்ட நித்தம்நான் முயல்வேனே பதிவை தீட்ட!



ஓரளவு நலமுற்றேன் என்ற போதும்
ஓய்வெடுக்க இயலாது மனதில் மோதும்
பேரளவு இன்றெனினும் எழுது என்றே
பின்னிருந்து ஆசையது உந்த இன்றே
சீரளவு குறைந்ததொரு கவிதை தன்னை
செப்பிடவே உறவுகளே படித்து என்னை
நீரளவு இல்லாத அன்பைக் காட்ட
நித்தம்நான் முயல்வேனே பதிவை தீட்ட!
வணக்கம்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...