Friday, October 25, 2013

எங்கேயா அரசாங்கம்? இருக்கு தென்றே –பலர் எண்ணுகின்ற நிலைதானே நாட்டி லின்றே!





எங்கேயா அரசாங்கம்?  இருக்கு  தென்றே –பலர்
    எண்ணுகின்ற நிலைதானே நாட்டி  லின்றே!
வெங்காயம் விலைகூட விண்ணை முட்டும்-ஏழை
    வேதனையைச் சொல்லியழ கண்ணீர் சொட்டும்!
தங்காயம் வாடாமல் காரில்  போகும் – கட்சித்
     தலைவர்களே! எண்ணுமிது!  வீணா ! ஆகும்!
பொங்காத மக்களையும் பொங்கச் சொல்லும் –எனில்
     புரிந்துடனே தீர்க்கவழி தன்னை  உள்ளும்!
    
 எருமாட்டின்  மீதுமழைப் பெய்தால்  போல- ஏன்
     இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!
திருநாட்டில் யாராலே இந்தப்  பஞ்சம்-பதுக்கல்
     திருடனுக்கே அரசேதான் கொடுக்கும்  தஞ்சம்!
வருநாளில் எப்பொருளும்  வாங்க  இயலா-ஏழை
     வாடுகின்றான்! தேடுகின்றான் !வழியும் புயால
உருவானால் என்செய்வீர்! போவீர் எங்கே – இதை
     உணராது இருப்பீரேல் நடக்கும்  இங்கே!

அளவின்றி  விலைவாசி  உயர நாளும்- ஆட்சி
    அதிகாரம் சுயநலமே  குறியாய்  ஆளும்
வளமான வாதிகளாய்  வலமே வருவீர்- மக்கள்
     வாய்மூடி யிருந்தாலும் பாடம் பெறுவீர்!
களமாகும் வருகின்ற தேர்தல் காட்டும்-  உடன்
     கைகொடுக்க  ஏற்றதொரு திட்டம் தீட்டும்!
உளமறிய உண்மையிது! உணர்தல்  நன்றே!-ஏதோ
      உரைத்திட்டேன் வேதனையை நானும்  இன்றே!

                            புலவர்  சா இராமாநுசம்
    
    

Wednesday, October 23, 2013

முகநூல் பதிவுகள்





  நாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும். அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும்
பாதையைத்தான் காட்டுமே தவிர அது நம்மோடு வராது
நாம் தான் நம்முடைய இடத்திற்கு போக வேண்டும் அது போலத்தான் நம் வாழ்கையிலும் பெரியோர்கள் வழிகாட்டியாகத்தான் இருப்பார்கள்! நாம்தான் எச்செயலையும் முயன்று முடிக்க வேண்டும்!

கல்லை மடியில் கட்டிக் கொண்டு கிணற்றில் வீழ்ந்தான் ஒருவன்! அவன் சாகத் துணிந்தவன்! ஆனால் கல் தடுக்கி
கிணற்றில் வீழ்ந்தான் ஒருவன்! இரண்டும் ஒன்றா!? இல்லையே! வீழ்ந்தான் என்ற செயல் வேண்டுமானால்
ஒன்றாக இருக்கலாம்! இப்படித் தான் வாழ்வில் நாம் மேற்
கொள்ளும் சில செயலும் அமைந்து விடுகின்றன!

கண்ணுக்குத் தெரியாத, தூரத்தில் புகை வந்தால் , அங்கே ஏதோ நெருப்பு , என்று சொன்னால்! நீ போய் பார்த்தாயா என்றா கேட்க முடியும்? ஒன்றை கொண்டு இன்னொன்றை
யூகிப்பது தானே புத்திசாலித்தனம்! ஏனோ, தெரியவில்லை
ஊழல் அரசியல் வாதிகளிடம் சிக்கி, இதை மறந்து ஓட்டுப் போடுகிறோம்!

அழகு  என்பது  எதில்  இருக்கிறது ! பார்க்கும் பொருளிலா  ! பார்க்கும்    மனதிலா !  கடைக்குப் போகிறோம் பல வண்ண  துணிகளைப் பார்க்கிறோம்
 சிலவற்றை ஒதுக்கி  விட்டு நம்  மனதிற்கு, இது அழகுயென பிடித்ததை எடுக்கிறோம்!  பக்கத்தில் உள்ள  ஒருவன்  நாம் ஒதுக்கித் தள்ளியதை தனக்கென  எடுக்கிறான் ! அவனுக்கு , அது பிடித்திருக்கிறது! இப்பொழுது
சொல்லுங்கள் ! அழகு , எங்கே இருக்கிறது !!?


                           புலவர் சா  இராமாநுசம்

Tuesday, October 22, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினைந்து-ஈங்கிள்பர்க்



                   ஈங்கிள்பர்க் (10-8-2013)     

 கூக்கு கடிகாரத் கண்டுவிட்ட  தொழிற் சாலையை  விட்டு  எங்கள்
பயணம்  சுவிட்சர்லந்தின்   மிகப் பெரிய நகரமாகவும் அதன்
பொருளாதார மைய மாகவும்  திகழும் ஜீரிச்  என்னும்  நகரை
நோக்கி  தொடங்கியது

        வழியில்  நாங்கள் கண்ட இயற்கைக் காட்சிகள், அழகிய ஏரிகள்
ஐரோப்பாவின்  மிகப்  பெரிய நீர்வீழ்ச்சி ஆகிய வற்றை கண்டு இரசித்தோம்
ஜீரிச்   நகரை அடைந்ததும்  வண்டியில் சென்ற வாறே  பெரிய கடிகார முகத்  தோற்றம் கொண்ட  புனித பீட்டர் தேவாலயம், இன்னும் நகரின்
சில இடங்களையும் கண்டுவிட்டு ஈங்கிள்பர்க்  என்னும்  இடத்தில் அமைந்திருந்த அழகிய  விடுதிக்குச் சென்றோம்  அது பெரிய
மலைமேல் அமைந்திருந்த மிகப் பெரிய  விடுதியாகும் ! அதற்குச் செல்ல
 நூழைவு  வாயிலை  மலையை  குடைந்து  குகைபோல (500அடிக்குமேல்)
அமைத்து  அதற்கும் மேலே லிப்டு மூலம் விடுதிக்குச் செல்லவேண்டும்
இது, இதுவரை நாங்கள் காணாத காட்சி!

           இவை அனைத்தையும் படங்களாக  கீழே காணலாம்



















  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...